உள்ளூர் செய்திகள்

மண் வளம் காப்போம்... பொன் வளம் பெறுவோம்...

இயற்கை நமக்களித்த இணையற்ற வளங்களில் ஒன்றான மண் வளத்தை பொறுத்தே மனித சமுதாயத்தின் வாழ்வும், மறைவும் அமைந்துள்ளது. அனைத்து உயிரினங்களும் மண்ணை சார்ந்தே வாழ்கின்றன. மண்ணின்றி வாழ்வில்லை; வாழ்வின்றி மண்ணில்லை. மண் வளம் காத்திட தேசிய அளவிலான 'மண் வள அட்டை வழங்கல்' திட்டத்தை பிரதமர் மோடி துவக்கி வைத்தபோது, ''நலமான மண்ணே பசுமையான பண்ணைக்கு வழிவகுக்கும்,'' என்றார். வேளாண்மையில் தாவர வளர்ச்சிக்கு மண் ஒரு மிக முக்கியமான ஊடகமாகவும், உயிரினங்களின் நலத்திற்கு வளமான மண்ணே அடிப்படை ஆதாரமாகவும் அமைகிறது. உலகளவில் மண் வளம், மண் நலம் மற்றும் அதன் மேலாண்மையின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் 'சர்வதேச மண் அறிவியல் கூட்டமைப்பு 2012ம் ஆண்டு முதல் ஆண்டு தோறும் டிச.,5 ம் தேதி 'மண் வள நாள்' கொண்டாடப்படும் என அறிவிப்பு செய்து வளமான மண்ணின் முக்கியத்துவத்தை அனைவரும் உணர்ந்து, நீடித்த நிலையான மண்வள மேம்பாட்டு முறைகளை பின்பற்றிட வேண்டும், என வலியுறுத்தியது.உணவு, தீவனம்மக்கள் தொகை பெருக்கத்துக்கு ஏற்ப தேவையான உணவு உற்பத்திக்காக அதிக விளைச்சல் தரும் தீவிர பயிர் சாகுபடி முறைகளில் தொடர்ந்து ஈடுபட வேண்டிய தவிர்க்க இயலாத சூழ்நிலையில் இந்தியா உள்ளது. 2015 - 16ம் ஆண்டு 273 மில்லியன் டன் உணவு தானிய உற்பத்தி செய்த இந்தியா 2025ம் ஆண்டில் எதிர்பார்க்கப்படும் 1.5 பில்லியன் மக்கள் தொகைக்கு 325 மில்லியன் டன் உணவு உற்பத்தி செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. கடந்த 40 ஆண்டுகளில் ஆண்டிற்கு 43.1 டன்னாக இருக்கும் உணவு உற்பத்தி அதிகரிப்பு வீதம் 7.3 மில்லியன் டன்னாக அதிகரிக்க வேண்டும், என புள்ளியியல் விபரங்கள் தெரிவிக்கின்றன. உலகின் மொத்த நிலப்பரப்பில் 2.3 சதவிகிதத்தையும், நன்னீர் வளங்களில் 4.0 சதவிகிதத்தையும் கொண்டுள்ள இந்தியா, உலக மக்கள் தொகையில் 17.5 சதவிகிதத்தினருக்கு உணவும், கால்நடைகளில் 4.0 சதவிகிதத்திற்கு தீவனமும் தர வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளது.மண் வளம் என்பது பயிர் வளர்ச்சிக்கு தேவையான இன்றியமையாத 17 ஊட்டச்சத்துக்கள் போதுமான அளவில் பயிர்கள் எடுத்து கொள்ளும் வகையில் இருப்பதாகும். தீவிர சாகுபடி விவசாயத்தில் அதிக விளைச்சலை பெற மண்ணில் இருந்து அதிக ஊட்டச்சத்துக்களை எடுத்து கொள்கிறது. மண்ணில் இருந்து எடுக்கப்படும் ஊட்டச்சத்துக்களை திரும்பவும் மண்ணிற்கு அளித்தால் தான், அந்த மண் வளம் குன்றாத மண்ணாகவும், பயிர் மகசூல் குறையாததாகவும் இருக்கும். மண் பரிசோதனை செய்யாமல் பொது பரிந்துரைப்படி உரமிடுவதால் பயிர்களின் தேவைக்கு அதிகமாகவோ அல்லது குறைவாகவோ உரமிடும் சூழ்நிலை ஏற்படலாம். இதனால் விவசாயிகளுக்கு இடுபொருள் செலவு அதிகமாகவோ அல்லது மகசூல் குறைவாகவோ ஏற்படலாம். இதை தவிர்க்க மண் பரிசோதனை அவசியம். இதன் மூலம் மண் வளம் அறிந்து ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து நிர்வாகம் செய்வதே சிறந்தது.-ப.பாக்கியாத்து சாலிகாதுணை பேராசிரியைவேளாண் அறிவியல் நிலையம் அருப்புக்கோட்டை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !