உள்ளூர் செய்திகள்

புவிசார் குறியீட்டுப் பயிர்கள்

தென் மாவட்ட விவசாயிகள் வாழ்வாதாரம் சிறக்க அதிக அளவில் ஏற்றுமதியாகிவரும் அதிக லாபம் தரும் புவிசார் குறியீட்டு பயிர்களான மாம்பழம், மல்லிகை மற்றும் மருந்துப் பயிர், திருநெல்வேலி சென்னா போன்றவை பயிரிட்டு தங்களின் வாழ்வாதாரம் மேம்பாடு அடைய வேண்டும்.மாம்பழம்: உலகிலேயே அதிக அளவு மாம்பழம் உற்பத்தி செய்யும் நாடு இந்தியா மட் டுமே. ஆண் டுக்கு 125 லட்சம் டன் மாம்பழம் உற்பத்தியானபோதிலும் ஏற்றுமதி செய்யப்படும் அளவு 1 விழுக்காட்டிற்கும் குறைவு. இப்போது 83 ஆயிரம் டன்களாக இருக்கும் ஏற்றுமதி அளவு அடுத்த நிதியாண்டில் 90 ஆயிரம் டன்களாக உயரும் (அதாவது 8 விழுக்காடு அதிகமாக இருக்கும்) என்று அபேடா (வேளாண் பொருள்கள் பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருள் ஏற்றுமதி ஆணையம்) எதிர்பார்க்கிறது.தமிழ்நாட்டில் 2001-02ம் ஆண்டில் 1.10 லட்சம் எக்டேரில் மாம்பழம் சாகுபடி செய்யப்பட்டு, ஆண்டுக்கு 4.38 லட்சம் டன்கள்தான் உற்பத்தியானது. 2006-ம் ஆண்டு புள்ளி விபரப்படி 1.62 லட்சம் எக்டேரில் 9 லட்சம் டன்கள்தான் உற்பத்தி செய்கிறோம். மதுரை, திண்டுக்கல் மாவட்டத்தில் மாம்பழம் வளர தேவையான சாதகமான சூழல் நிலவுவதால் இப்பகுதியில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் ஒரு எக்டேருக்கு 5.52 டன் மாம்பழ விளைச்சல்தான் உள்ளது. இது சராசரி இந்திய அளவான ஒரு எக்டேருக்கு 6.2 டன் என்பதைவிட குறைவு. மாம்பழ சாகுபடியில் நாம் புதிய சாகுபடி முறைகளைக் கையாளுவதன் மூலம் இதனை சரிகட்டலாம்.இந்த மண்ணில் விளையும் பழங்களுக்கு அரிய சுவையும் மணமும் உள்ளது என்பதுதான் சிறப்பு. இந்த சிறப்பை இழக்காமல், விளைச்சலை மட்டும் மேம்படுத்தும் தொழில் நுட்பத்தை தேர்வு செய்ய வேண்டும். மேலும் உரம் போடாத மரங்களில் விளையும் பழங்களுக்குக் கூடுதல் விலை கிடைக்கும் என்பதால் அத்தகைய முறைகளில் மாம்பழ உற்பத்தி நல்ல வருவாயைத்தரும்.2. அவுரி சென்னா: நமது நாட்டில் அதிக அளவில் உற்பத்தி செய்யப்பட்டு ஏற்றுமதியாகிவரும் மருந்துப்பயிர்களில் அவுரி முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. இது தமிழ்நாட்டில் குறிப்பாகத் திருநெல்வேலி மாவட்டத்தில் அதிகம் விளைவதால் திருநெல்வேலி சென்னா(டின்னவேலி சென்னா) என்றும் அழைக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் திருநெல்வேலி, தூத்துக்குடி, மதுரை, ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களிலும் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. தற்போது அவுரி சுமார் 2,700 எக்டர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு ஆண்டுதோறும் சுமார் 5000 டன் இலைகளும் காய்களும் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதனால் சுமார் 45 மில்லியன் ரூபாய் வரை அந்நியச் செலாவணி கிடைக்கிறது.பயன்கள்: அவுரியின் இலை மற்றும் காய்கள் மலச்சிக்கல் நோயைக் குணப்படுத்த பெரிதும் பயன்படுகிறது. இலைகளிலும் காய்களிலும் சென்னோஸைடு மூலப்பொருட்கள் அடங்கியுள்ளன. மூலம் மற்றும் மலச்சிக்கல் நோய்களைக் குணப்படுத்த இவை பயன்படுகின்றன. உலகளவில் அவுரி ஒன்று மட்டுமே இயற்கை மலமிளக்கியாகப் பயன்படுத்தப் படுகிறது.ரகங்கள்: அவுரியில் இரண்டு வகைகள் உள்ளன. ஒன்று நமது நாட்டில் விளைவிக்கப்படும் திருநெல்வேலி சென்னா, மற்றொன்று கேசியாசென்னா அல்லது அலெக்சாண்டரியன் சென்னா என்பவை ஆகும். இது சூடான் நாட்டில் அதிகம் விளைவிக்கப்படுகிறது. திருநெல்வேலி சென்னாவில் 1.2 முதல் 2.5 சதம் வரை சென்னோஸைடு மூலப்பொருட்கள் உள்ளன. ஆனால் அலெக்சாண்டிரியன் வகையிலோ இரண்டு மடங்கு அதிக மூலப்பொருட்கள் உள்ளன. தற்போது இந்த வகை அவுரிக்கு ஏற்றுமதி மதிப்பு அதிகமாக இருந்தாலும் உற்பத்தி ஆகின்ற அளவு குறைவு.3. மல்லிகை: மதுரை என்றதும் நம் நினைவில் நிற்பது மல்லிகைதான். மதுரை மல்லிக்கு நிகர் மதுரை மல்லி மட்டும்தான். மணக்கும் மல்லியின் வாசனையை கண்டதும் மதுரை மல்லியா! என்று கேட்கும் அளவிற்கு நம்மோடு கலந்தது. இந்தியாவில் மட்டுமல்ல, மலேசியா, சிங்கப்பூர் என வெளிநாடுகளிலும் தன் புகழோடு தமிழகத்தின் புகழையும் சேர்த்து மணக்க வைக்கிறது இம்மதுரை மல்லி. உலகின் பல பகுதிகளுக்கு மல்லிகையும் மல்லிகையிலிருந்து எடுக்கப்படும் வாசனை திரவியங்களும் ஏற்றுமதியாகிறது. மல்லிகையிலிருந்து சாறு தயாரிக்கும் தொழிற்சாலைகள் பல மதுரையில் உள்ளன. மதுரை மாவட்டத்தில் வர்த்தக அடிப்படையில் மல்லிகைப்பூவை பதப்படுத்தும் 25 தொழிற்சாலைகள் உள்ளன. அவை மல்லிகைப்பூவை பசையாகவும் திரவமாகவும் மாற்றி ஏற்றுமதி செய்கின்றன. தொழில் வட்டாரங்கள் வழங்கும் தகவலின்படி 875 கிலோ மல்லிகைப்பூவில் இருந்து ஒரு கிலோ மல்லிகைப்பசை தயாரிக்கலாம். ஒரு கிலோ மல்லிகைப்பசையின் உலகச் சந்தை மதிப்பு இந்திய ரூபாயில் 25,000 ஆகும். இதற்கு மேலும் விலை கூடுவதுண்டு. மல்லிகைப்பூ ஒரு நாளில் வாடிவிடும். மல்லிகைப்பசையை முறையாகப் பாதுகாத்தால் அதை ஐந்து ஆண்டு வரை வைத்திருக்க முடியும்.சோப்பு, ஷாம்பு, தலை எண்ணெய், முக கிரீம், அகர்பத்திகள் போன்றவற்றிற்கு வாசனை ஊட்ட மல்லிகைப்பசை பயன்படுத்தப் படுகிறது. மதுரை தயாரிப்பான மல்லிப்பசையை இறக்குமதி செய்யும் நாடுகளில் பிரான்சும் அமெரிக்காவும் முன்னணி இடம் வகிக்கின்றன.4. கருங்கண்ணிப்பருத்தி: புளியங்குடி பாம்புக்கோயில் ரயிலடியிலிருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ளது. இங்கு கைத்தறி வேட்டி சிறந்த பெயரைப் பெற்றுள்ளது. இங்கு கருங்கண்ணி பருத்தி விளைச்சல் அதிகம். ஆனால் தற்போது பழைய கருங்கண்ணிப் பருத்தி ஏதோ கனவுபோல மறைந்துவிட்டது. கருங்கண்ணிப் பருத்தி ஒரு மரக்கால் நிலத்தில் - 8 சென்ட் நிலம் - அரை குவின்டால் பருத்தி விளைந்தால் அது ஒரு மேனியாகும்.பிஷப் ராபர்ட் கால்டுவெல் தமது History of Tirunnelvelly என்ற நூலில் தூத்துக்குடியைப் பருத்தி வணிகத்தின் தலைநகரம் (Emporium of Cotton Trade) என்று குறிப்பிட்டுள்ளார். தூத்துக்குடிப் பகுதிக் கரிசல் காட்டில் விளைந்த பருத்தி கருங்கண்ணி என்ற பெயருடையது. இது உலக அளவில் தரம் வாய்ந்த பருத்தியாக முற்காலத்தில் போற்றப்பட்டது. கோவில்பட்டி கருங்கண்ணி என்றே இது அண்மைக் காலம் வரை பெயர் பெற்றிருந்தது. அதிக மழை பெய்தாலும் மழையே பெய்யாவிட்டாலும் தாக்குப் பிடித்து வளரக்கூடிய தாவர வகை கருங்கண்ணிப் பருத்தியாகும்.கருங்கண்ணிப் பருத்தி விதைக்கும்போது ஊடுபயிர்களாக உளுந்து, எள், ஆமணக்கு, தினை, நிலக்கடலை ஆகியவற்றை விதைப்பார்களாம். விதைக்கும் வரிசை முறை வருமாறு:முதலில் ஆறுக்கு ஒன்று என்ற அளவில் சால்களில் உளுந்து. பின்னர் ஒரு வரிசை இடைவெளி விட்டு கடலை. பொழிகளில் எள் அல்லது ஆமணக்கு. இறுதியாகப் பருத்தியுடன் தினை. இவற்றை கடலை, உளுந்து, எள், தினை, பருத்தி என்ற முறையில் அறுவடை செய்வார்கள்.முனைவர் சி.சுவாமிநாதன், பேராசிரியர், உழவியல் துறை,க.விக்ரம் சித்தார்த்தா, இளநிலை ஆராய்ச்சியாளர்,உழவியல் துறை,வேளாண்மைக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், மதுரை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !