உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பங்கு வர்த்தகம் /  பிரிட்டனுடன் தடையற்ற ஒப்பந்தம் ஆடை ஏற்றுமதி 71 சதவீதம் உயரும் ஐ.ஐ.எப்.டி., ஆய்வறிக்கையில் தகவல்

 பிரிட்டனுடன் தடையற்ற ஒப்பந்தம் ஆடை ஏற்றுமதி 71 சதவீதம் உயரும் ஐ.ஐ.எப்.டி., ஆய்வறிக்கையில் தகவல்

திருப்பூர்: இந்தியா - பிரிட்டன் இடையே வர்த்தக ஒப்பந்தம் நடைமுறைக்கு வரும் போது, ஆயத்த ஆடை ஏற்றுமதி, 71 சதவீதம் உயருமென, சமீபத்தில் நடந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது. நம் நாட்டில் இருந்து, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்கு அடுத்தபடியாக, பிரிட்டனுக்கு அதிக அளவு ஆயத்த ஆடை ஏற்றுமதி நடந்து வருகிறது. தற்போது, பிரிட்டனுடன் வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. போட்டி நாடுகளான, வியட்நாம், வங்கதேசம், துருக்கியுடன், பிரிட்டன் ஏற்கனவே வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் செய்துள்ளது. அந்த வரிசையில், இந்தியாவும் இணைவதால், பிரிட்டன் ஆடை ஏற்றுமதி வர்த்தகத்தில், போட்டித்திறன் அதிகரித்துள்ளது. 'இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் பாரின் டிரேடு' நடத்திய ஆய்வில், வர்த்தக ஒப்பந்தம் நடைமுறைக்கு வரும் போது, பின்னலாடை, ஆயத்த ஆடை மற்றும் வீட்டு உபயோக ஜவுளி பொருட்கள் ஏற்றுமதியும் கணிசமாக உயருமென தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, பிரிட்டனுக்கான இந்திய ஏற்றுமதி, 14,288 கோடி ரூபாய் அளவுக்கு அதிகரிக்கும்; ஆயத்த ஆடை, வீட்டு உபயோக ஜவுளி ஏற்றுமதியிலும், 9,525 கோடி ரூபாய் அளவுக்கு வளர்ச்சி கிடைக்கும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய வாய்ப்புகளை பெறலாம்

'இந்தியன் டெக்ஸ்பிரனர்ஸ் பெடரேஷன்' கன்வீனர் பிரபு தாமோதரன் கூறுகையில், ''பிரிட்டன் ஒப்பந்தம் நடைமுறைக்கு வரும் போது, ஆயத்த ஆடை மட்டுமல்லாது, வீட்டு உபயோக ஜவுளி ஏற்றுமதிக்கும் பிரகாசமான வாய்ப்பு உள்ளதாக, ஐ.ஐ.எப்.டி., மதிப்பீட்டில் தெரியவந்துள்ளது. குறிப்பாக, காட்டன் டி-சர்ட், சிறு குழந்தைகளுக்கான ஆடைகள் ஆகிய இரு குறியீடுகள் மட்டும், மொத்த ஏற்றுமதியில், 18 சதவீத பங்களிப்பை பெற்றுள்ளன. இவற்றுடன், மற்ற வகை ஆடைகள் ஏற்றுமதியிலும் கூடுதல் கவனம் செலுத்தினால், புதிய வர்த்தக வாய்ப்புகளை கைப்பற்ற முடியும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ