சந்திக்க மாட்டாயா...
கோவை மாவட்டம், கிணத்துக்கடவு, அரசு உயர்நிலைப் பள்ளியில், 1961ல், எஸ்.எஸ்.எல்.சி., படித்த போது விஞ்ஞான ஆசிரியராக இருந்தார் ஆறுமுகம்; கறுத்த உருவம்; வெளுத்த பற்கள்; சுருட்டை முடி; அளவான உடற்கட்டில் எப்போதும் சிரித்த முகத்துடன் காட்சி தருவார்.அன்று, அரையாண்டு தேர்வு விடைத்தாள்களை வினியோகித்துக் கொண்டிருந்தார். கடைசியாக என்னிடம், 'காலாண்டு தேர்வில் எத்தனை மதிப்பெண் வாங்கினாய்...' என்றார்.'சார்... நுாற்றுக்கு பனிரெண்டு...' என்றேன்.'நன்று... இந்த முறை நல்ல முன்னேற்றம்; 17 மதிப்பெண்...' என்றபடி கொடுத்தார். அதிர்ச்சி கலந்த பயத்துடன், கண்களில் நீர் பெருக அவர் முகத்தை நோக்கினேன்.'மற்ற பாடங்களில் எல்லாம், 70, 80 என வாங்குகிறாயே... என் பாடத்தில் மட்டும் ஏன் இப்படி... எல்லாருக்கும் ஒரே மாதிரி தாண்டா சொல்லி தர்றேன்...' என, பரிதாபமாக கேட்டார். பின், தனியாக அழைத்து, 'வகுப்புகள் முடிந்ததும், நேராக என் அறைக்கு வா... முக்கிய பாடப்பகுதிகளை விளக்கி, சிறப்பு வகுப்பு எடுக்கிறேன்...' என்றார். நெகிழ்வுடன் ஒப்புக் கொண்டு தவறாமல் சென்றேன்.கடும் முயற்சி எடுத்து சொல்லி கொடுத்தார்; தேனீரும், பிஸ்கட்டும் வாங்கி தந்து உற்சாகப்படுத்தினார். பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றேன்.நன்றி சொல்ல அவர் அறைக்கு ஓடினேன். விடுமுறையில் சொந்த ஊருக்கு சென்று விட்டார். மதிப்பெண் பட்டியலை வாங்கியதும் தேடினேன். வேறு ஊருக்கு மாறுதலில் சென்றுவிட்டதாக அறிந்தேன். எவ்வளவு முயன்றும் அந்த ஆசிரியப் பெருமகனை சந்திக்க முடியவில்லை.தற்போது என் வயது, 74; விமானப் படையில் பணி புரிந்து ஓய்வு பெற்றேன். வாழ்க்கையின், முதல் படியில் ஏற்றிய, அந்த ஆசிரியர் பாதங்களில் மானசீகமாக பணிகிறேன். - ஆர்.குமாரசாமி, கோவை.தொடர்புக்கு: 95665 91640