கன்றுகளின் தொப்புள் காக்க
தொப்புள் கொடி என்பது கன்று, தாயின் கர்ப்பப்பையில் வளரும் பொழுது கன்றுக்கு தாயிடம் இருந்து உணவு, ஆக்சிஜன் போன்றவற்றை ரத்தத்தின் வழியாக பெறுவதற்கும், வளரும் கன்றில் உற்பத்தியாகும் கழிவுகளையும், கார்பன் டை ஆக்சைடையும், ரத்தத்தின் மூலம் வெளியேற்றவும் உதவும் ரத்தக்குழாய் ஆகும். கன்று பிறந்ததும் இந்த ரத்தக்குழாய் துண்டிக்கப்படுகிறது. அந்த துண்டிக்கப்பட்ட ரத்தக்குழாயின் மூலம் நோய்களை ஏற்படுத்தும் கிருமிகள் நுழைந்து 'டிடான்ஸ்' எனும் ரண ஜன்னி, காய்ச்சல், தொப்புள்கட்டி முதலியவை கன்றை தாக்கி, உயிரிழப்பு அல்லது வளர்ச்சியில் குறைபாடோ ஏற்படும். அதனால் அந்த கன்று வளர்ச்சி தடைபடும், பருவமடைதல், சினைப்படுதல் போன்றவை தடைபடும். அது மாடு வளர்ப்பில் பொருளாதார இழப்பை ஏற்படுத்தும். அதாவது பிறந்த கன்றின் தொப்புள் கொடியை ஓரிரு அங்குலம் விட்டு சுத்தமான கத்திரியால் வெட்டி விட்ட பின், டெட்டால் அல்லது டிஞ்சர் அயோடின், பி விடோன், குளோரின் கரைசல் முதலியவற்றில் ஏதாவது ஒன்றில் தொப்புள் கொடியை முக்கிவிட வேண்டும்.முடிந்தால் சிறு நுாலால் தொப்புள் கொடி உடலுடன் சேருமிடத்தில் சுற்றி கட்டுப்போட வேண்டும். அதன் பின் தளர்வாக பஞ்சு சுற்றிய குச்சியை டெட்டாலில் நனைத்து தொப்புள் கொடியினுள் நுழைத்து, பஞ்சு மட்டும் தொப்புள் குழாய்க்குள் நிற்கும் படியாக விரலால் பஞ்சைப் பிடித்து கொண்டு, குச்சியை இழுத்து விட்டு தொப்புள் கொடியின் நுனியில் மற்றொரு சிறு நுாலால் கட்ட வேண்டும். இதன் மூலம் தொப்புள் கொடியினுள் உள்ள கிருமி நாசினி நனைக்கப்படும். பஞ்சு தொப்புள் கொடியில் இருந்து கொண்டு கிருமிகள் கன்றின் உடலினுள் நுழையா வண்ணம் காக்கிறது. சில சமயங்களில் பிறந்த கற்றின் தொப்புள் கொடியை காகம், கோழிகள் கொத்தி புண்ணாக்கி விடும். இதை தவிர்க்க டெட்டால் அல்லது டிஞ்சர் அயோடினை பேப்பர் கப் ஒன்றில் ஊற்றி அதில் தொப்புள் கொடியை முக்கி எடுத்து பாதுகாக்கலாம். இதன் மூலம் கன்றுகளை தாக்கும் தொப்புள்கட்டி, மூட்டு வீக்கம், டிடானஸ், கழிச்சல் நோய்களில் இருந்து பாதுகாக்கலாம். தொடர்புக்கு 99628 04745.- டாக்டர் வீ.கே.விரேஸ்வரன் முன்னாள் துணை இயக்குனர்கால்நடை பராமரிப்புத்துறை சென்னை