இது பெங்களூரா... ஊட்டி, கொடைக்கானலா? எப்போதும் இல்லாத அளவில் வாட்டி வதைக்கும் குளிர்
பெங்களூரு: பெங்களூரு மக்கள் கடந்த ஒரு வாரமாக கடுமையான குளிரை எதிர்கொள்வதால், 'பெங்களூரில் தான் இருக்கிறோமா அல்லது ஊட்டி, கொடைக்கானலில் இருக்கிறோமா' என்று வியப்புடன் உள்ளனர். பெங்களூரில் வானிலை வழக்கமாக வெப்பமாகவோ அல்லது சாதாரணமாகவோ இருக்கும். கடந்த ஒரு வாரமாக கடுமையான குளிர் வாட்டி வதைக்கிறது. 'ஆதித்யனை' கூட பார்த்து பல நாட்களாகிறது. பெங்களூரில் நவம்பர் மாதத்தில் அதிகபட்ச வெப்ப நிலை வழக்கமாக 23 முதல் 24 டிகிரி செல்ஷியஸ் வரை இருக்கும். ஆனால், கடந்த 29 ம் தேதி, சராசரியை விட, மிக குறைவாக 21 டிகிரி செல்ஷியஸ் பதிவாகி உள்ளது. இதற்கிடையில், 'வெப்பநிலை வீழ்ச்சிக்கு சூரிய ஒளி இல்லாதது, மேகமூட்டமான வானிலை மற்றும் சூறாவளியின் தாக்கம் தான் காரணம். இந்த நிலை மேலும் சில நாட்கள் தொடர வாய்ப்பு உள்ளது. பெங்களூரில் நேற்று அதிகபட்சமாக 23 டிகிரி செல்ஷியசும், குறைந்தபட்சம் 18 டிகிரி செல்ஷியசும் பதிவாகியிருந்தது. இன்று முதல் டிச., 7 ம் தேதி வரை பனிமூட்டம் இருக்கும்' என்று பெங்களூரு வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இந்த சீதோஷ்ண நிலை, பஜ்ஜி கடைகளுக்கு வரப்பிரசாதமாக மாறி உள்ளது. மாலை நேரத்தில் சூடான மிளகாய், வாழைக்காய் பஜ்ஜி, போண்டா, பானிபூரி, பாஸ்ட்புட், காபி, தேநீர் மையங்கள் முன் மக்கள் அதிகளவில் கூடுகின்றனர். எப்போதும் இல்லாத அளவுக்கு நகரின் பனி மூட்டம் காணப்படுவதை, பல 'கன்டென்ட் கிரியேட்டர்ஸ்'கள், ட்ரோன் மூலம் வீடியோ எடுத்து, நகரை பனிமூட்டம் சூழ்ந்திருக்கும் காட்சியை, தங்களின் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். பலரும் ஜெர்கின், ஸ்வெட்டர்கள் வாங்கி செல்கின்றனர். விலை அதிகமாக விற்கப்படுகிறது.