உள்ளூர் செய்திகள்

ஊட்டச்சத்து நிர்வாகம் ஒரு உடனடித்தேவை

நைட்ரஜன் (யூரியா போன்றவை) உரங்களுக்கு விவசாயிகள் அளித்துவரும் முக்கியத்துவம் என்.பி.கே. என்ற ஊட்டச்சத்துக்களின் வரிசையில் பி மற்றும் கே எனப்படும் பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசிய உரங்களுக்கு வழங்கப்படுவதில்லை. இதன் முக்கிய காரணம் ஊட்டச்சத்து நிர்வாகம் குறித்த அறியாமையே.இதில் அதீத நைட்ரஜன் உரப்பயன்பாடு உற்பத்தியை ஊக்குவிப்பதற்கு பதிலாக குறைந்த அளவே பயிர்களால் உறிஞ்சப்பட்டு, மிகுதிப்பகுதி நிலத்தில் தங்கிவிடுகின்றது. இது மண்ணின் தன்மையை பெரிதும் மாற்றி அமைக்க வழிகோலுகிறது. சமச்சீரற்ற சாம்பல்சத்து (பொட்டாசியம்) நிர்வாகம் பயிர்களில் பூச்சி மற்றும் நோய் பிரச்னையை அதிகரித்து விளைச்சலை பெரிதும் பாதிக்கிறது.இந்த பேரூட்டச் சத்துக்களைத்தவிர மிக இன்றியமையாத நுண்ணூட்டச் சத்துக்களான கால்சியம், கந்தகம், துத்தநாகம், இரும்பு, போரான், மாங்கனீசு மற்றும் தாமிரம் போன்றவை பயிர்களுக்கு மிகக் குறைந்த அளவே தேவைப்பட்டாலும் அவற்றின் பங்கு விளைச்சலை உயர்த்துவதில் மகத்தானது என்பது விவசாயிகளின் மத்தியில் சரிவர விதைக்கப்படவில்லை என்பதே உண்மை.இந்த நுண்ணூட்டச்சத்துக்களின் குறைபாடு பயிர்களில் விளைச்சலைப் பெருமளவு பாதிப்பதோடு மட்டுமின்றி, மண்ணில் வாழும் நன்மை தரும் நுண்ணுயிர்களின் செயல்பாட்டையும் குறைக்கின்றன. இதன் காரணமாக மண்ணின் நுண்ணுயிர் நைட் ரஜன் நிலைப்பாடு, மணிச்சத்தின் ஊட்டம் ஆகிய உயிரியல் செயல்பாடுகளும் பாதிக்கப்படுகின்றன.மேலும் சமச்சீரான ஊட்டம் பயிருக்கு நோய் மற்றும் பூச்சிகளுக்கான எதிர்ப்பு தியை அளிப்பதோடு மட்டுமல்லாமல் மண்ணின் வளத்தையும் காத்து உணவு உற்பத்தியை மேம்படுத்துகிறது. மேலும் ஒவ்வொருபயிரும் தன் வளர்ச்சிப்பருவத்தில் ஒரு குறிப்பிட்ட ஊட்டச்சத்தை அத்தியாவசியமாகக் கொண்டது. உதாரணமாக துத்தநாகம் பருத்தியில் பூ வளர்ச்சிக்கும், போரான் வேர்க்கடலையில்கொட்டை வளர்ச்சிக்கும், மாலிப்டினம் பருப்பு வகைகளில் வேர் வளர்ச்சிக்கும் துணைபுரிகின்றன. எனவே சரியான பருவத்தில் சரியான விகிதத்தில் வழங்கப்படும் ஊட்டச்சத்து பயிரின் வளர்ச்சிக்கு மிகவும் இன்றியமையாதது.-மு.வித்யா, திருவள்ளூர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !