| ADDED : டிச 03, 2025 03:08 AM
புதுடில்லி: இந்தியாவில் மின்சார கார்கள் உற்பத்தி திட்டத்துக்கு எந்தவொரு நிறுவனமும் விண்ணப்பிக்கவில்லை என, மத்திய கனரக தொழில்துறை அமைச்சகம், பார்லி.,யில் தெரிவித்துள்ளது. இந்தியாவில் மின்சார கார்கள் உற்பத்தியை ஊக்குவிக்கும் நோக்கத்துடன், மின்சார கார்கள் உற்பத்தி திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. இத்திட்டத்தில் இணையும் வாகன தயாரிப்பு நிறுவனம், குறைந்தபட்சம் 4,100 கோடி ரூபாய் முதலீடு, இறக்குமதி செய்யும் கார் களுக்கு 15 சதவீத சுங்க வரி மற்றும் மூன்று ஆண்டுகளில் 25 சதவீதமும், 5 ஆண்டுகளில் 50 சதவீதமும் உள்நாட்டு உற்பத்தி இலக்கை அடைய வேண்டும் என நிபந்தனைகள் இடம்பெற்றிருந்தன. திட்டத்தில் இணைவதற்கான அவகாசம், கடந்த அக்டோபர் 21ம் தேதியுடன் முடிவடைந்தது. இதனிடையே, இந்தியாவில் மின்சார கார் உற்பத்தி செய்ய, ஒரு நிறுவனம் கூட விண்ணப்பிக்கவில்லை என தெரியவந்துள்ளது. இந்தியா - ஐரோப்பிய யூனியன் இடையே வர்த்தக ஒப்பந்தத்தில் ஏற்படும் முன்னேற்றத்தை அடிப்படையாக கொண்டு முடிவு செய்ய இருப்பதாக, அரசிடம் வாகன உதிரிபாக தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். இது தவிர, அரிய வகை காந்தங்கள் தட்டுப்பாடு, குறைந்தபட்ச முதலீடு, உற்பத்தி இலக்கு ஆகியவை கடினமாக இருப்பதால், இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க ஆர்வம் காட்டவில்லை என கூறப்படுகிறது.