வேளாண் பயிர் பாதுகாப்பில் செலவில்லா தொழில்நுட்பம்
வேளாண் பயிர் பாதுகாப்பு செலவை குறைக்க செலவில்லா தொழில்நுட்பங்களை பயன்படுத்துவது குறித்து விவசாயிகள் தெரிந்து கொள்வது அவசியம்.ஆமணக்கு: இந்த இலையின் வெளியிடுக்கு பூச்சிகளின் பதிவேடு என்று கூறலாம். எந்த பூச்சி வந்தாலும் முதலில் ஆமணக்கு செடியைத்தான் நாடும். இச்செடிகளை வயலின் ஓரத்தில் நடலாம். எண்ணிக்கை குறைவாக நட வேண்டும். செடியை அடிக்கடி பரிசோதித்து தீமை செய்யும் பூச்சிகளை கண்டவுடன் அவற்றை சேகரித்து அழித்து விட வேண்டும். அதிகமாக ஆமணக்கு நடக்கூடாது. நெருக்கமாகவும் நடக்கூடாது. வயலின் நடுவிலும் நடக்கூடாது.தட்டைப்பயிறு: இதன் செடிகளை வரப்பு ஓரங்களில் அல்லது ஊடுபயிராக நடலாம். இவை அசுவினி பூச்சிகள் வளர்வதற்கு ஏற்ற செடியாகும். அசுவினி பூச்சிகள் ஓரளவு வந்தவுடன் அதனை உண்ண பொறி வண்டுகள், பல நன்மை செய்யும் பூச்சிகள் வருகின்றன.மக்காச்சோளம்: இதில் இரை விழுங்கிகள் அதிகம் தங்கியிருக்கும். இதை வரப்பை சுற்றியோ அல்லது ஊடு பயிராகவோ பயிர் செய்யும் போது நிறைய இரை விழுங்கிகள் உற்பத்தி செய்யப்பட்டு, அவை பயிர்களை தாக்கும் பூச்சிகளை அழிக்கிறது. மக்காச்சோளத்தில் பறவைகள் உட்காருவதற்கு வசதியாக இருக்கும். பூச்சி விழுங்கி பறவைகள் இதில் அமர்ந்து பயிரை தாக்கும் பூச்சிகளை பிடித்து உண்ணும்.மஞ்சள் பூக்கள்: செண்டுமல்லி செடியின் வேர்களில் இருந்து சுரக்கும் திரவங்கள் நுாற்புழுக்களை கொல்லக்கூடியவை. இந்த திரவங்கள் ஒரு சதுர மீட்டர் பரப்பளவிற்கு செல்லக்கூடியவை. எனவே, பயிர்களுக்கு அருகிலேயே செண்டுமல்லி, சாமந்தியை நட வேண்டும்.விளக்குப்பொறி: இவற்றில் இரவு நேரங்களில் ஒளியை நோக்கி செல்லக்கூடியவை. இரவில் மின்சார விளக்கு எரியவிட்டு அதன் கீழ் அகலமான பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி, அதில் சில துளிகள் மண்ணெண்ணெய் விட்டு இரவு 6 முதல் 8 மணி வரை வைக்க வேண்டும். பூச்சிகள் விளக்கொளியில் கவரப்பட்டு பின் தண்ணீரில் விழுந்து மடிகின்றன. இரவு 8 மணிக்கு மேல் நன்மை செய்யும் பூச்சிகளின் நடமாட்டம் அதிகமாக இருக்கும். இதனால் 8 மணிக்கு மேல் விளக்கை அணைத்து விட வேண்டும்.மஞ்சள் ஒட்டுப்பொறி: பழைய தகர டின்களில் மஞ்சள் வண்ணத்தை பூசி அதன் மேல் விளக்கெண்ணெய் அல்லது கிரீஸ் தடவி விட வேண்டும். மஞ்சள் வண்ணத்தால் கவரப்படும் பூச்சிகளான வெள்ளை ஈக்கள், இலைப்பேன், அசுவினி, தத்துப்பூச்சி போன்றவை அதன் மேல் ஒட்டிக்கொண்டு இறந்து விடும்.வேளாண் பயிர் பாதுகாப்பில் செலவில்லா தொழில்நுட்பங்களை பயன்படுத்தும் போது சுற்றுப்புறச் சூழல் பேணப்படுவதோடு பூச்சிகளின் நடமாட்டத்தை செலவில்லாமல் கட்டுப்படுத்தி அதிக அளவில் வருமானம் பெறலாம்.- எஸ்.சந்திரசேகரன்வேளாண் ஆலோசகர் அருப்புக்கோட்டை, 94435 70289.