உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா /  கேரள முதல்வர், மாஜி அமைச்சருக்கு நோட்டீஸ்: மசாலா பத்திரம் வழக்கில் ஈ.டி., அதிரடி

 கேரள முதல்வர், மாஜி அமைச்சருக்கு நோட்டீஸ்: மசாலா பத்திரம் வழக்கில் ஈ.டி., அதிரடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருவனந்தபுரம்: கேரளாவில் மசாலா பத்திரம் வழக்கு தொடர்பாக, முதல்வர் பினராயி விஜயன், முன்னாள் நிதி அமைச்சர் தாமஸ் ஐசக், முதல்வரின் முதன்மை தலைமை செயலர் ஆபிரகாம் ஆகியோருக்கு, ஈ.டி., எனப்படும் அமலாக்கத் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி கூட்டணி ஆட்சி நடக்கிறது. கடந்த 2018ம் ஆண்டு கேரளாவில் பெருவெள்ளம் ஏற்பட்டபோது, உள்கட்டமைப்பு வசதிகளை மீண்டும் கட்டியெழுப்ப நிதி திரட்டும் முயற்சியில் மாநில அரசு இறங்கியது. இதற்காக, கே.ஐ.ஐ.எப்.பி., எனப்படும் கேரள உள்கட்டமைப்பு முதலீட்டு நிதி வாரியம் மூலம், வெளிநாடுகளில் இருந்து நிதி திரட்ட மசாலா பத்திரங்கள் வெளியிடப்பட்டன. அந்த வகையில், லண்டன் மற்றும் சிங்கப்பூர் பங்கு சந்தைகளில் மசாலா பத்திரங்களை வெளியிட்டு, இந்திய மதிப்பில் 2,672.80 கோடி ரூபாய் நிதி திரட்டப் பட்டது. அப்போது, 'பெமா' எனப்படும் அன்னிய செலாவணி மேலாண்மை சட்ட விதிகளை காற்றில் பறக்கவிட்டு, 466.91 கோடி ரூபாய் நிதி, நிலம் வாங்க பயன்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. ரிசர்வ் வங்கி அறிவுறுத்தலின்படி மசாலா பத்திரங்கள் மூலம் திரட்டப்படும் நிதியை, ரியல் எஸ்டேட் உள்ளிட்ட துறைகளில் முதலீடு செய்யக்கூடாது. அந்த தடையை மீறியதால், அன்னிய செலாவணி மேலாண்மை சட்ட விதிகளின் கீழ் இந்த ஆண்டு ஜூன் 27ல், அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியது. இந்நிலையில், அன்னிய செலாவணி மேலாண்மை சட்ட விதிகள் மீறப்பட்டிருப்பது அபராதத்திற்கு வழி வகுக்கும் என்பதால், இந்த விவகாரம் குறித்து உரிய பதில் அளிக்கும்படி, முதல்வர் பினராயி விஜயன், 2018ல் இடது ஜனநாயக முன்னணி அரசில் நிதியமைச்சராக இருந்த தாமஸ் ஐசக், முதல்வரின் முதன்மை தலைமை செயலர் ஆபிரகாம் ஆகியோருக்கு நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டு உள்ளது. மசாலா பத்திரம் என்றால் என்ன? மசாலா பத்திரங்கள் என்பது நம் நாட்டு நிறுவனங்களால் வெளிநாட்டு சந்தைகளில் வெளியிடப்படுவதாகும். இந்த பத்திரங்கள் இந்திய ரூபாயில் குறிப்பிடப்படுகின்றன. இவை, நம் வெளியீட்டாளர்கள் வெளிநாடுகளில் நிதி திரட்டுவதற்கான வாய்ப்பை வழங்குகின்றன. இந்த பத்திரங்களின் இந்திய தோற்றத்தை குறிக்கவே, 'மசாலா' என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. உள்நாட்டு வளர்ச்சி, நிதி திரட்டுதல் மற்றும் இந்திய ரூபாயின் சர்வதேசமயமாக்கலை ஊக்குவிக்கும் நோக்கத்திற்கு உதவுகின்றன. அரசியல் காழ்ப்புணர்ச்சி: தாமஸ் ஐசக் குற்றச்சாட்டு ''அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக மத்திய புலனாய்வு அமைப்புகளை, மத்திய அரசு ஏவியுள்ளது,'' என, கேரள முன்னாள் நிதியமைச்சரும், மார்க்சிஸ்ட் கம்யூ., மூத்த தலைவருமான தாமஸ் ஐசக் குற்றஞ்சாட்டியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது: கேரளாவில் சட்டசபை தேர்தல் நெருங்கிவிட்டது. எனவே, மத்தியில் ஆளும் பா.ஜ., தேர்தல் பிரசாரத்திற்காக தற்போது அமலாக்கத் துறையை களமிறக்கி இருக்கிறது. கடந்த 2020ல் உள்ளாட்சி தேர்தல் நடக்கும் சமயத்தில் முதல் முறையாக இவ்வழக்கில் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது. அதன்பின் சட்டசபை தேர்தல், லோக்சபா தேர்தல் சமயங்களிலும் நோட்டீஸ் அனுப்பினர். தற்போது மீண்டும் உள்ளாட்சி தேர்தல் வருவதால், இந்த விவகாரத்தை மத்திய அரசு கையில் எடுத்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்




 ஐ.பி.ஓ.,

2 hour(s) ago  






சமீபத்திய செய்தி