உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சண்டிகரில் பிஷ்னோய் மாஜி கூட்டாளி துப்பாக்கியால் சுட்டுக்கொலை; தப்பிய மர்ம நபரை தேடும் போலீஸ்

சண்டிகரில் பிஷ்னோய் மாஜி கூட்டாளி துப்பாக்கியால் சுட்டுக்கொலை; தப்பிய மர்ம நபரை தேடும் போலீஸ்

சண்டிகர்: பிரபல ரவுடி லாரன்ஸ் பிஷ்னோயிடம் கூட்டாளியாக இருந்த நபர் சண்டிகரில் சுட்டுக் கொல்லப்பட்டான். போதை பொருள் கடத்தல், பாலிவுட் நடிகர் சல்மான் கான் வீட்டின் வெளியே துப்பாக்கிச்சூடு நடத்தியது, மஹாராஷ்டிரா மாஜி அமைச்சர் பாபா சித்திக் கொலை உள்ளிட்ட பல சம்பவங்களில் தொடர்பு உடையவன் பிரபல ரவுடி லாரன்ஸ் பிஷ்னோய். தற்போது, குஜராத் சபர்மதி சிறையில் அடைக்கப்பட்டு உள்ளான்.பல்வேறு குற்றச் சம்பவங்களில் தொடர்புடைய லாரன்ஸ் பிஷ்னோயின் கூட்டாளிகளை போலீசார் தீவிரமாக தேடி கைது செய்து வருகின்றனர். இந் நிலையில், பிஷ்னோயிடம் ஒரு காலத்தில் கூட்டாளியாக இருந்த இந்தர்ப்ரீத் சிங் (35) என்பவன் சண்டிகரில் சுட்டுக் கொல்லப்பட்டான். சண்டிகரில் உள்ள கிளப் ஒன்றுக்கு சென்ற அவன், காரில் அங்கிருந்து புறப்பட்டான். அவனுடன் வேறு ஒரு நபரும் காரில் இருந்துள்ளான். கிளப்பில் இருந்து கிளம்பிய சில வினாடிகளிலேயே உடன் இருந்த அந்த நபர், இந்தர்ப்ரீத் சிங்கை சரமாரியாக சுட்டுவிட்டு, தப்பி ஓடினான்.தகவலறிந்த போலீசார், சம்பவ பகுதிக்குச் சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். முதல்கட்ட விசாரணையில் இரு ரவுடிக்கும்பல்களுக்கு இடையேயான போட்டியில் கொலை நிகழ்ந்துள்ளது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து போலீசார் கூறியதாவது; பிஷ்னோயிடம் இருந்த இந்தர்ப்ரீத் சிங் பின்னர் அவனுக்கு எதிர் முகாமான மற்றொரு ரவுடி கோல்டி பரார் என்பவனிடம் சேர்ந்து கொண்டான். இரு கும்பல்களுக்கு இடையே யார் பெரியவர் என்ற மோதலே இந்த சம்பவத்திற்கு காரணமாக இருக்கலாம். காரில் இருந்து தப்பியோடிய அந்த அடையாளம் தெரியாத நபரை தேடி வருகிறோம். கொல்லப்பட்டவன் மேல் கொலை, கொள்ளை, அடிதடி என ஏராளமான வழக்குகள் உள்ளன. இவ்வாறு போலீசார் கூறி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ