உள்ளூர் செய்திகள்

நவீன தொழில்நுட்பம்

பயறுவகைப்பயிர்கள் ஒருங்கிணைந்த அறுவடை இயந்திரம்: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின்கீழ் இயங்கும் வம்பன் தேசிய பயறுவகை ஆராய்ச்சி மையத்தின் மூலம் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. இந்த இயந்திரம் அறுவடை செய்யும் பகுதி, மணிகளை பிரித்தெடுக்கும் பகுதி, தூற்றும் பகுதி ஆகிய மூன்று பகுதிகளைக் கொண்டுள்ளது. இதன் உள்ளே மணிகளைக் கோணிப்பைகளில் சேகரிக்கும் பகுதியும் உள்ளது. அறுவடை செய்யும்போது பயறுவகைப் பயிர்கள் தரைமட்டத்திற்கு மேல் அறுவடை செய்யப்பட்டு உள்வாங்கிக் கொள்கின்றன.அறுவடை இயந்திரத்தைப் பயன்படுத்தும்போது ஏக்கருக்கு ரூ.1180 மட்டுமே செலவாகிறது. ஆனால் நடைமுறை பணியாளர்களைக் கொண்டு அறுவடை செய்வதால் ரூ.3500 செலவாகிறது. எனவே இயந்திரத்தினைக் கொண்டு அறுவடை செய்வதால் ஏக்கருக்கு ரூ.2320 வரை சேமிக்கலாம்.தஞ்சாவூர் மாவட்டம், பனையக்கோட்டை என்ற கிராமத்தைச் சேர்ந்த பி.ஆர்.ராஜேந்திரன் என்ற விவசாயி காரீப் பருவத்தில் தனது தோட்டக்கால் உளுந்து பயிரை ஒருங்கிணைந்த அறுவடை இயந்திரத்தைப் பயன்படுத்தி சுமார் 30 ஏக்கர் அறுவடை செய்து பயனடைந்துள்ளார். மேலும் அவர் தனது அனுபவத்தைக் கூறுகையில் பணியாளர்களைக் கொண்டு அறுவடை செய்வதைவிட இந்த இயந்திரத்தைப் பயன்படுத்தும்போது சுமார் 40 சதவீதம் செலவு குறைவதாக கூறுகிறார். பணியாளர் பற்றாக் குறையால் நெல் அறுவடை இயந்திரத்தைப் பயன்படுத்தி உளுந்தை அறுவடை செய்தார். அதில் மண்கட்டிகளும் சேர்ந்து வந்ததால் மீண்டும் சுத்தப்படுத்த சற்று கூடுதல் செலவாகிறது. ஆனால் தேசிய பயறுவகை ஆராய்ச்சி மைய அறுவடை இயந்திரத்தைப் பயன்படுத்தும் போது இதுபோன்ற சிரமங்கள் இல்லாமல் சுத்தமான மணிகள் கிடைத்தன.மேலும் சாதாரண முறையில் பணியாளர்களை வைத்து அறுவடை செய்யும்போது ஒரு ஏக்கருக்கு அறுவடை செய்ய 1500 ரூபாயும், வயலிலிருந்து களத்திற்கு கொண்டுவருவதற்கு கூலியாக 600 ரூபாயும், டிராக்டர் கொண்டு மணிகளைப் பிரித்தெடுக்க 1300 ரூபாயும், ஆகமொத்தம் ரூ.3400 செலவு பிடித்தது. ஆனால் இயந்திரத்தைப் பயன்படுத்தி அறுவடை செய்யும்போது அதிக அளவாக 2 மணி நேரமாகிறது. செலவு ரூ.1800 மட்டுமே. இயந்திரத்தைப் பயன்படுத்தும்போது நேரம் மிச்சப்படுவதோடு பணியாளர்கள் தேவையும் குறைகிறது.இயந்திரத்தைக் கொண்டு அறுவடை செய்ய ஏக்கருக்கு ஒரு மணி முதல் ஒன்றரை மணி நேரமே ஆகிறது என்று அனுபவ விவசாயி தெரிவிக்கிறார். குறித்த நேரத்தில் அனைத்து வேலைகளும் முடிந்துவிடுவதால் மழை, காற்று, விலங்கினங்களால் ஏற்படும் சேதம் பெருமளவு தவிர்க்கப்படுகிறது. எனவே உழவர்கள் அறுவடை இயந்திரத்தைப் பயன்படுத்தி பயனடையலாம். (தகவல்: முனைவர் சே.கீதா, முனைவர் செ.க.நடராஜன், முனைவர் ப.ராஜரத்தினம், தேசிய பயறுவகை ஆராய்ச்சி மையம், வம்பன். 04322-296 447)-டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !