பெங்களூரு: ''வாழ்க்கையில் 15 முதல் 25 வயது ரொம்ப முக்கியமானது. இந்த வயதில் சரியான பாதையில் செல்ல வேண்டும். வழி தவறினால் விழுந்து விடுவீர்கள். கஷ்ட காலத்தில் யாரும் உதவ மாட்டார்கள். நிறைய பேருக்கு நம்மால் யோசித்து கூட பார்க்க முடியாத கஷ்டம் உள்ளது. அதை எல்லாம் மீறி சாதித்தவர்கள் நிறைய பேர் உள்ளனர்,'' என தார்வாட் கலெக்டர் திவ்யா பிரபு உற்சாகமூட்டி பேசினார். கர்நாடக தமிழ் பத்திரிகையாளர் சங்கம் சார்பில் நடக்கும், நான்காவது தமிழ் புத்தக திருவிழாவில் தமிழ் ஐ.ஏ.எஸ்., அதிகாரியும், பெங்களூரு குடிநீர் மற்றும் வடிகால் வாரிய தலைவருமான ராம்பிரசாத் மனோகர் எழுதிய, ''கருவில் இருந்து கலெக்டர் வரை,'' என்ற புத்தகம் அறிமுக நிகழ்ச்சி நேற்று நடந்தது. ஸ்ரீராமபுரம் லிட்டில் பிளவர் பள்ளி செயலர் மதுசூதனபாபு தலைமையில் நடந்த நிகழ்ச்சியில், ராம்பிரசாத் மனோகர், அவரது மனைவியும், தார்வாட் கலெக்டருமான திவ்யா பிரபு உள்ளிட்டோர் புத்தகத்தை வெளியிட்டனர். புதிய யோசனைகள் தார்வாட் கலெக்டர் திவ்யா பிரபு பேசியதாவது: மாணவர்களின் அறிவை வளர்க்க, புத்தக திருவிழா நடத்தும் கர்நாடக தமிழ் பத்திரிகையாளர் சங்கத்திற்கு எனது வாழ்த்துகள். இங்கு மாணவர்கள் நிறைய பேர் வந்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. கருவில் இருந்து கலெக்டர் வரை புத்தகம் தற்போது தமிழில் வெளியிடப்பட்டு உள்ளது. இன்னும் சில மாதங்களில் ஆங்கிலம், கன்னடத்தில் மொழி பெயர்த்து வெளியிடப்படும். நான் ஆறாம் வகுப்பு படிக்கும் போது, எனக்கு கலெக்டர் ஆக ஆசை வந்தது. முதலில் வங்கியில் பணியாற்றினேன். ஐ.எப்.எஸ்., அதிகாரியாக தேர்வு எழுதி வெற்றி பெற்று, உத்தர கன்னடாவின் பட்கல்லில் முதலில் பணியாற்றினேன். பின், கலெக்டர் ஆக வேண்டும் என்ற எனது ஆசையை நோக்கி, பயணம் செய்தேன். நான் ஐ.ஏ.எஸ்., தேர்வு எழுதிய போது 9 மாத கர்ப்பிணியாக இருந்தேன். குழந்தை பிறந்த நான்கு மாதங்களில், ஐ.ஏ.எஸ்., பயிற்சிக்கு சென்றேன். இப்போது உங்கள் முன்பு ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக நிற்கிறேன். மாணவர்களாகிய நீங்கள் கனவு காணுங்கள், வெற்றி பெறுங்கள். நம்பிக்கையை வளர்த்து கொள்ளுங்கள். வாழ்க்கையில் முன்வர முடியும். 15 முதல் 25 வயது ரொம்ப முக்கியமானது. இந்த வயதில் நீங்கள் செல்லும் பாதையில் சரியாக செல்லுங்கள். வழி தவறினால் விழுந்து விடுவீர்கள். கஷ்ட காலத்தில் யாரும் உதவ மாட்டார்கள். நிறைய பேருக்கு நம்மால் யோசித்து கூட பார்க்க முடியாத கஷ்டம் உள்ளது. அதை எல்லாம் மீறி சாதித்தவர்கள் நிறைய பேர் உள்ளனர். எனது கணவர் கூட சாதாரண குடும்பத்தில் இருந்து வந்தவர். அவருக்கு யாரும் வழிகாட்டி இல்லை. அவர் பட்ட கஷ்டங்களை எல்லாம் புத்தகத்தில் கூறி உள்ளார். புத்தகம் படிப்பது அறிவை வளர்க்கும். புது யோசனைகள் கொடுக்கும். இவ்வாறு பேசினார். சர்க்கஸ் பின், ராம்பிரசா த் மனோகர் பேசியதாவது: நான் எழுதி இருக்கும் புத்தகத்தில் உள்ள காதல், நட்பு ஆகிய இரண்டு விஷயங்கள் குறித்து பேச உள்ளேன். 35 ஆண்டுகளுக்கு முன்பு, எனக்கு 10 வயது இருந்த போது 3 ம் வகுப்பு படித்தேன். அந்த வகுப்பில் 32 பேர். இறுதி தேர்வில், நான் 32 வது ரேங்க் எடுத்தேன். அழுது கொண்டே வீட்டிற்கு சென்ற போது, எனது தந்தை சர்க்கஸ் அழைத்து சென்றார். அங்கு யானை, ஜோக்கரின் சொல்படி நடப்பதை கண்டேன். பெரிய உரு வம் கொண்ட யானை, ஜோக்கர் பேச்சை கேட்பது பற்றி தந்தையிடம் கேட்ட போது, காலில் கட்டி இருக்கும் சங்கிலிக்கு பயப்படுவதாக கூறினார். அன்று என் மனதில் ஒரு எண்ணம் தோன்றியது. தடைகளை உடைத்து முன்னேற வேண்டும் என்று நினைத்தேன். 'நம்மால் முடியாது என்று நினைக்கவே கூடாது. உங்கள் மீது நீங்கள் நம்பிக்கை வையுங்கள்; உங்களை நீங்களே காதலியுங்கள்'. இது தான் நான் பேச வந்த காதல் பற்றிய விஷயம். பள்ளி படிப்பு முடித்த பின், எனக்கு டாக்டர் ஆக வே ண்டும் என்று ஆசை இருந்தது. ஆனால் அரசு கல்லுாரியில் மருத்துவ சீட் கிடைக்கவில்லை. பின், அரசு கால்நடை மருத்துவமனை கல்லுாரியில் சேர்ந்தேன். அங்கு சேர்ந்த பின், எனக்கு விஞ்ஞானி ஆக வேண்டும் என்று ஆசை வந்தது. கடந்த 2000 ல் கல்லுாரியில் மூன்றாம் ஆண்டு படித்த போது, மத்திய அரசு சார்பில் இளம் விஞ்ஞானிகளுக்கா ன ஸ்காலர்ஷிப் அறிவிக்கப்பட்டது. அதற்கு விண்ணப்பித்தேன். என்னுடன் இருந்தவர்கள் 100 கோடி மக்கள் உள்ள நாட்டில், வெறும் 10 பேருக்கு தான் ஸ்காலர்ஷிப் கிடைக்கும்; நீ எதற்கு விண்ணப்பிக்கிறாய் என்று கேட்டனர். ஆனாலும் நம்பிக்கையுடன் இரு ந்தேன். நண்பர் தைரியம் ஸ்காலர்ஷிப் பெற ஆறு மாதமாக தேர்வுக்கு தயாரானேன். தேர்வில் கலந்து கொள்ள தேர்வாகி டில்லி சென்றேன். அங்கு வந்திருந்த 100 க்கும் மேற்பட்டோர், டிப் டாப் ஆக, ஆங்கிலத்தில் பேசினர். எனக்குள் ஒரு வித பயம். ஆனாலும் 100 கோடி பேரில் ஒருவராக, இங்கு வரை வந்து உள்ளேன் என்று நினைத்து எனக்கு நானே ஆறுதல் கூறினேன். தேர்வில் கலந்து கொண்டு திரும்பினேன். சி ல நாட்களில் வெளியான தேர்வு முடிவில் வெற்றியும் பெற்றேன். ஸ்காலர்ஷிப் ஆக மாதம் 8,000 ரூபாய் கிடை க்க போவதை நினைத்து மகிழ்ச்சி அடைந்தேன். ஆனால் அந்த மகிழ்ச்சி நீடிக்கவில்லை. வயது வரம்பு காரணமாக எனது ஸ்காலர்ஷிப் ரத்து செய்யப்பட்டதாக எனக்கு கடிதம் வந்தது. கடிதத்தை கையில் வைத்து கொண்டு அழுதேன். தற்கொலை செய்யும் எண்ணம் வந்தது. கல்லுாரியின் மொட்டை மாடிக்கு சென்று நின்றேன். எனது நண்பரான ராஜா என்பவர் வந்து, எனக்கு ஆறுதல் கூறி தைரியம் அளித்தார். அந்த நேரத்தில் எனக்கு தோன்றியது, நன்கு படித்து நாட்டிற்கு சேவை செய்ய வேண்டும் என்று. அதன் விளைவு தான் இப்போது ஐ.ஏ.எஸ்., ஆக உள்ளேன். அன்று எனக்கு ஆறுதல் கூறி தேற்றியது எனது நண்பர் தான். நீங்களும் நல்ல நண்பர்களை பெறுங்கள். தோல்வி வந்தால் எதிர்கொள்ளும் தைரியத்தை வரழையுங்கள். உங்களை யாராலும் நிறுத்தவே முடியாது. ஐ.ஏ.எஸ்., தேர்வை எதிர்கொள்ள நினைக்கும் ஏழை, எளிய மாணவர்களுக்கு aspire with ram ias என்ற பெயரில் இணையம் வழியாக, இலவச பயிற்சி அளிக்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
விழா துளிகள்
புத்தக வெளியீட்டு விழாவுக்காக ஸ்ரீராமபுரம் லிட்டில் பிளவர் பள்ளி மாணவர்கள், ஐந்து கல்லுாரி மாணவர்கள் வந்ததால் அரங்கமே நிரம்பி வழிந்தது. கருவில் இருந்து கலெக்டர் வரை புத்தகம் 25 மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது. முதலில் தமிழில் பேசிய திவ்யாபிரபு, பின் கன்னடத்தில் பேசிய போது அரங்கமே அதிர்ந்தது. ராம்பிரசாத் மனோகருக்கும், திவ்யாபிரபுவுக்கும் திருமணம் முடிந்து நேற்றுடன் 15 ஆண்டுகள் நிறைவு அடைந்தது. இதுபற்றி ராம்பிரசாத் மனோகர் கூறிய போது, அரங்கில் இருந்தவர்கள் கைதட்டி வாழ்த்து தெரிவித்தனர். திவ்யாபிரபுவின் அசத்தலான பேச்சை, மேடை, அரங்கில் இருந்தவர்கள் கண்சிமிட்டாமல் பார்த்தனர். தனது பேச்சின் போது ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங், கங்கேரியன் நாட்டின் துப்பாக்கி சூடு வீரர் கரோலி டகாக்ஸ் செய்த சாதனைகள் பற்றி பேசியது, அனைவரையும் கவர்ந்தது. மாணவர்களுக்கு புத்தகம் வாங்குவதற்காக தலா 100 ரூபாய் மதிப்பிலான சிலிப்பை வழங்கினர்.