பெங்களூரு: இண்டிகோ ஏர் லைன்ஸ் நிறுவன பிரச்னை, தனியார் ஆம்னி பஸ் உரிமையாளர்களுக்கு கொண்டாட்டமாக அமைந்துள்ளது. டிக்கெட் கட்டணத்தை இரண்டு மடங்கு அதிகரித்து, பயணியருக்கு சுமையை ஏற்படுத்துகின்றனர். சமீப நாட்களாக ஊழியர் பற்றாக்குறை காரணமாக, இண்டிகோ ஏர் லைன்ஸ் நிறுவன விமானங்கள் ரத்து செய்யப்படுகின்றன. சூழ்நிலையை சாதகமாக்கும், மற்ற விமான நிறுவனங்கள் விமான பயண கட்டணத்தை உயர்த்தியுள்ளனர். பயணியரும் வேறு வழியின்றி அதிக கட்டணம் செலுத்தி பயணிக்கின்றனர். தனியார் விமான போக்குவரத்து நிறுவனங்களின் வழியை, தனியார் ஆம்னி பஸ் உரிமையாளர்களும் பின்பற்றுகின்றனர். பெங்களூரில் இருந்து மும்பை, புனே, ஹைதராபாத் உட்பட மஹாராஷ்டிரா, ஆந்திரா மாநிலங்களுக்கு செல்லும் தனியார் ஆம்னி பஸ்களின் பயண கட்டணம், இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. பெங்களூரில் இருந்து புனேவுக்கு செல்ல வழக்கமான கட்டணம் 1,500 முதல் 2,000 ரூபாயாகும். தற்போது புனேவுக்கு செல்லும் பஸ்களில் 4,500 ரூபாய் முதல் 6,000 ரூபாய் கட்டணம் வசூலிக்கின்றனர். பெங்களூரில் இருந்து மும்பை செல்ல, வழக்கமான கட்டணம் 1,500 ரூபாய் முதல் 2,500 ரூபாய் வரை இருக்கும். இப்போது 4,500 ரூபாய் முதல் 10,000 ரூபாய் வரை வசூலிக்கின்றனர். அதே போன்று ஹைதராபாத் பாதையில் பயணிக்கும் ஆம்னி பஸ்களிலும் டிக்கெட் கட்டணம் 2,000 ரூபாய் முதல் 4,000 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது. தனியார் பஸ் உரிமையாளர்கள் மீது, பயணியர் அதிருப்தி அடைந்துள்ளனர். டிக்கெட் கட்டணத்தை உயர்த்துவதை கட்டுப்படுத்த, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வலியுறுத்துகின்றனர்.