உ.பி.,யில் மேலும் ஒரு பி.எல்.ஓ., வீட்டில் மயங்கி விழுந்து மரணம்
ஹத்ராஸ்: உத்தர பிரதேசத்தில், வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் ஈடுபட்ட பி.எல்.ஓ., எனப்படும் ஓட்டுச்சாவடி நிலை அலுவலர், வீட்டில் மயங்கி விழுந்து உயிரிழந்தார். பீஹாரை தொடர்ந்து, தமிழகம், புதுச்சேரி, மேற்கு வங்கம், கேரளா, அசாம், உ.பி., - ம.பி., உட்பட 12 மாநிலங்களில், எஸ்.ஐ.ஆர்., எனப்படும் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் நடக்கிறது. இதில், தமிழகம், புதுச்சேரி, மேற்கு வங்கம், கேரளா மற்றும் அசாமில், அடுத்தாண்டு ஏப்ரலில் சட்டசபை தேர்தல் நடக்கிறது. எஸ்.ஐ.ஆர்., கணக்கீட்டு படிவத்தை சமர்ப்பிப்பதற்கான அவகாசம், வரும் 11 வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், பணிச்சுமையால், பி.எல்.ஓ.,க்கள் தற்கொலை செய்வதும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், உ.பி.,யின் ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள சிகந்திர ராவ் நகரில், ஓட்டுச்சாவடி நிலை அலுவலராக பணியாற்றி வந்த கமலகாந்த் சர்மா, 40, என்பவர், வீட்டில் நேற்று திடீரென மயங்கி விழுந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரை பரிசோதித்த டாக்டர்கள், வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள பிராமண்புரி என்ற பகுதியைச் சேர்ந்த கமலகாந்த் சர்மா, அப்பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். அவரது மரணத்துக்கு, எஸ்.ஐ.ஆர்., பணிச்சுமையே காரணம் என, அவரது உறவினர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.