மாம்பழங்களை கால்சியம் கார்பைடு உபயோகித்து பழுக்கவைப்பதால் ஏற்படும் தீமைகள்
கால்சியம் கார்பைடு: இது ஒரு ரசாயனப் பொருள். சுத்தமான ரசாயனப் பொருள் வெண்மை நிறமாகவும், சற்று கலப்படமான நிலையில் கருப்பு கலந்த சாம்பல் நிறத்துடனும் இருக்கும். வெள்ளைப்பூண்டின் வாசனை சிறிதளவு இருக்கும். இதில் ஆர்சனிக் மற்றும் பாஸ்பரஸ் ஹைட்ரைடு போன்ற நச்சுப் பொருட்கள் இருக்கும். இவற்றின் மீது ஈரம் பட்டவுடன் அசிட்டிலின் என்ற வாயுவை வெளியேற்றுகின்றது. இவ்வாயு பழங்களைப் பழுக்கவைக்கின்றது. இதன் விலை கிலோ ரூ.25-30 வரை இருக்கும். ஒரு கிலோ இவ்வுப்பைக் கொண்டு சுமார் 200 கிலோ வரை மாம்பழங்களை பழுக்க வைக்க முடியும். தேவையான அளவு கார்பைடு உப்பை ஒரு பேப்பரில் கட்டி பழப்பெட்டிகளை லாரியிலோ குடோனிலோ அடுக்கும்போது அதனுள் வைத்துவிட்டால் 24-48 மணி நேரத்திற்குள் பழங்களின் மேற்தோல் முழுவதும் ரகத்திற்கு ஏற்றவாறு கலர் மாறிவிடும். முற்றிய காய்களிலுள்ள ஈரம் மற்றும் காய்கள் சுவாசிக்கும்போது ஏற்படக்கூடிய வெப்பத்தாலும் காய்கள் எளிதில் கலர் மாற உதவுகின்றன.பழுக்கும் முறை: முற்றாத காய்களை பழுக்கவைக்க சற்று அதிகமாக கற்கள் வைக்க வேண்டும். கற்கள் மூலம் பழுத்த பழங்களின் மேல்தோல் மட்டுமே மஞ்சள் நிறமாக மாறும். அதன் உள்ளே எந்தவிதமான ரசாயன மாற்றம் இன்றி அப்படியே இருக்கும். அதனால் இனிப்பு சுவை குறைந்து பழங்கள் மணமின்றி இருக்கும். இயற்கையிலேயே பழுத்த பழங்களின் மேற்தோல் ஒரே சீராக கலர் மாறி இருக்காது. ஆனால் கார்பைடு உபயோகித்து பழுக்கவைத்த பழங்களின் மேற்தோல் ஒரே சீராக மஞ்சள் நிறமாகத் தோற்றமளிக்கும். மணம் குன்றி இருக்கும். இதை வைத்தே கல் வைத்து பழுக்கவைத்த பழங்களைக் கண்டறியலாம். இந்த வேதிப்பொருள் மேலைநாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளது.உடல்நலக்கேடு: கால்சியம் கார்பைடிலுள்ள ஆர்சனிக் மற்றும் பாஸ்பரஸ் ஹைட்ரைடு உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியவை. இதன் அளவு அதிகமாகும்போது புற்றுநோய் வர வாய்ப்புள்ளது. சுமார் 33-35 சதவீத அசிட்டிலின் வாயுவை ஒருவர் சுவாசித்தால் 5-7 நிமிடங்களில் மயக்கமடையலாம். கார்பைடு உபயோகித்து பழுக்க வைத்த பழங்களை உண்பதால் வாந்தி, பேதி, நெஞ்சில் எரிச்சல், குடற்புண், கண்களில் எரிச்சல், மூச்சு விடுவதில் சிரமம் மற்றும் உணவை விழுங்குவதில் சிரமம் போன்ற உடல்நலக்கேடுகள் உண்டாகலாம். தொடர்ந்து இவ்வாறு பழுக்க வைத்த பழங்களைச் சாப்பிட்டால் தூக்கமின்மை, தலைவலி, குறைந்த ரத்த அழுத்தம் போன்ற உடல்நலக்கேடுகள் உண்டாகும். கர்ப்ப காலத்தில் பெண்கள் கண்டிப்பாக செயற்கையாக பழுக்க வைத்த பழங்களை உண்ணக்கூடாது. பழங்களின் மேற்தோல் ஒரே சீராக மாறி இருந்தால் அது கல்வைத்து பழுக்க வைத்தது என்பதை கண்டறியலாம். தெரிந்தோ தெரியாமலோ கல்வைத்து பழுத்த பழங்களை வாங்கினால் தண்ணீரில் 5 நிமிடம் நன்கு கழுவ வேண்டும். பழத்தை அப்படியே சாப்பிடாமல் தோலை நீக்கிவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி உண்ணலாம். இப்பழங்களை அதிக நாட்களுக்கு சேமித்து வைக்க இயலாது. மாம்பழ சீசன் துவங்கியஉடனே சந்தைக்கு வரும் பழங்கள் பெரும்பாலும் கல்வைத்து பழுக்க வைத்ததாக இருக்கலாம். பொதுவாகவே ஜூன்-ஜூலை மாதங்களில் சந்தைக்கு வரும் பழங்கள் இயற்கையாகவே பழுக்க வைத்தவையாக இருக்கும்.கொ.பாலகிருஷ்ணன், பேராசிரியர் (பயிர் வினையியல்),கு.சிவசுப்பிரமணியம், பேராசிரியர் மற்றும் தலைவர்,விதை நுட்பவியல் துறை,வேளாண்மைக் கல்லூரி,மதுரை-625 104.