உள்ளூர் செய்திகள்

தென்னையில் ஊடுபயிராக நறுமணப்பயிர்கள்

நறுமணப்பயிர்களில் இஞ்சியும் மஞ்சளும் முக்கியமான ஊடுபயிர்களாகும். முதல் 8 ஆண்டுகளில் இவற்றைத் தோப்புகளில் ஊடுபயிராக சாகுபடி செய்யலாம். மானாவாரி சாகுபடிக்கு முன் பருவ மழைக்காலமான ஏப்ரல் மாதமும், இறவைப் பயிருக்கு பிப்ரவரி மாதமும் நடவு செய்ய ஏற்ற காலமாகும். இச்சாகுபடியில் சராசரியாக எக்டருக்கு 7000-8000 கிலோ விளைச்சல் கிடைக்கும். மஞ்சளில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் இருந்து வெளியிடப்பட்ட பிஎஸ்ஆர்-1 என்ற ரகம் ஊடுபயிர் சாகுபடிக்கு மிகவும் ஏற்றது. தென்னையில் மஞ்சளை ஊடுபயிராக சாகுபடி செய்ததில் ரூ.24,701ம், தென்னையை தனிப்பயிராக சாகுபடி செய்ததில் ரூ.22,075ம் கிடைத்துள்ளது.கலப்புப்பயிர்கள் சாகுபடி: தென்னையில் பல ஆண்டுப் பயிர்களைச் சாகுபடி செய்வது கலப்புப்பயிர் சாகுபடி எனப்படும். நல்லமிளகு, ஜாதிக்காய், லவங்கம் மற்றும் வனிலா ஆகியவற்றைத் தென்னந்தோப்புகளில் கலப்புப் பயிராகச் சாகுபடி செய்வது மிகவும் லாபகரமானதாகும்.நல்லமிளகு: இந்தியாவின் மேற்கு கடற்கரைப் பிரதேசங்களிலுள்ள தென்னந் தோப்புகளில் நல்லமிளகு கலப்புப்பயிராக சாகுபடியாகின்றது. கரிமுண்டா, பன்னியூர்-2 மற்றும் பன்னியூர்-3 ரகங்கள் கலப்புப் பயிர் சாகுபடிக்கு மிகவும் ஏற்றவை. தென்னையைச் சுற்றியிருக்கும் வட்டப்பாத்தியில் வேர்விட்ட மிளகுக் குச்சியினை நடவுசெய்து மரத்தின் மீது கொடியைப் படரவிட வேண்டும். நடவுசெய்த மூன்றாவது ஆண்டில் நல்லமிளகு காய்ப்புக்கு வரும். சுமார் 7-8வது ஆண்டுகளில் விளச்சல் உச்சகட்டத்தை அடையும். சராசரியாக ஒரு கொடியிலிருந்து ஒரு கிலோ உலர்ந்த மிளகு கிடைக்கும். மேலும் மிளகுக் கொடிகளைக் கவாத்து செய்து 6 மீ. உயரத்திலேயே வைத்திருந்தால் தேங்காய்களை அறுவடை செய்வதில் தொந்தரவு இருக்காது. நல்ல மிளகுக் கொடிகளும் பாதிப்படையாது.லவங்கம்: இது தென்னந்தோப்புகளில் கலப்புப் பயிராக சாகுபடி செய்யப்படும் மற்றொரு பயிராகும். 1-2 ஆண்டு வயதுடைய லவங்க கன்றுகள் தென்மேற்குப் பருவமழையின் தொடக்கத்தில் இரட்டை வரிசை முறையில் செடிக்குச்செடி 3 மீ இடைவெளியில் நடவு செய்யப்படுகின்றன. நடவு செய்த 5வது ஆண்டில் அறுவடைக்கு வருகின்றன. ஒரு ஆண்டு விட்டு மறு ஆண்டு அறுவடை செய்யலாம். ஒரு மரத்திலிருந்து சுமார் 750 கிராம் சுருள்பட்டையை விளைச்சலாகப் பெறலாம்.கிராம்பு: நல்ல வடிகால் வசதியுள்ள வளமான மண்வகை கிராம்பு கலப்புப்பயிர் சாகுபடிக்கு ஏற்றது. சுமார் ஒன்றரை ஆண்டு வயதுள்ள விதைக்கன்றுகளை 4 தென்னைக்கு ஒரு கிராம்பு என்ற விகிதத்தில் நடவுசெய்ய வேண்டும். நடவு செய்த 6வது ஆண்டில் பூக்க ஆரம்பித்து, 20வது ஆண்டில் விளைச்சல் உச்சநிலையை அடைகிறது. ஒரு ஆண்டில் ஒரு மரத்திற்கு சராசரியாக 3 கிலோ கிராம்பு கிடைக்கும்.ஜாதிக்காய்: நான்கு தென்னைகளுக்கு நடுவில் ஒரு ஜாதிக்காய் செடி என்ற அளவில் 2 ஆண்டான ஜாதிக்காய் ஒட்டுச் செடிகள் நடப்படுகின்றன. நடவு செய்த 5-8 ஆண்டுகளில் முழு விளைச்சல் கிடைக்கிறது. ஒரு மரத்திலிருந்து சராசரியாக 1500 - 2000 காய்கள் பறிக்கலாம். இவற்றிலிருந்து 8-12 கிலோ ஜாதிக்காய் கொட்டைகளும், 1.5 - 2 கிலோ ஜாதிப்பத்திரியும் கிடைக்கும்.வனிலா: வனிலா கொடிகளை தென்னைக்கு அருகில் நடக்கூடாது. ஏனெனில் தென்னையின் மட்டைகள் விழுந்து கொடிகள் சேதமடையக்கூடும். கொடிகளை நடுவதற்கு 6-8 மாதங்களுக்கு முன் 13-15 மீ உயரமுடைய சீமைக்கொன்றை மரங்களைத் தாங்கு மரங்களாக்க வேண்டும். தென்னை மரங்களுக்கிடையே மூன்று வரிசை வனிலா நடவு செய்யலாம். எக்டருக்கு சுமார் 1000 கிலோ வனிலா பீன்ஸ் விளைச்சலாக கிடைக்கும்.பல அடுக்குப்பயிர்கள் சாகுபடி: இம்முறையை 20 ஆண்டிற்கு அதிகமான வயதுடைய தென்னை மரங்கள் உள்ள தோப்புகளில் பின்பற்றலாம். இந்த பலஅடுக்குப் பயிர்கள் சாகுபடியில் தென்னை, கோகோ, நல்லமிளகு மற்றும் மஞ்சள் ஆகிய நான்கு பயிர்கள் அடங்கும். முதல் அடுக்கில் தரைதளத்தில் மஞ்சளும், இரண்டாவது அடுக்கில் தரையிலிருந்து 3.5 மீ உயரத்தில் கோகோவும், 3வது அடுக்கில் தென்னையும் வளரும். இந்த நான்கு பயிர்களின் வேர்ப்பகுதிகள் ஒன்றோடொன்று தொடர்பற்றவை. இதனால் தண்ணீர் மற்றும் ஊட்டச்சத்து பற்றாக்குறை அவற்றில் ஏற்படுவதில்லை. கலப்புப்பயிர் மற்றும் ஊடுபயிர்களில் நீர் மேலாண்மை: தண்ணீர் தட்டுப்பாடு இல்லாத இடங்களில்தான் தென்னையில் ஊடுபயிர்களையும் கலப்புப் பயிர்களையும் சாகுபடி செய்ய வேண்டும். மானாவாரி தோப்புகளில் குறைந்த வயதுடைய ஓராண்டுப் பயிர்களையும் நீர்ப்பாசன வசதியுள்ள தோப்புகளில் ஓராண்டு மற்றும் பல்லாண்டுப் பயிர்களையும் சாகுபடி செய்யலாம். நீர் பாய்ச்சும்போது தென்னைக்கும் மற்ற பயிர்களுக்கும் தேவையான அளவு மட்டுமே நீர் பாய்ச்ச வேண்டும். அப்போதுதான் பாசன நீரும் விரயமாகாது. தென்னையின் விளைச்சலும் குறையாது. ஊடுபயிர்களும் நன்கு விளையும். கோடையில் நீர்ப்பாசனம் மிகவம் இன்றியமையாத ஒன்றாகும்.ஊடுபயிர் மற்றும் கலப்புப்பயிர்களில் உர மேலாண்மை: தென்னைக்கும் ஊடுபயிர் மற்றும் கலப்புப் பயிர்களுக்கும் தேவையான உரங்களைத் தனித்தனியே பரிந்துரைக்கப்பட்ட அளவுகளில் இடவேண்டும். அப்போதுதான் தென்னையின் காய்ப்பும் குறையாது. ஊடுபயிர்களின் விளைச்சலும் குறையாது. ஊடுபயிர்களைத் தொடர்ந்து சாகுபடி செய்யும் இடங்களில் இலை, தழைகள் விழுவதாலும், வேர்கள் மக்குவதாலும் மண்ணின் வளம் கூடி செயற்கை உரங்களின் உபயோகம் குறைகிறது.எம்.ஞானசேகர்,தொழில் மற்றும் விவசாய ஆலோசகர்,97503 33829.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !