உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நாடு முழுதும் 5.17 லட்சம் வக்ப் சொத்துக்கள் பதிவேற்றம்

நாடு முழுதும் 5.17 லட்சம் வக்ப் சொத்துக்கள் பதிவேற்றம்

புதுடில்லி: நாடு முழுதும் இதுவரை, 5.17 லட்சம் வக்ப் சொத்துக்க்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், இதில் 2.16 லட்சம் சொத்துகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. வக்ப் சட்டம் அமலானதைத் தொடர்ந்து நாடு முழுதும் உள்ள வக்ப் சொத்துக்கள் குறித்த தகவல்களை ஆறு மாதத்துக்குள் இணையதளத்தில் பதிவேற்றும்படி மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்படி, மத்திய அரசு சார்பில், 'உமீத்' எனப்படும் ஒருங்கிணைந்த வக்ப் மேலாண்மை, அதிகாரமளித்தல், திறன் மற்றும் மேம்பாடு என்ற இணையதளம், ஜூன் 6ம் தேதி துவங்கப்பட்டது. இதில், வக்ப் சொத்துக்களை அடுத்த ஆறு மாதத்திற்குள் கட்டாயம் பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டது. இதன்படி, கடந்த 6ம் தேதி இதற்கான காலக்கெடு நிறைவடைந்தது. இதுகுறித்து மத்திய சிறுபான்மை விவகாரங்கள் துறை வெளியிட்ட அறிக்கை: நாடு முழுதும், 9 லட்சத்துக்கும் மேற்பட்ட வக்ப் சொத்துக்கள் உள்ளன. எனினும், இணையதளத்தில், 5.17 லட்சம் வக்ப் சொத்துக்கள் மட்டுமே பதிவாகி உள்ளன. இவற்றில், 2.16 லட்சம் சொத்துக்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டன. இறுதிநாளின்போது வக்ப் சொத்துக்களை பராமரிக்கும் பலர், பதிவேற்றம் செய்ததால், 2.13 லட்சம் வக்ப் சொத்துக்கள் பரிசீலனையில் உள்ளன. இதுதவிர சரிபார்ப்பின் போது 10,869 சொத்துக்கள் நிராகரிக்கப்பட்டன. அதிகபட்சமாக உத்தர பிரதேசத்தில், 92,830 வக்ப் சொத்துக்கள் பதிவு செய்யப் பட்டுள்ளன. இதைத்தொடர்ந்து, மஹாராஷ்டிராவில் 62,939, கர்நாடகாவில் 58,328, மேற்கு வங்கத்தில், 23,086 வக்ப் சொத்துக்களும் அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டுள்ளன. 'உமீத்' தளத்தில் பதிவு செய்யாதவர்கள், அந்தந்த தீர்ப்பாயங்களை நேரில் அணுகலாம். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ