உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  தியானம் செய்ய சிறந்த இடம் ஸ்ரீ காயத்ரி தபோபூமி

 தியானம் செய்ய சிறந்த இடம் ஸ்ரீ காயத்ரி தபோபூமி

கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டம் முத்தல்லி கிராமத்தில் அமைந்துள்ளது ஸ்ரீ காயத்ரி தபோபூமி. இது காயத்ரி தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோவில். இங்கு தியானம் செய்வது மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த இடம் தியானம் செய்வோரின் புனித ஸ்தலமாக விளங்குகிறது. சமீப காலங்களில், பலரும் இங்கு வந்து தியானம் செய்து வருகின்றனர். இதற்கு இன்றைய சமூக வலைதளங்களும் ஒரு காரணமாகும். இயற்கை சூழலில் அமைந்துள்ள இத்தலம், தியானம், வேதப் பயிற்சி, சமூக சேவையை ஒருங்கிணைக்கும் அரிய இடமாக பார்க்கப்படுகிறது. இங்கு தினமும் காயத்ரி மந்திரம் ஒலித்து கொண்டே இருக்கும். இதுவே தபோபூமியின் முக்கிய அடையாளமாக உள்ளது. மந்திர ஜெபங்களும், யோகத்தையும் இணைக்கும் இந்த ஆன்மிகச் சூழல் பக்தர்களுக்கு மனநிம்மதியை அளிக்கிறது. மனதிற்கு அமைதியை ஏற்படுத்துகிறது. காயத்ரி மந்திரத்தை உச்சரிக்கும் போது, மனதில் உள்ள கலக்கம் நீங்குகிறது என பக்தர்கள் கூறுகின்றனர். இங்கு செயல்படும் தியானம் - யோகா மையத்திற்கு மக்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்து உள்ளது. இந்த பயிற்சிகளில் ஈடுபடுவதுடன், சுவாச கட்டுப்பாடு, மனஅழுத்த நிவாரணம், ஆன்மிக பயிற்சிகள், மனிதநேயம், நற்பண்பு அடிப்படையிலான உரையாடல்கள் நடக்கிறது. நவீன வாழ்க்கையின் அழுத்தத்திலிருந்து விடுபட பலருக்கும் வழிகாட்டியாக உள்ளன. ஸ்ரீ காயத்ரி தபோபூமி, வேதக் கல்வியையும் நெறி வாழ்க்கை மரபினையும் புதுமைக்குக் கொண்டு செல்லும் வகையில் பல்வேறு திட்டங்களை இயக்குகிறது. இங்கு இளைஞர்களுக்கு வேதம் கற்பிக்கப்படுகிறது. ஆன்மிக செயல்பாடுகளுடன் மரம் நடுதல், இலவச மருத்துவ முகாம், கல்வி உதவி போன்ற சமூக சேவையிலும் ஈடுபடுகின்றனர். இந்த மையம், ஹாவேரி மாவட்டத்தில் சமூக முன்னேற்றத்திற்கு முக்கிய பங்களிப்பு ஆற்றி வருகிறது. இங்குள்ள காயத்ரி தேவியின் தெய்வீக சக்தியும், அமைதியான சூழலும் தபோபூமியின் மகுடமாக விளங்குகின்றன. அம்மனை தரிசித்து கோவில் வளாகத்தை சுற்றி வந்து, தியான மண்டபத்திற்கு சென்று வந்தால் கிடைக்கும் மன நிறைவை வார்த்தைகளால் விவரிப்பது கடினம். இன்றைய சமுதாயத்தினரிடம் ஆன்மிக சிந்தனைகளை கொண்டு செல்லவும், தியானம், யோகா போன்ற உடல் நலத்தை பேணக்கூடிய விஷயங்களில் அவர்களை ஈடுபடுத்தவும் பெரியோர் தான் முயல வேண்டும். இதுபோன்ற இடங்களுக்கு அவர்களை அழைத்து செல்ல வேண்டும். எப்படி செல்வது? ரயில்: ஹாவேரி ரயில் நிலையத்திற்கு வந்து வாகனங்கள் மூலம் கோவிலுக்கு செல்லலாம் அடையலாம். பஸ்: ஹாவேரி பஸ் நிலையத்திற்கு வந்து டாக்சி மூலம் கோவிலை அடையலாம். - நமது நிருபர் -:


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ