எம்.எஸ்.எம்.இ.,களுக்கு நிதியுதவி அரசிடம் அறிக்கை சமர்ப்பிப்பு
சென்னை: 'சிறு, குறுந்தொழில் நிறுவனங்கள் சர்வதேச போட்டியை சமாளிக்க, வங்கி கடன்களுக்கு வட்டியை குறைப்பதுடன், புதிய தொழில்நுட்பங்களை பின்பற்ற நிதியுதவி அளிக்க வேண்டும்' என, மத்திய சிறு, குறு, நடுத்தர தொழில் துறைக்கு, அந்த துறையின் தமிழக அதிகாரிகள் அறிக்கை சமர்ப்பித்துள்ளனர். நாட்டில் உள்ள சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் உற்பத்தி செலவை குறைக்கவும், சர்வதேச போட்டியை சமாளிக்கவும் ஊக்குவிப்பு கொள்கையை மத்திய அரசு வெளியிட உள்ளது. இதற்காக, நாடு முழுதும், 55 இடங்களில் சிறு, குறுந்தொழில் முனைவோரிடம் கருத்து கேட்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். அதன்படி, மதுரை, சென்னை, திருப்பூரில் சமீபத்தில் கருத்து கேட்பு நடைபெற்றது. அதில், பங்கேற்ற தொழில் முனைவோர் பல்வேறு கருத்துகளை தெரிவித்தனர். அதன் அடிப்படையில், 'சிறு, குறுந்தொழில்கள் வங்கிகளில் வாங்கிய கடன்களுக்கான வட்டியை, 8 - 9 சதவீதமாக குறைக்க வேண்டும், புதிய தொழில்நுட்பங்களை பின்பற்றுவதற்கு நிதியுதவி அளிக்க வேண்டும். 'மார்க்கெட்டிங், இ - காமர்ஸ்' போன்றவற்றுக்கு நிதி ஆதரவு அளிப்பதுடன், போக்குவரத்து செலவை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, மத்திய சிறு, குறு, நடுத்தர தொழில் துறையிடம், அந்த துறையின் தமிழக அதிகாரிகள் விரிவான அறிக்கையை சமர்ப்பித்துள்ளனர்.