உள்ளூர் செய்திகள்

தீட்டாத பாரம்பரிய அரிசி வேண்டுமா

முப்போகம் நெல் விளையும் மதுரை மாவட்டம் செல்லம்பட்டியில் எப்போகம் விளைவித்தாலும் அது இயற்கை சாகுபடி மட்டும் தான் என்கிறார் வி.காமாட்சிபுரத்தைச் சேர்ந்த இயற்கை விவசாயி மகாதேவன். அப்பகுதியில் உள்ள 300 இயற்கை விவசாயிகளை ஒருங்கிணைத்து கமம் இயற்கை விவசாய உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பை ஏற்படுத்தி அதன் நிர்வாக இயக்குநராக உள்ள மகாதேவன், வேளாண் அனுபவங்களை விவரித்தார்.இயற்கை விவசாயம் செய்வதோடு 23 வகையான பாரம்பரிய நெல் ரகங்களையே பயிரிடுகிறோம். ஒவ்வொரு விவசாயியும் ஒவ்வொரு ரகங்களை பயிரிடுகின்றனர். விவசாயி என்பதைத் தாண்டி உற்பத்தி, வியாபாரத்தில் ஈடுபடும் வகையில் இயற்கை சோப்பு, ஹேர் ஆயில், இயற்கை உரம் தயாரித்து விற்கிறோம். சீசனுக்கு ஏற்ப 200 முதல் 500 லிட்டர் அளவிற்கு பஞ்சகவ்யம், மீன்அமிலம், பூச்சிவிரட்டி தயாரிக்கிறோம். எங்கள் குழுவில் உள்ள விவசாயிகளும் மற்றவர்களும் இதை வாங்குகின்றனர். சுதேசி முறைகூட்டமைப்பு சார்பில் செக்கானுாரணியில் உள்ள அரசு கோடவுனில் நிறுவனம் அமைத்து பாரம்பரிய அரிசி, இயற்கை சோப்பு, ஹேர் ஆயில், எண்ணெய் வகைகள், இயற்கை உரம் விற்கிறோம். எந்தப்பொருளையும் வெளியில் இருந்து நாங்கள் வாங்குவதில்லை. மூன்று இயந்திரங்கள் மூலம் நல்லெண்ணெய், கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய் தயாரிக்கிறோம். வடமாநிலத்தவர்களின் தேவைக்கேற்ப இந்த முறை 100 லிட்டர் கடுகுஎண்ணெய் ஆட்டி கொடுத்தோம். வேளாண்மைக்காக வேப்பெண்ணெய் தயாரிக்கிறோம். நான் தனியாக 5 ஏக்கரில் நெல் பயிரிடுகிறேன். இலுப்பை பூ சம்பா 125 நாட்கள் பயிர். ஒரு ஏக்கருக்கு 5 கிலோ நெல்லை நடவு செய்து ஒற்றை நாற்று எடுத்து வரிசை நடவு செய்தேன். மழைக்கு சாயவில்லை, 20 முதல் 25 நாட்களுக்குள் ஒருமுறை களை எடுத்தேன். பூச்சி, நோய் தாக்குதல் கிடையாது. ஒற்றை நடவு செய்தாலும் ஒவ்வொன்றிலும் 70 முதல் 120 துார் வெடித்து பரவியது. நெல் மணிகள் குறைவாக இருந்தது. ஒரு ஏக்கருக்கு 20 மூடை நெல் கிடைத்தது. ரத்தசாலி ரகத்தை 90 நாட்கள் முதல் 100 நாட்களில் அறுவடை செய்தேன். ரகங்கள் மாற்றப்படும்இலுப்பை பூ சம்பா, சிவன் சம்பா, கருடன் சம்பா, மிளகு சம்பா, கருங்குறுவை, ஆத்துார் கிச்சிலி சம்பா, மைசூர் மல்லி, தங்கச்சம்பா என விவசாயிகள் மாற்றி மாற்றி பயிரிடுகிறோம். நெல்லை அரிசியாக்கி விற்பனை செய்கிறோம். எங்களிடம் வாங்கும் அரிசியை அதிகம் தீட்டுவதில்லை. அதனால் சற்றே பழுப்பாக இருக்கும். இதுதான் அரிசியின் பதம். பட்டை தீட்டிய அரிசியை சாப்பிடுவதால் பயனில்லை. வழக்கமாக கருப்பு கவுனி, சிவப்பு கவுனி, மாப்பிள்ளை சம்பா சாப்பிடுவதுடன் இந்த வகை பாரம்பரிய அரிசிகளையும் சாப்பிடுவது நல்லது. விவசாயிகளே ஒருங்கிணைந்து தயாரிப்பதால் விலையும் குறைவு; உடலுக்கும் நல்லது என்றார் மகாதேவன்.இவரிடம் பேச: 86672 66208. -எம்.எம்.ஜெயலெட்சுமி மதுரை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !