சர்வதேச பிரச்னைகளுக்கு தீர்வு காண இந்தியாவை தேடும் உலக நாடுகள்: ஆர்.எஸ்.எஸ்., தலைவர் பெருமிதம்
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
ஜெய்ப்பூர்: ''சர்வதேச அளவில் எழும் பிரச்னைகளுக்கான தீர்வை, உலக நாடுகள் தற்போது இந்தியாவிடம் கேட்க ஆரம்பித்து இருக்கின்றன. ஏனெனில், ஒருங்கிணைந்த மனிதநேயம், சனாதன சிந்தனை நம்மிடம் தான் கொட்டிக் கிடக்கின்றன,'' என, ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நேற்று நடந்த கருத்தரங்கில் அவர் பேசியதாவது: தேசியவாதம் காரணமாகவே போர்கள் நடக்கின்றன. எனவே, சர்வதேசியவாதம் பற்றி தற்போது உலகத் தலைவர்கள் விவாதிக்க துவங்கி விட்டனர். அதே சமயம், அப்படி சர்வதேசியவாதம் பற்றி பேசுபவர்கள் தங்கள் சொந்த நாட்டின் நலனுக்கு தான் அதிக முன்னுரிமை தருகின்றனர். அதிகார பலம் கொண்டவர்கள் கூட, தங்கள் சுயநலத்துக்காக போராடத் துவங்கிவிட்டனர். இதனால், சமூகத்தில் பலவீனமானவர்கள் பாதிக்கப்படுகின்றனர். சர்வதேச அளவில் எழும் பிரச்னைகளுக்கு, உலக நாடுகளின் தலைவர்கள் நம்மிடம் தீர்வு தேடி வருகின்றனர். சர்வதேச நிலைமை தற்போது மோசமாக இருக்கிறது. அதன் இருளை கிழிக்க நம் சனாதன வெளிச்சம் அவசியம். 60 ஆண்டுகளுக்கு முன்பே, இந்த தத்துவம் முன்வைக்கப்பட்டாலும், தற்போது தான் உலகம் முழுதும் அதன் முக்கியத்துவம் புரியத் துவங்கி உள்ளது. ஒருங்கிணைந்த மனிதநேய தத்துவம் என்ற தர்மத்தை தற்போது உலக நாடுகள் ஏற்கத் துவங்கி விட்டன. வெளிநாடுகளுக்கு செல்லும் இந்தியர்கள் யாரையும் துன்புறுத்துவதில்லை. மாறாக, அந்நாட்டின் வளர்ச்சிக்கு ஆக்கப்பூர்வமான பங்களிப்பை தருகின்றனர். அதுதான் சனாதன தர்மம். பொருள் சார்ந்த உலகியல் வாழ்க்கை வசதிகளை அதிகரிக்குமே தவிர, அமைதி மற்றும் திருப்தியை தராது. நம் நாட்டின் வாழ்க்கை முறை, உணவு பழக்கம், உடை நாகரிகம் ஆகியவை காலத்துக்கு ஏற்ப மாறிக் கொண்டே இருக்கும். ஆனால், மிக உயர்ந்த மனிதநேய தத்துவம் என்றுமே மாறாது. இவ்வாறு அவர் பேசினார்.