நவீன தொழில்நுட்பம்
தாட்பூட் பழம் (பேசன் புரூட்): பாஷபுளோரா எடுலிஸ் எனப்படும் இச்செடி ஒரு கொடி வகையைச் சார்ந்தது. இச்செடியின் பழங்களிலிருந்து பழக்கூழ், பழப்பாகு, பழ ஊறல் உண்ணாங்காய் (சாலட்) போன்றவை தயாரிக்கலாம். இதன் மலர்கள் அழகிய தோற்றம் கொண்டவை. இவற்றை அழகுக்காக வீடுகளில் வளர்க்கலாம். இக்கொடி தமிழகத்தில் அதிகமாக குன்னூரைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் கொடைக்கானலிலும் வளர்க்கப்படுகிறது. கோவையிலும் கர்நாடகாவிலும் வீடுகளில் அதிகமாக வளர்க்கப்படுகிறது.கடல் மட்டத்திலிருந்து 1000 மீட்டருக்கு மேல் உள்ள இடங்களில் குளிர்ந்த சூழ்நிலை கொண்ட பகுதிகள் இதன் வளர்ச்சிக்கு ஏற்ற இடங்களாகும். சமவெளிப் பகுதிகளில் கோடைகாலத்தில் அதிக வெப்பமுள்ள இடங்களில் இக்கொடிகள் அதிகமாக காய்க்காது. மலை அடிவாரங்கள் இதன் சாகுபடிக்கு மிகவும் ஏற்றவை. கடும் கரிசல், வடிகால் வசதியற்ற பூமி தவிர மற்ற வகை மண்ணில் இது நன்கு வளரும்.தாட்பூட் பழ கொடிகளில் 6 வகைகள் உண்டு. தவிர 13 வகைகள் அழகிய மலருக்காகவும் காட்டுச் செடிகளாகவும் வளர்க்கப்படுகின்றன. வணிகத் திற்காக கருமை கலந்த ரோஜா நிற தாட்பூட் ரகமும் மஞ்சள் நிற பழ ரகமும் வளர்க்கப் படுகின்றன.இனப்பெருக்கம்: விதைகள் மூலம் இனப்பெருக்கம் செய்யலாம். ஒரு பழத்தில் சுமார் 150 விதைகள் இருக்கும். விதைகளை எடுத்தவுடன் முளைக்கப்போட வேண்டும். விதைகளை நாற்றங்காலில் 10-15 செ.மீ. இடைவெளிவிட்டு நட்டு ஒரு மாதத்தில் பிடுங்கி குழிகளில் நடவு செய்யலாம். கொடிகள் 40-60 செ.மீ. வளர்ந்தவுடன் பிடுங்கி நடலாம். முற்றிய பருமனுள்ள 3-5 மறைகளைக் கொண்டுள்ள குச்சிகளை நடுவதற்கு பயன்படுத்தலாம். இம்முறையில் செடிகள் ஒன்றுபோல் விளைச்சலுக்கு வரும்.நடுதல்: இக்கொடிகள் தனியாக பயிரிடப் படுகின்றன. அல்லது பழத் தோட்டங்களில் பழமரங்களுக்கு மத்தியில் நடப்படுகின்றன. பின் அவற்றை நீண்டவரிசை கம்பிகளின் மீது படரவிட வேண்டும். செடிகளுக்கு இடையே 3 -4 மீட்டர் இடைவெளி கொடுக்க வேண்டும். தேவைக்கேற்ப நட்டதிலிருந்து பாசனம் செய்ய வேண்டும். கடுங்குளிர் உள்ள இடங்களில் செடிகளின் தண்டைச்சுற்றி வைக்கோல் சுற்றி பாதுகாக்க வேண்டும். ஒரு வயதுக்கு மேற்பட்ட கொடிகளுக்கு 10 கிலோ தொழு உரம், 500 கிராம் 3ம் நம்பர் கலப்பு உரம் கலந்து வைக்கலாம்.கவாத்து செய்தல்: புதிய தளிர்கள் அதிகமாக தோன்றுமாறு ஒவ்வொரு ஆண்டும் பழைய குச்சிகளை கவாத்து செய்யவேண்டும். இரும்பு கம்பிகளை நட்டு அதன் ஊடே கீழ்கம்பி 40 செ.மீ. உயரத்திலும் அதிலிருந்து 30 செ.மீ. இடைவெளியில் 2வது, 3வது, 4வது வரிசையும் அமைத்து அவற்றின்மீது கொடிகளைப் படரவிட வேண்டும்.விளைச்சல்: இக்கொடிகள் பொதுவாக மே மாதம் முதல் நவம்பர் மாதம் வரை அதிக பழங்களைத் தருகின்றன. பழங்கள் முதிர்ச்சி அடைந்துவிட்டதா என்பதை அதன் நிறத்தை வைத்து கண்டுகொள்ளலாம். பழங்களை சரியான பருவத்தில் அறுவடை செய்தால் சில நாட்களுக்கு கெடாமல் இருக்கும். நல்ல சூழ்நிலையில் வளரும் ஒரு கொடியிலிருந்து சுமாராக 7-9 கிலோ அல்லது 200-250 பழங்கள் விளைச்சலாகப் பெறலாம்.பயிர் பாதுகாப்பு: பழ ஈக்கள், நாவாய்ப்பூச்சிகள், சிலந்திப்பூச்சி, இலைப்புள்ளி நோய், பைட்டாப்தோரா பிளைட் நோய், பியூசோரியம் வாடல் நோய் போன்றவற்றை சிபாரிசுப்படி, தக்க பூச்சி, பூஞ்சானக் கொல்லிகளைப் பயன்படுத்தி செடிகளை பாதுகாக்க வேண்டும். (தகவல்: முனைவர் மு.ஆனந்தன், முனைவர் ம.கண்ணன், தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம், தடியன்குடிசை-624 212. 94438 22291)-டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்