உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பங்கு வர்த்தகம் /  ரஷ்ய சிறு முதலீட்டாளர்களும் நிப்டி 50 யில் முதலீடு செய்யலாம் பர்ஸ்ட் இந்தியா மியூச்சுவல் பண்டு துவக்கம்

 ரஷ்ய சிறு முதலீட்டாளர்களும் நிப்டி 50 யில் முதலீடு செய்யலாம் பர்ஸ்ட் இந்தியா மியூச்சுவல் பண்டு துவக்கம்

புதுடில்லி: ரஷ்ய சில்லரை முதலீட்டாளர்களும் இந்திய பங்குச் சந்தைகளில் முதலீடு செய்ய ஏதுவாக, அந்நாட்டின் மிகப்பெரிய வங்கியான 'ஸ்பெர் பேங்க்' மற்றும் 'ஜே.எஸ்.சி., அசெட் மேனேஜ்மென்ட்' நிறுவனங்கள் இணைந்து, புதிய மியூச்சுவல் பண்டு ஒன்றை துவங்கி உள்ளன. 'பர்ஸ்ட் இந்தியா' என்ற இந்த பண்டு, 'நிப்டி 50' குறியீட்டுடன் இணைக்கப்பட்டுள்ளதால், இதன் செயல்பாட்டை பின்பற்றியே பண்டின் செயல்பாடு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது வரை எப்.பி.ஐ., எனும் அன்னிய போர்ட்போலியோ முதலீட்டாளர் உரிமம் வைத்துள்ள ரஷ்ய முதலீட்டாளர்கள் மட்டுமே இந்திய சந்தைகளில் முதலீடு செய்து வருகின்றனர். இது பெரிய நிறுவனங்களுக்கு சாத்தியமானது என்றாலும், அதிக செலவாகும் என்பதால் சில்லரை முதலீட்டாளர்களுக்கு இது உகந்ததாக இல்லை. இந்நிலையில், 'பர்ஸ்ட் இந்தியா' என்ற பண்டு திட்டத்தை அறிமுகப்படுத்துவதன் வாயிலாக, ரஷ்ய சில்லரை முதலீட்டாளர்கள் அங்கிருந்தபடியே, நம் நாட்டில் முதலீடு செய்ய வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், ரஷ்யாவின் உள்ளூர் நாணயமான ரூபிளை பயன்படுத்தி முதலீடு செய்யலாம் என்றும், கரன்சி மாற்றம் செய்ய தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் - ரஷ்யா போரை தொடர்ந்து, பல்வேறு ரஷ்ய நிறுவனங்களின் மீது அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் பொருளாதார தடை விதித்துள்ளன. அதே நேரத்தில், ரஷ்ய எண்ணெய் நிறுவனங்களிடமிருந்து இந்தியா அதிக அளவிலான கச்சா எண்ணெய் வாங்கி வருவதால், இந்த ரஷ்ய நிறுவனங்களிடம் இந்திய ரூபாய் அதிகம் சேர்ந்துள்ளது. இதை டாலர் அல்லது யூரோவாக மாற்ற முடியாத சூழல் நிலவுகிறது. தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த பண்டு, வருவாய் ஈட்டி தரும் வகையில் முதலீடு செய்ய நிறுவனங்களுக்கு உதவியாக இருக்கும். அதே நேரத்தில் இந்திய பங்குச்சந்தைகளில் அன்னிய முதலீடுகளின் வரத்தையும் அதிகரிக்கும். இந்தியா - ரஷ்யா முதலீட்டு உறவுகளை மேம்படுத்தும் ஒரு முக்கிய முயற்சியாக இது பார்க்கப்படுகிறது. தற்போது வரை 22 சர்வதேச பண்டுகளும், 45 இந்திய பண்டுகளும் நிப்டி 50 குறியீட்டை அடிப்படையாகக் கொண்டு செயல்படுகின்றன ரூபிளில் முதலீடு 'பர்ஸ்ட் இந்தியா' என்ற பண்டு திட்டத்தில், ரஷ்ய சில்லரை முதலீட்டாளர்கள் அந்நாட்டில் இருந்தபடியே, இந்தியாவில் முதலீடு செய்ய வழி கிடைத்துள்ளது. ரஷ்ய நாணயமான ரூபிளை பயன்படுத்தி முதலீடு செய்யலாம்; கரன்சி மாற்றம் செய்ய தேவையில்லை என்பது கூடுதல் வசதிகள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை