கம்பல் பாசி
மண் வளம் பெருக்க... மகசூல் அதிகரிக்க... கிராமங்களில் 'கம்பல் பாசி' என அழைக்கப்படும் 'அசோலா' ஒவ்வொரு விவசாயி தோட்டத்திலும் இருக்க வேண்டிய, வளர்க்க வேண்டிய உயிரி. அதுவும் இயற்கை விவசாயம் செய்பவர்களுக்கு அசோலா ஒரு அட்சய பாத்திரம் என்றே கூறலாம். மண்ணை வளப்படுத்துவது மட்டுமின்றி ஆடு, மாடு, மீன், கோழி வளர்ப்பில் அதனுடைய பங்கு அபாரம், அசோலாவை ஒருமுறை வளர்க்கத் துவங்கி விட்டால் பலமுறை வளர்ந்து பலன் கொடுக்கும். குறைந்த செலவில் எளிய முறையில் அசோலாவை வளர்க்க முடியும். அதற்கு தொட்டியில் 7 முதல் 10 செ.மீ., உயரத்துக்கு தண்ணீரை தேக்கி கொள்ளவும். பாலிதீன் ஷீட் மற்றும் செங்கற்களை பயன்படுத்தியும், தரையிலேயே தொட்டியை உருவாக்கி கொள்ளலாம். சூரிய ஒளி படும் இடத்தில் தொட்டி இருப்பது அவசியம்.அதிக மகசூல்தொட்டியில் இருக்கும் தண்ணீரில் சாணம் ஒரு கிலோ, செம்மண் ஒரு கைப்பிடி, அசோலா ஒரு கைப்பிடி போட்டு கலக்க வேண்டும். அடுத்த ஒரே வாரத்தில் 10 மடங்கு அளவுக்கு அசோலா பெருகியிருக்கும். மீண்டும் அசோலா வேண்டுமென்றால், சாணம் மற்றும் செம்மண் துாளை தொட்டியில் போட்டால் போதும். அப்படியே பெருக துவங்கி விடும். நெல் பயிரில் ஏக்கருக்கு 20 கிலோ என்ற அளவில் அசோலாவை இடலாம். நெல் வயலில் பச்சைப் போர்வை போர்த்தியது போல் படர்ந்திருக்கும். இதனால் நீர் ஆவியாவது தடுக்கப்படும். நெற்பயிரில் ஏற்படும் களைகளும் கட்டுப்படும். வழக்கத்தை விட கூடுதலான விளைச்சலும் நிச்சயம்.அற்புத உரம்நெல் அறுவடை வரை அசோலாவை வயலில் வைத்திருக்கக்கூடாது. இரண்டாம் களை எடுக்கும் போது அசோலாவை வயலிலேயே மடக்கி மிதிக்க விட வேண்டும். இதன் மூலம் தழை, மணி, சாம்பல் போன்ற முக்கிய சத்துக்கள் பயிர்களுக்கு கிடைக்கும். நெல் சாகுபடியை பொறுத்தவரை மூன்று போகம் அசோலாவை தொடர்ந்து இடுபொருளாக பயன்படுத்தி வந்தால், அந்த வயலில் நல்ல விளைச்சல் கிடைப்பதுடன் மண் வளமும் பெருகிக்கொண்டே இருக்கும். அடுத்த போகத்தில் எந்த பயிரை சாகுபடி செய்தாலும் நல்ல விளைச்சல் கிடைக்கும். அந்த அற்புதமான உயிர் உரத்தை விவசாயிகள் பயன்படுத்தி பலனடையலாம்.த.விவேகானந்தன் துணை இயக்குனர்நீர் மேலாண்மை பயிற்சி நிலையம்மதுரை.