உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா /  தொழிலதிபரை மிரட்டுவதற்கு துப்பாக்கியால் சுட்ட 3 பேர் கைது

 தொழிலதிபரை மிரட்டுவதற்கு துப்பாக்கியால் சுட்ட 3 பேர் கைது

ஷாஹ்தாரா:துப்பாக்கியால் சுட்டு தொழிலதிபர் குடும்பத்தினரை மிரட்டிய மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். ஷாஹ்தாராவின் போலா நாத் நகரில் குடும்பத்தினருடன் வசிப்பவர் குணால் அரோரா. கடந்த 2ம் தேதி இரவு 11:00 மணி அளவில் ஒரு கும்பல், இவரது வீட்டின் முன் துப்பாக்கிச்சூடு நடத்தியது. ஹெல்மெட் அணிந்த அந்த கும்பல் தப்பிச் செல்லும் முன், குணால் அரோரா குடும்பத்தினரை மிரட்டியது. இதுகுறித்து ஷாஹ்தாரா போலீசில் குணால் புகார் அளித்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ஜாஹீர் என்ற ஆசிப் என்ற குட்டு, பாரூக், சல்மான் என்ற லத்தான் ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி இரண்டு நாட்கள் போலீஸ் காவலில் எடுத்தனர். விசாரணைக்காக ஜாஹீரை போலீசார் சம்பவ இடத்திற்கு அழைத்துச் சென்றனர். அப்போது ஒரு போலீஸ் அதிகாரியிடம் இருந்து துப்பாக்கியை பறித்த ஜாஹீர், தப்பிச் செல்ல முயன்றார். பல முறை எச்சரித்தும் சரணடைய மறுத்த அவரை போலீசார் சுட்டனர். வலது காலில் குண்டடி பட்டு, கீழே விழுந்தார். அவரை மீட்டு மருத்துவமனையில் போலீசார் அனுமதித்தனர். அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த கும்பலுக்கு பணம் கொடுத்து துப்பாக்கிச்சூடு நடத்தி மிரட்டல் விடுக்கும்படி சொன்ன சச்சின் என்ற கோலு என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை