உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  சித்துவுக்கும் எனக்கும் இடையே எந்த பூசலும் இல்லை சகோதரர்கள் போல இருக்கிறோம் என்கிறார் சிவகுமார்

 சித்துவுக்கும் எனக்கும் இடையே எந்த பூசலும் இல்லை சகோதரர்கள் போல இருக்கிறோம் என்கிறார் சிவகுமார்

பெங்களூரு: ''முதல்வர் சித்தராமையாவும், நானும் சகோதரர்களை போல இருக்கிறோம். எங்களுக்குள் எந்த விதமான கோஷ்டி பூசலும் இல்லை,'' என, துணை முதல்வர் சிவகுமார் தெரிவித்தார். முன்னாள் முதல்வர் கெங்கல் ஹனுமந்தைய்யாவின் நினைவு தினத்தை முன்னிட்டு, பெங்களூரு விதான்சவுதா முன் உள்ள அவரது உருவச்சிலைக்கு, துணை முதல்வர் சிவகுமார் மலர் துாவி மரியாதை செலுத்தினார். பின், அவர் அளித்த பேட்டி: எனக்கும், முதல்வர் சித்தராமையாவுக்கும் இடையே, எந்த பிரிவினையும் இல்லை. ஊடகங்களின் அழுத்தத்தால், நாங்கள் இருவரும் பரஸ்பரம் சிற்றுண்டி கூட்டம் நடத்தினோம். எங்களுக்கு இதெல்லாம் அவசியமே இல்லை. முதல்வர் சித்தராமையாவும், நானும் சகோதரர்களை போல இருக்கிறோம். எங்களுக்குள் எந்த விதமான கோஷ்டி பூசலும் இல்லை. காங்கிரசின் அனைத்து எம்.எல்.ஏ.,க்களும் என்னோடு உள்ளனர். பிறக்கும் போது தனி தான், இறக்கும் போதும் தனி தான். அரசியல், கட்சி என்றால் அனைவரையும் ஒன்றாக அழைத்து செல்வோம். லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் மீது, நேஷனல் ஹெரால்டு விவகாரம் தொடர்பாக, மற்றொரு வழக்கு பதிவு செய்திருப்பது அநியாயத்தின் வெளிப்பாடு. தொந்தரவு கொடுப்பதற்கும் ஒரு எல்லை உள்ளது. வழக்கு பதிவு செய்ய வேண்டிய அவசியமே இல்லை; இது, கண்டிக்கத்தக்கது. நானும், முதல்வர் சித்தராமையாவும், அரசு நிறுவனங்கள் பலவற்றுக்கு தலைவராக இருக்கிறோம். கர்நாடக மின்சார கார்ப்பரேஷனுக்கு, முதல்வர் தலைவராக இருக்கிறார். நான் நீர்ப்பாசன கார்ப்பரேஷன்களுக்கு தலைவராக இருக்கிறேன். நாங்கள் பதவியை விட்டு செல்லும் போது, அந்த பொறுப்புகள் அனைத்தும் வேறு ஒருவருக்கு இடம் மாறும். அதுபோன்று, சில பங்குகள் ராகுலுக்கு இடம் மாறியிருக்கலாம். நேஷனல் ஹெரால்டு விஷயத்தில், சில பங்குகளை நேரு தக்கை வைத்திருக்கக் கூடும். அந்த பங்குகள் இந்திரா, ராஜிவ், சோனியா மூலமாக இடமாற்றமாகி, ராகுலுக்கு வந்துள்ளன. அனைத்தும் நியாயமான முறையில் நடந்துள்ளன. சீதாராம் கேசரிக்கு பின், காங்கிஸ் தலைவர் பொறுப்பை சோனியா ஏற்றார். அவரது வழிகாட்டுதலில், மத்தியில் காங்கிரஸ், 10 ஆண்டு ஆட்சி செய்தது. கட்சியை மிரட்டுவதற்காக, அரசியல் ரீதியில் தொந்தரவு கொடுக்கின்றனர். இதற்கு ராகுல் பயப்படமாட்டார். மத்திய அரசு பொறாமையால் எடுக்கும் நடவடிக்கைகள் நகைப்புக்குரியவை. நாட்டில் பல பிரச்னைகள் உள்ளன. அதை விட்டு விட்டு, பழி வாங்கும் அரசியல் செய்வது சரியல்ல. இதுபோன்ற செயல்களால், காங்கிரசை ஒடுக்குவது அவ்வளவு எளிதல்ல. அரசியலில் நேருக்கு நேராக நின்று தேர்தலில் சந்திக்க வேண்டும். டில்லியில் நமது மாநில எம்.பி.,க்களுடன், அனைத்து கட்சி கூட்டம் நடத்துவது குறித்து, முதல்வர் சித்தராமையாவுடன் ஆலோசிக்கப்படுகிறது. முன்னாள் முதல்வர் கெங்கல் ஹனுமந்தையாவை நினைவு கூற வேண்டும். விதான் சவுதாவை கட்டியவர் அவர். விகாஸ் சவுதாவை எஸ்.எம்.கிருஷ்ணா கட்டினார். பெங்களூரை உருவாக்கியவர் கெம்பேகவுடா. இவர்களின் சாதனைகள் நம் கண்முன்னே நிற்கின்றன. அந்த காலத்தில், கர்நாடகா தலைநகராக தாவணகெரே இருந்திருந்தால், பெங்களூரு இந்த அளவுக்கு வளர்ந்திருக்க முடியாது. உலகமே திரும்பி பார்க்கிறது. கடற்கரை நகரங்களுக்கு ஏற்படும் பிரச்னைகளை நாம் பார்க்கிறோம். எனவே, அனைத்து விதங்களிலும் பாதுகாப்பான நகரம் பெங்களூரு. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ