சென்னை : உணவு தொழில் துவங்குவதை ஊக்குவிக்க மூலதன மானியம், எளிய முறையில் ஒற்றைச்சாளர அனுமதி, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம், திறன் மேம்பாட்டு மையம் போன்றவற்றுக்கு தமிழக அரசு உதவ வேண்டும் என்பது, தொழில் முனைவோரின் எதிர்பார்ப்பாக உள்ளது. உணவு தொழில் துவங்குவதை ஊக்குவிக்கவும், ஏற்கனவே அந்த தொழிலில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களை உலகத்தரம் வாய்ந்த நிறுவனங்களாக மாற்ற தேவையான நடவடிக்கை தொடர்பாகவும், தொழில் துறை அமைச்சர் ராஜா, உணவக தொழில் சார்ந்த நிறுவனங்களுடன் சமீபத்தில் ஆலோசனை நடத்தினார். இதில், சங்கீதா, மில்கிமிஸ்ட், ஸ்வீட் காரம் காபி, ரெட் பாக்ஸ், ஜுனியர் குப்பண்ணா உள்ளிட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். இதுகுறித்து, உணவு தொழில் முனைவோர் கூறியதாவது: தமிழகத்தில் உணவு பொருட்கள், உணவக தொழில் துறை சந்தை தொடர்ந்து விரிவடைகிறது. இந்த துறையில், அடுத்த 10 ஆண்டுகளில், 2 கோடி திறமையான வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும். பன்னாட்டு நிறுவனங்களும் தொழிலில் களமிறங்குவதால், உள்நாட்டு நிறுவனங்களும் புதிய தொழில்நுட்பங்களை பின்பற்ற வேண்டியுள்ளது. எனவே, தமிழகத்தை சேர்ந்த தொழில் முனைவோர் உணவு தொழில் துவங்க மூலதன மானியம், ஊக்கத்தொகை வழங்குவதுடன், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம், உணவு கண்டுபிடிப்பு மற்றும் உணவு தொழில்நுட்பத்திற்கான கட்டமைப்பு, திறன் மேம்பாட்டு மையம் ஆகிய வசதிகளை, தமிழக அரசு ஏற்படுத்தி தர வேண்டும். மேலும், எளிமையான ஒற்றைச்சாளர முறையில் அனுமதி, தேசிய மற்றும் சர்வதேச நாடுகளில் தொழில் துவங்க தேவைப்படும் உதவிகளையும் விரைவாக செய்து தர வேண்டும். இதன் வாயிலாக, இந்த துறையில் பலரும் தொழில் துவங்குவர். ஏற்கனவே உள்ள முன்னணி நிறுவனங்களும், சர்வதேச பிராண்டுகளாக உருவெடுக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர். தமிழகத்தில் உணவகம், உணவு பொருட்கள் தொழில் துறை சந்தை மதிப்பு 1.50 லட்சம் கோடி ரூபாய் உணவு தொழில் துறை வாயிலாக, தற்போது, 50 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்