ஆஸ்துமா நோயாளிகளுக்கு மீன் மருந்து வினியோகம்
ஹைதராபாத்: தெலுங்கானா தலைநகர் ஹைதராபாதில் ஆஸ்துமா நோயை குணப்படுத்தும் என நம்பப்படும் மீன் மருந்து, மக்களுக்கு வழங்கப்பட்டது.ஹைதராபாதைச் சேர்ந்த பாத்தினி குடும்பத்தினர் நுாறாண்டுகளாக, 'மீன் பிரசாதம்' எனப்படும் மீன் மருந்தை பொதுமக்களுக்கு வழங்குகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் 'மிருகசீரிஷ கார்த்திகை' நாளில் இந்த மருந்து வழங்கப்படுகிறது. இதையொட்டி நேற்று மீன் மருந்து வழங்கும் நிகழ்வு ஹைதராபாதில் உள்ள பொருட்காட்சி திடலில் நடைபெற்றது. நிகழ்ச்சியை தெலுங்கானா பிற்படுத்தப்பட்டோர் நல அமைச்சர் பொன்னம் பிரபாகர், மாநில காங்., தலைவர் மகேஷ் குமார் கவுட் உள்ளிட்டோர் துவக்கி வைத்தனர். மீன் மருந்தை பெற நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான ஆஸ்துமா நோயாளிகள் வந்திருந்தனர்.அவர்களுக்கு மூலிகையுடன் கூடிய முரல் மீன் வழங்கப்பட்டது. இந்த மருந்து குறித்த ரகசியத்தை துறவி ஒருவர் பாத்தினி குடும்பத்தினருக்கு வழங்கியதாக நம்பப்படுகிறது.