சென்னை : எலும்பு முறிவு நோயாளியின் உடலுக்கு ஏற்ற வகையில், 'பிளேட்' சாதனம் பொருத்த, நவீன தொழில்நுட்பத்தில் அதை வடிவமைக்கும் வசதியை, 'டிட்கோ' எனப்படும் தமிழக தொழில் முன்னேற்ற நிறுவனம் ஏற்படுத்த உள்ளது. உற்பத்தி துறையில் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களுக்கான தேவையை கருத்தில் கொண்டு, சென்னை தரமணியில் மூன்று திறன்மிகு மையங்களை, 'டிட்கோ' அமைத்து உள்ளது. அதன்படி, 'டசால்ட் சிஸ்டம்ஸ்' நிறுவனத்துடன் இணைந்து, 210 கோடி ரூபாய் முதலீட்டில், 'டேன்கேம்' எனப்படும் தமிழக மேம்பட்ட உற்பத்திக்கான மையம் அமைக்கப்பட்டு உள்ளது. அங்கு, வான்வெளி, ராணுவ துறை, தானியங்கி மற்றும் மின் வாகன துறை நிறுவனங்கள் தயாரிப்பு வடிவமைப்பை, '3டி' எனப்படும் முப்பரிமாண முறையில் உருவாக்கி, சோதிக்கலாம். இதை, சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், 'ஸ்டார்ட் அப்' எனப்படும் புத்தொழில் நிறுவனங்கள் பயன்படுத்தி வருகின்றன. தற்போது, 'டேன்கேம்' மையத்தில், எலும்பு முறிவு நோயாளியின் உடலுக்கு ஏற்ற வகையில், 'பிளேட்' பொருத்த, நவீன தொழில்நுட்பத்தில் அதை வடிவமைக்கும் வசதியை, 'டிட்கோ' ஏற்படுத்த உள்ளது. இதற்காக, நவீன உபகரணங்கள் கொள்முதல் செய்யப்பட உள்ளன.