உள்ளூர் செய்திகள்

பல்லேலக்கா பாளையத்தில் காக்காக் கூட்டம் மல்லாக்கப் பறக்கிறது!

கருத்தரங்க அமர்வுகள் முடிந்ததுமே, காக்கா மாநாட்டின் அடுத்த அமர் வான பட்டைச் சாராயக் கலை நிகழ்ச்சி. அரங்கமாக இருந்த பந்தல் பகுதியை, அடுத்து வரவிருக்கும் கலை நிகழ்ச்சியான கெடா விருந்துக்குத் தக்கபடி மாற்றி அமைக்க வேண்டி இருந்த தால், ஆலைச் சாலைக்குப் பின் பக்கமுள்ள மாமரங் களடியே, சாராய வைப வத்துக்கு ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது.பட்டைச் சாராய மகிமை கள் பற்றி புதியவர்களுக்குத் தெரியாதென்பதால், பல்லேலக்கா ஓர் அறிமுகச் சிற்றுரை ஆற்றினான்...''பட்டை வடிசல் நம்ம பெண்ணியக் கவிஞிகளோட கவிதைகளாட்ட செம காட் டமா இருக்குமுங் பங்காளி. விஸ்கி, பிராந்தியாட்ட லேசுப்பட்ட காரியம்ன்னு நெனைச்சுக்காதீங். பளக்கமில்லாதவீக ராவாக் குடிக்கவே முடியாது. ஒண்ணுக்கு எட்டு, ஒண்ணுக்குப் பத்துங்கற விகிதாச்சாரத்துல தண்ணி கலக்கோணும். காக் கௌõசுல பாதி, அரைக்கா அளவு வடிசல் ஊத்தீட்டு, கௌõசு நெறக்கா தண்ணி ஊத்தீட்டா, செரியா இருக்கும்; இல்லாட்டி ஓமட்டீரும். ஜின்னு, ஒட்காவாட்டம் இதுலயும் கனி (எலுமிச்சை) ரெண்டு, மூணு சொட்டு புளிஞ்சுட்டுட்டா, வாசமும் தெரியாது; டேஸ்ட்டும் நல்லா இருக்கும். மொதல்ல அப்புடிக் குடிச்சுப் பாத்துட்டு, காட்டம் பத்துலீங்கறவுங்க மட்லும் வடிசலச் சேத்தி தண்ணியக் கொறைச்சுக்குங்.''சிற்றுரை முடிந்ததும் சிங்கடிக் காக்காய்கள் விநியோகத்தைத் துவக்கின. மேஜை, பெஞ்சுகளில் வரிசையாக ப்ளாஸ்ட்டிக் டம்ளர் சரம், வடிசல் கேன், தண்ணீர் அண்டா, எலுமிச்சைத் துண்டுகள், கமுகு, மட்டைத் தட்டம், கிடா வறுவல், தோட்டத்தில் விளைந்த வெள்ளரி, ஹைப்ரீட் தக்காளி, பல்லாரி நறுக்குகள், உப்பு - மிளகாய்ப் பொடி தூவிய மாங்காய்த் துண்டங்கள் ஆகியவை வைக்கப்பட்டிருக்க, குடிகாரக் குப்பன்கள் பபே சிஸ்ட்டத்தில் பட்டை வடிசல் பெற்று, நீர் விளாவி, எலுமிச்சை பிழிந்து, கமுகுத் தட்டத்தில் கறி வறுவல், காய்கறிக் கலவை, மாங்காய்த் துண்டங்கள் வாங்கி, ஆங்காங்கே நின்று கொண்டும், சவுரியமாக அமர்ந்து கொண்டும், 'சியர்ஸ்' முட்ட வைத்துக் கொண்டனர்.வளர்ப்புப் பிராணி பின் தொடர, அவர்களூடே புகுந்து பராக்குப் பார்த்துக் கொண்டிருந்த அர்த்தநாரீஸ்வரி, 'இங்க வந்திருக்கறவய்ங்க எல்லாருமே நெம்ப நல்லவய்ங்ய...' என, தனக்குத் தானே பேசி, 'அய்ய்... அங்க பாரு கொரங்கு தூறியாடுது...' எனக் குதூகலமாகி, 'நான் கொரங்கு பாக்கப் போறேன்...' என, தனக்குத் தானே அறிவித்து, தூரத்து மரங்களில் தலைகீழாகத் தம் வாலிலேயே தொங்கித் தூறியாடும் டார்வின் சித்தாந்தங்களை நோக்கி நகர்ந்தாள்.பாடி கார்டாகப் பின் தொடர்ந்து கொண்டிருந்த வளர்ப்புப் பிராணி, 'வேண்டாம் மகீ... கொரங்கு புடிச்சுட்டுப் போயிரும்...' எனப் பூச்சாண்டி காட்டியதில் சற்று பயந்து தருகியவள், 'ஏங்... கிஸ்க்கு நக்குடி கொய்யாப் பளம்; கிண்டு மந்தரம் செவ்வாக் கௌம! நீ சும்மானாச்சிக்குத் தான சொல்ற? நானொண்ணும் பயப்பட மாட்டனே! கொரங்குல்லாம் நெம்ப நல்லவய்ங்ய...' என்றபடி முன்னேறினாள்.கூட்டத்தார் தத்தமது கடமையில் கண்ணும் கருத்துமாக, கையும் வாயுமாக இருந்ததால், கண்டு களித்திருக்க வேண்டிய இந்த ஓரங்கக் காட்சியைத் தவற விட்டு விட்டனர். பட்டைச் சாராயம் என்ற கிடைத்தற்கரிய தேவாம்ருதம் கிடைத்திருக்கும் போது, இந்த ஒரு பிரிக்கேசை யார் பொருட்படுத்துவர்? ஒரே இழுப்பில் டம்டளரை காலியாக்கி, அடுத்த சுற்றுக்குப் போவதும், வெச்சு, வெச்சுக் குடிப்பதுமாக கூட்டம் ரசித்து, ருசித்துக் கொண்டிருந்தது.அம்பேத்கர் அடிமைக்குப் பெருத்த சந்தேகம். ''ஏன் பல்லேலக்கா... இது, கள்ளச் சாராயம் தானே... இதைக் குடிச்சு, 27 பேருக்கு கண் பார்வை போயிருச்சு, 13 பேர் பலின்னெல்லாம் பேப்பர்ல வருதே...'' என்று டம்ளரும் கையுமாக தர்க்கம் புரிந்து கொண்டிருந்தார்.''அது வெசச் சாராயமுங் பங்காளி... பேட்ரைக் கட்டை, பல்லி வாலு, சுண்ணாம்புக் கல்லு, பாம்புப் பல்லு, யூரியான்னு கண்ட கருமாந்தரத்தை எல்லாம் போட்டு, உடனடியாக்க காச்சற ஸ்ப்ரிட்டு. அதையக் குடிச்சா கொடலு குண்டாமண்டியெல்லாம் வெந்து, கண்ணும், உசுரும் போறது மட்லுமில்லீங்; கல்யாணக் கருவியே லிப்பேரு ஆயிரும்; இது, அசல் பட்டைச் சரக்குங். சட்டப்படி கள்ளச் சாராயம்னாலும், சாஸ்தரப்படி சோம பானம், சுரா பானமுங்,'' என்றவன், அதன் செய்முறையையும் விவரித்தான்...''ஒரு பெரிய மொடாவில் வெள்ளை வேலம் பட்டை, கரும்புச் சர்க்கரை ஆகியவற்றுடன் ஆப்பிள், ஆரஞ்சு, அன்னாசி, திராட்சை, மா, பலா, வாழை முதற்கொண்டு கள்ளிப்பழம், கழுதை விட்டாம் பழம் வரை கைக்குக் கிடைக்கிற பழ வகைகள் அனைத்தையும் அவுசேகமாட்டம் பிசைந்து போட்டு, மொடா நிறைய நீரூற்றிக் கொள்ள வேண்டும். பிறகு, அதன் வாப்பாடை துணியில் கட்டி மூடி, மண்ணில் குழி தோண்டிப் புதைத்துவிட வேண்டும். வேலம் பட்டையும், பழங்களும் சேர்ந்து நீரில் ஊறி வேதிவினை புரியும். ஊறல் என்பது இதுதான்.''வாரம் பத்து நாக்கிருமிச்சு இந்த ஊறலை எடுத்து வடிசல் காய்ச்சப்படும். வாப்பாட்டுத் துணியை நீக்கி, கல் அடுப்பில் ஊறல் மொடாவை வைத்து, அதற்கு மேல் அளவில் சற்று சிறிய காலி மொடா, அதற்கு மேல் இன்னும் சற்று சிறிய பானை, அதற்கு மேல் இன்னும் சிறியது என்று கரகாட்டக்காரிக தலையில் வைத்து சாகசம் பண்ணுவது போல அடுக்கி வைத்து, உச்சிப் பானையை மூடி, அடி மொடாவின் ஊறலைச் சூடேற்றிக் கொண்டேயிருப்பர். ஊறல் கொதித்து நீராவியாகி, மேல் மொடாவைச் சூடேற்றி, அதனுள் நீர்த் திவலைகளாக வடிந்து சேகரமாகும். வடிசல் எனப்படுவது இதுதான். தொடர்ந்து தீ முழக்கிக் கொண்டேயிருப்பதில் இந்த வடிசலும் கொதித்து ஆவியாகி, அடுத்த பானையில் மேல் வடிசல் சேகரமாகும். இப்படியே சென்று, சென்று, உச்சிப் பானையில் சேகரமாவது தான் முதல் வடிசல்.''வடிசல்களிலேயே ஆகச் சிறப்பானது இந்த முதல் வடிசல் தான். அளவில் குறைவாகவும், ஆனால் மிக, மிகக் காட்டமாகவும் உள்ள அதை சாராயம் காய்ச்சுபவர்கள் பொதுவாக விற்பதில்லை; தங்களின் சொந்த உபயோகத்துக்கென்றே வைத்துக் கொள்வர். மிகுந்த மருத்துவக் குணமுடைய அது கபம், காசம் போன்ற வியாதிகளுக்கு சாலச் சிறந்தது. ஒரு டம்ளர் முதல் வடிசலில் தண்ணீர் கலக்காமல் மூன்று, நாலு சொட்டு எலுமிச்சையை மட்டும் பிழிந்துவிட்டு, மூக்கைப் பொத்தியபடி ஒரே இழுப்பில் கஷாயம் மாதிரி குடித்து விட்டால், நெஞ்சு சளியை ஆணிவேர், அக்குவேரோடு பிடுங்கிப் போட்டுவிட்டு கபம், காசமெல்லாம் சிட்டுக் குருவியாட்டம் பறந்தோடி விடும்.''ஆனாட்டி அதையக் குடிக்கறது நெம்ப கசட்டமுங் பங்காளி! தாங்க முடியாத ஒடம்பா இருந்தா ரத்த வாந்தியே வந்துருமுங். ரெஜினா கவிதையாட்ட டப்புள் ஹாட்டு, முப்பிள் ஹார்டுக்கோரு!'' என, அம்பேத்கர் அடிமையிடம் சொல்லி முடித்தான்.அதே வேளையில், இவர்களின் பக்கத்திலேயே இணைக் காக்கா சோழீஸ்வரனும், உதவிக் காக்கா லெனின் பாலாஜியும் முப்பெரும் தேவியரை வடிசல் டம்ளரும், தீனித் தட்டங்களுமாக உபசரிக்க, ''நான் குடிக்கறதில்ல,'' என வருத்தம் தெரிவித்து, முக்காடை இழுத்துப் போர்த்திக் கொண்டிருந்தாள் தில்ஷாத் பேகம். ''நான் பீர் மட்டும் தான்,'' என இந்திராணியும் ஒதுக்கிவிட்டிருந்தாள். ரெஜினா விடம் இருவருமே டம்ளர்களை நீட்ட, ''எனக்கு இதில்ல. இப்ப பண்ணை சொன்னாரே... என்னோட கவிதைகள் எந்த மாதிரி இருக்குதுன்னு கம்பேர் பண்ணி எப்பவும் சொல்லுவாரே... அந்த மொதல் வடிசல் - அத தர்றதா சொல்லியிருக்காரு; அது வேணும் எனக்கு,'' என்றாள்.பல்லேலக்கா கட்டளையிட, களத்து வீட்டின் ஓய்வறையில் அவன் தனியாக எடுத்து வைத்திருந்த முதல் வடிசல், அரை பாட்டில் வந்து சேர்ந்தது. ''நெம்ப நிதா இருக்குங் ரெஜி... தண்ணி நெறக்கா சேத்திக்குங்,'' என்று இவனும், மற்ற காக்காய்களும் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும், அவள் கேட் கவே இல்லை.''ராவாக் குடிச்சு, இது, என்னோட கவிதையளவுக்கு இருக்குதாங்கறத நான் டெஸ்ட் பண்ணியே ஆகணும்,'' என்று வீம்பு பிடித்து, எலுமிச்சை கூடப் பிழியாமல், அப்படியே பாட்டில் மூடியைத் திறந்து, கடகடவென அண்ணாக்க விட்டடித்தாள்.ஆண்கள் கூட்டம் அசந்து போய் விட்டது.வேறு யாராவதாக இருந்தால், மறு நொடியிலேயே கொடலு, குண்டாமண்டியெல்லாம் வாய் வழியாக வந்திருக்கும்; ஆனால், ரெஜினா அசராமல் நின்று, காலி பாட்டிலை வீசியெறித்தாள். ஏப்பமோ, எதுக்களிப்போ வந்ததை அடக்கி, லெனின் பாலாஜி நீட்டிய தட்டிலிருந்து, கிடா வறுவல் எலும்புகளை எடுத்து நொறுக்கி, ''கிட்னி இல்லையா மச்சான்?'' என்று கண் சிவக்கக் கேட்டாள்.பத்தே நிமிடத்தில் முதல் வடிசல் வீரியம், சீன்சு அம்முணியின் மண்டைக்கேறி விட்டது. கால்கள் துவள மிதந்தவள், ''என் கவிதையளவுக்கு இருக்குதோ இல்லையோ, மொதல் வடிசல் ஜிவுஜிவுன்னுதான் இருக்குது பண்ணை,'' என்றபடி பல்லேலக்காவின் தோளில் கையைப் போட்டு சேர்த்தணைத்துக் கொண்டாள். அந்தத் தொடுகையிலும், சேர்த்தணைப்பிலும் அவனது தடுமாறாத படிக்கு என்ற சாக்கில் இடக்கரத்தால் அவளது இடுப்பைச் சுற்றி வளைத்துக் கொண்டான்.அதற்குள், இரண்டு சுற்று முடித்து விட்டிருந்த சோழீஸ்வரனுக்கு, ஊடுருவல் உள்ளாடைக்காரி கவர்ச்சிக் கன்னியாகத் தெரிந்தாளோ, இல்லை, நமக்கு வாச்சது இவ்வளவு தான் என்று மனசைத் தேற்றிக் கொண்டானோ தெரியவில்லை; ''ஏனுங் இந்திராணி... ரெஜினா பாருங் ஆம்பளைகளே சாமானியமா அடிக்க முடியாத மொதல் வடிசல, ராவா - அதுவும் ஆப் பாட்டல் அப்புடியே அடிச்சுப் போட்டுது. நீங்க என்னுமோ அடி வடிசல்ல தண்ணியூத்திக் கூட அடிக்க மாட்டீங்கறீங்கொ. அப்பறம் நீங்கெல்லாம் என்ன பெரிய பெண்ணியவாதி?'' என்று ஏத்திவிட்டு, அழகு பார்த்துக் கொண்டிருந்தான். இதற்கு மேலும் பிலுக்கிக் கொண்டிருந்தால், தன் தன்மானத்துக்குப் பங்கம் வந்துவிடுமென்று அவளும், அவன் நீட்டிய டம்ளரை வாங்கி மடக்கென்று கவிழ்த்துக் கொண்டு, கிறக்கமாக நவுண்டைக் கடித்தாள்.இந்தக் காட்சிகளைக் காவிய சோகத்தோடு பார்த்துக் கொண்டிருந்த முக்காடு பேகத்திடம், ''எளநியாச்சு குடீங் தில்லு... மந்தரம் ஓதாத்த கறிய அக்கட்டால எடுத்து வெச்சுட்டு குஸ்காவன்னாலும் சாப்பிடுங் தில்லு,'' என்று பரிந்து உபசரித்துக் கொண்டிருந்தான் லெனின் பாலாஜி. போகிற கோப்பைப் பார்த்தால், முக்காடுக்கு மூன்றாவது தலாக்கும் ஆகிவிடும் போலத் தெரிந்தது.''நானு கொரங்கு தூறியாடறதப் பாத்தனே... கொரங்கு, குட்டிக்கு பேன் பாக்கறதப் பாத்தனே...'' என்று பெருமிதத்தோடு சொல்லிக் கொண்டே வந்த ஒரு பிரியாள், முப்பெரும் தேவியர்களைப் பார்த்து டென்சனாகி, 'இவிய்ங்கெல்லாம் நெம்ப மோசம்... ஆய்ப் புள்ளைங்க! நான் மதுரைக்கே ரிட்டன்...' என தனக்குத் தானே அறிவித்துவிட்டு, மாநாட்டுப் பந்தலருகே நிறுத்தியிருக்கும் காரை நோக்கி விடுவிடுவென நடந்தாள். 'பந்தி ரெடி... பிரியாணியாச்சும் சாப்பிட்டுப் போயர்லாம் மகீ! ப்ளீஸ், ப்ளீஸ்...' எனக் கெஞ்சியபடி வளர்ப்புப் பிராணி மோப்பம் பிடித்துக் கொண்டே பின்னால் குண்டுறு, குண்டுறுவென ஓடியது.'சில்ல்ல்... லென்று பூ ஊ ஊ ...த்தசிறுநெருஞ்சிக் காõ ஆஆ... ட்டினிலே ஏஏ...நில்ல்ல்... லென்று கூ ஊ ஊ...றிநிறுத்த்தி வழி போõõ... ஓனாளேஏஏ...'எங்கிருந்து தேவ கானம் என்று ஆங்காங்கே இருந்தவர்கள் திரும்பி, திரும்பிப் பார்க்க, மா நிழலில் ரசிகர் வட்டத்தினிடையே சம்பிரமமாக சம்மணம் போட்டு, ராக ஆலாபனையைக் காற்றில் வரைந்தபடி, குறுந்தாடி ஒல்லிப்பிச்சான், பதிமலை யான் பண்டாரமாட்டம் கள்ளக் குரலெடுத்துக் கொண்டிருந்தான்.''அவருதானே எனக்கு கோஷம் போட்டவரு? யாரு அவரு?'' என விசாரித்துக் கொண்டு ரெஜினா, பல்லேலக்காவின் தோள் மீது போட்ட கையை எடுத்து, இடுப்பணைத்திருக்கும் அவனது பிடியையும் விலக்கி, பாடல் பகுதியை நோக்கித் தள்ளாடிச் சென்றாள். தொகையறா முடிந்து செந்தமிழ் தேன்மொழியாள் எனப் பல்லவி துவங்கவும் தானாகவே ஆட்டம் வந்தது. ரசிகர் வட்டத்துக்குள் மையமாக நின்று இடுப்பை வெட்டி, கைகளில் அபிநயம் பிடித்து, பாடலுக்கேற்ற மெல்லசைவுகளோடு நடனமாடலா னாள். ரசிகர் கூட்டம் கைத்தாள மும் போட, சூழ்ந்திருந்த கூட்டமும் சுற்றிக் குழு மலாயிற்று. கள்ளக் குரல் பாடகன் சுதியைக் கூட்டி, பல்லவி வரிகளுககுத் திரும்ப வரும் போது,'ரெஜினா மனோன்மணியாள்நிலாவெனச் சிரிக்கும் மலர்க் கொடியாள்...' - என்று பாட, கூட்டம் போதை கொண்டு கூத்தாடியது. அவளும் பூரித்து, ஒரு பறக்கும் முத்தத்தைப் பாடகனுக்குப் பரிசாக நல்கினாள்.பல்லேலக்காவுக்கு அந்தக் கள்ளக் குரலானின் கொரவளியைக் கடிச்சுத் துப்ப வேண்டும் என்று வெறி வந்தது. ''ஊத்துடா பங்காளி,'' என்று டம்ளரை நீட்டி, ராவாக அடித்துவிட்டு, சங்கிலிப் புகைப்பாக சிகரெட்டுகளை ஊதித் தள்ளலானான்.'பம்பரக் கண் ணாலே காதல் சங்கதி சொன்னாளே தங்கச் சிலை போல் வந்து மனதைத்தவிக்க வைத் தாளே...'ஸ்லீவ்லெஸ் கைகளைத் தலைக்கு மேல் தூக்கிக் கோர்த்து, ஜீன் சின் அபாயத் தாழ்ச் சியை சட்டை பண்ணா மல், தேளூரும் இடுப்பை வெட்டி, வெட்டி வேகம் காட்டினாள் ரெஜினா. அவளுக்குக் கிடைத்து வரும் அமோக ஆதரவைக் கண்டு வெகுண்டு, ஊடுருவேல் சுடிதார் சுந்தரியும் களத் தில் இறங்கி விட்டாள். முக்காடு பேகத்தின் ஆப்கன் முகம் கூட மோனலிசாப் புன்னகை கொள்ள, ''அடிச்சுடு... அடிச்சுடு...'' என்று சிங்கிடிக் காக்காய்கள் சூடேறின.'கத்தாளக் கண் ணால குத்தாத நீ என்னெ...இல்லாத இடுப்பால இடிக்காத நீ என்னெ...'கள்ளப் பாடகன் கறுப்பு - வெள்ளையிலிருந்து, மஞ்சள் - பச்சைக்கு மாற, ஜீன்ஸ் அம்முணியும், சுடிதார் சுந்தரியும் தேவையான இடத்தில், ''ஆ, ஆ...'' கோரசும் கொடுத்தபடி குத்தாட்டம் தொடர்ந்தனர்.''ரிக்காட் டேன்சு, டில்லி முள்ளாட்டமெல்லாம் இதுககிட்ட பிச்சை வாங்கோணும்! என்னா குத்துக் குத்தறாளுக!'' காக்கா கூட்டம் வெந்து வாய் பிளந்தது.சிங்கடிக் காக்காய்கள் ஒவ்வொருவராக களத்தில் இறங்கி, குத்தாட்ட கவிஞிகளோடு சேர்ந்தாட, சம்மணமிட்டு அமர்ந்திருந்த சுற்று வட்டமும் எழுந்து ஆடலா யிற்று. தொலை தூரத்திலிருந்து வந்த இலக்கிய பெருந்தகைகள் கூட, மெல்ல ஆடத் துவங்கினர். உச்சி பழுத்த கொங்கு நாட்டான் சீன்சு அம்முணியுடனும், வீறாவேசியான அம்பேத்கர் அடிமை சுடிதார் சுந்தரியுடனும் ஜோடி சேர்ந்து ஆடியது தான் உச்சம்.ஆட்டம் பாட்டங்களால் நேரம் போனதே தெரியவில்லை. ஓய்ந்து பசியுணர்ந்தவர்கள் கெடா விருந்துக்கு வரும் போது பிரியாணி, வறுவல், குழம்பு வகையறாக்கள் சூடாறி விட்டன. வயிறு நெறக்க வடிசலும், தண்ணியும் ஊற்றி, அதற்கு மேல் கிடா வறுவல், காய்கறிக் கலவை, மாந்துண்டங்கள் எனத் திணித்திருந்தாலும், ஆடிய ஆட்டத்தில் அத்தனையும் சீரணமாகியிருந்தது அல்லது சில பேருக்கு எதுக்களித்து வாந்தியெடுத்ததில் வயிறு காலியாகி இருந்தது. ஆறிய பிரியாணியென்றாலும் ஒரு பிடி பிடித்தனர்.மனசும், உடம்பும், வயிறும் வெகு திருப்தியாகி, ''இலக்கியக் கூட்டம்னா இப்புடி இருக்கோணுமப்பா,'' என்று புகழ்ந்து, வாயாற புகை ஊதியபடி மரத்தடி நிழல்களில் குழுக்குழுவாக இளைப்பாறிக் கொண்டிருந்தது மாநாட்டுக் கூட்டம். பலா மரத்தடியில் சிறப்பு விருந்தினர்களுடன் அமர்ந்திருந்த ரெஜினாவும், இந்திராணியும் ஒரே சிகரெட்டை மாற்றி, மாற்றிப் புகைத்து, தங்களின் நெருங்கிய நட்பை வெளிப்படுத்திக் கொண்டிருந்தனர். காக்காக் கூட்டமும் அங்ககேயே வட்டமிட்டுக் கொண்டிருந்தது.அடிமரத்திலிருந்தே காய்த்துத் தொங்கிக் கொண்டிருந்த பலாக் காய்களைப் பார்வையிட்ட ரெஜினா, ''இதெல்லாம் காயா, பழமா பண்ணை?'' என, பல்லேலக்காவிடம் விசாரித்தாள்.''இதுகல்லாம் வெக்காய்ங்... முள்ளு விரிஞ்ச பெறப்பாடுதான் பளுக்கும்,'' என்றவன் அண்ணாந்து பார்வையிட்டு, ''அங்க பாருங் வடக்க வாற வாதுல நாலாவதாகத் தொங்குதல்லங், அது முள்ளு விரிஞ்சிருச்சு. அப்புறம் இதோ இங்க பாருங் - அங்கல்லங், இவடத்தால பாருங் - அதும் முள்ளு விரியறக்கு ஆச்சுங். அதுகள வேண்ணா வெட்டி எறக்கி சாக்கப் போட்டு மூடி வெச்சாப் பளுக்கும். இதுகள்ல சொளைக கம்மின்னாலும் வேர்ப் பெலாவிட்ட ருசி பிரமாதமா இருக்குமுங் ரெஜி. ஊருக்குக் கொண்டுட்டுப் போறதுன்னாச் சொல்லுங், நாளைக்கு வேண்ணா மாதேரீகள உட்டு ரெண்டையும் வெட்டி எறக்கீர்லாம்,'' என்றான்.''இவ்ளோ பெரிச எப்படித் தூக்கீட்டுப் போறது? இப்பவே சாப்பிடற மாதிரி பழுத்தது ஏதாவது இருந்தா சொல்லுங்க.''மீண்டும் அண்ணாந்து உன்னித்தவன், உச்சாணிக் கொம்பில் இருந்த ஒன்றைச் சுட்டிக் காட்டி, ''அது வேண்ணா சிறுசா இருந்தாலும், நல்லா முள்ளு விரிஞ்சிருக்குதுங். பளுத்திருந்தாலும் பளுத்திருக் கும். ஆனாட்டி அதைய வெட்டி எறக்கறக்கு எசவு இல்லீங்ளே... ஏறிப் போயிப் புடுங்கறக்கு இல்லாத படிக்கு கொனைல இருக்குது. கொக்கிச் சல்லைல இளுத்து உளுக்காட்னாத்தான் ஆச்சு. ஆனாட்டி அத்தனை ஒசக்கத்துலிருந்து உளுந்தா காயி ஒடைஞ்சு செதறீருமுங்,'' என்றான்.இரண்டு மணி நேரத்துக்கு முன் அடித்திருந்த முதல் வடிசலின் வீரியம் குறைந்திருந்தாலும், ரெஜினாவுக்கு இன்னும் மப்பு இருந்தது. மிதப்பான மனோ நிலையிலேயே இருந்த அவள் சற்றே யோசித்து, கூட்டத்தினர் அனைவரையும் பார்த்து ஒரு சவாலை முன் வைத்தாள். ''யாராவது மரத்துல ஏறி, அந்தப் பலாப் பழத்தைக் கையாலயே பறிச்சு எனக்குக் குடுத்தீங்கன்னா, நான் அவங்களைக் கல்யாணம் பண்ணிக்கறேன்.''கூட்டம் உடனே ஆர்ப்பரித்தது; ஆனால், ஒருவரும் சவாலை ஏற்க முன் வரவில்லை.''சவாலை ஏத்துக்க ஒரு ஆம்பளை கூட இல்லையா?'' என்றாள்.''ஏத்துக்கத் தயாருங் ரெஜி... ஆனாட்டி உங்களைக் கல்யாணம் பண்ணிக்கறதுங்கற ப்ரைசுதான் ஒதைக்குது. அப்பப்ப வந்துட்டுப் போறாப்புடி செட்டப்பா இருக்கறதுன்னாச் சொல்லுங்க; நாங்க ரெடி,'' என்று சிங்கிடிக்காய்கள் முன் வந்தன.அவர்களை நெற்றிக் கண்ணில் முறைத்துவிட்டு, ''செட்டப்பாக் கூட வேண்டாங் ரெஜி. ஒரே ஒரு சலக்காப் போதுங். உளுந்து கையிக்காலு ஒடைஞ்சாலும், உசுரே போனாலுஞ் செரியே!'' என்றான் பல்லேலக்கா.''அது கூட வேண்டாம் முணி... ஒரே ஒரு இங்கிலிப்பீஸ் கிஸ்சு கிடைக் கறதுன்னாலே நமக்குப் போதும்,'' என்று முச்சூடும் நரைத்த கொங்குநாட்டான் கூட வேட்டியை வரிந்து கட்டினார்.ரெஜினா அந்த ஏற்பாடு கள் எதற்கும் ஒத்துக் கொள்ளவில்லை. ''அதெல்லாம் எனக்கு போரடிச் சிருச்சு. இனிமே கல்யா ணம் பண்ணி செட்டிலாயிடலாம்ன்னு பாக்க றேன்,'' என்று கறாராக சொல்லி விட்டாள். மற்றவர்கள் பின்வாங்க, பல்லே லக்காவுக்கு துணிந்து விடலாமா - வேண்டாமா என்று ரெண்டர்த்தமாகவே இருந்தது.அப்போது அண்ணாந்து பார்த்துக் கொண்டிருந்த சோழீஸ்வரன், ''அங்க பாருங்... ஒரு அனுமாரு <உச்சாணிக் கொம்புல ஏறீட்டிருக்காரு,'' என்று தெரிவித்தான். எல்லாரும் அண்ணாந்து பார்க்க... ''ஏனுங் ரெஜி... ஒரு வேளை அந்த வாயு புத்தரன் பெலாப் பளத்தப் புடுங்கீட்டு வந்த குடுத் துட்டாருன்னா என்ன பண்ணுவீங்?'' என்று கேட்டான்.''அதையே கல்யாணம் பண்ணிக் குவேன்,'' என்றாள் அலட்சியமாக.கூட்டத்தினர் ஆவலோடு கவனித்து கொண்டிருக்க, வானரம் உச்சாணிக் கொம்பின் நுனிக்குச் சென்று பலாப்பழத்தைப் பரி சோதித்து, காம்பைத் திருகிப் பறித்தே விட்டது. பிறகு, காம்பை வாயில் கவ்வியபடி பதனமாக இறங்கி வந்தது.''ஏய்... நெஜமாகவே உங்கிட்டத் தான் குடுக்கறக்கு வருதாட்டிருக்குது!'' என இந்தராணி குதூகலித்தாள்.ஆளுயரத்துக்கு சற்று மேலிருக்கும் கிளை வரை இறங்கிய வானரம், அதன் கவுட்டிப் பகுதியில் வாகாக உட்கார்ந்து கொண்டது.ரெஜினாவும், ''ச்சோ ச்வீட்... நீ தான் சரியான ஆம்பளை! ஐ லவ் யூ ஸோ மச்!'' என்றபடி நெருங்கி, ''ஓ.கே., டார்லிங்... சவால்ல நீ ஜெயிச்சுட்ட! சொன்ன மாதிரியே நான் உன்னைக் கல்யாணம் பண்ணிக்கறேன்; பழத்தைக் குடு,'' என்று இரண்டு கைகளையும் உயரே நீட்டினாள்.வானரம், ஈ ஈ ஈ யென்று பல்லைக் கிஞ்சித்துக் கொக்காணி காட்டியது.— முற்றும் —ஷாராஜ்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !