உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா /  ஹரியானா அல் பலாஹ் பல்கலை நிறுவனருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்

 ஹரியானா அல் பலாஹ் பல்கலை நிறுவனருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்

புதுடில்லி: பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட அல் பலாஹ் பல்கலை நிறுவனர் ஜாவத் அஹ்மது சித்திக்கை, 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க, டில்லி நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. டில்லி செங்கோட்டை அருகே கடந்த மாதம், 10ம் தேதி நடந்த கார் குண்டுவெடிப்பு சம்பவம் நாடு முழுதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஹரியானாவின் பரிதாபாதில் இயங்கி வரும் அல் பலாஹ் பல்கலையை சேர்ந்த டாக்டர் உமர் நபி, வெடிப்பொருட்களை நிரப்பிய காரை ஓட்டி வந்தது விசாரணையில் தெரியவந்தது. அதே பல்கலையை சேர்ந்த சில டாக்டர்களும், இந்த பயங்கரவாத சதியில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக, அல் பலாஹ் பல்கலையில் நடத்தப்பட்ட விசாரணையில், அந்நிறுவனம் பணமோசடியில் ஈடுபட்டது வெளிச்சத்துக்கு வந்தது. அல் பலாஹ் அறக்கட்டளை பெயரில் மாணவர்களிடம் முறைகேடாக பணம் பெற்று, அவற்றை சொந்த நலனுக்கு பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. அதேபோல், 2018 - 25 வரை, பல்கலை வருவாயை மறைத்ததும் அம்பலமானது. இதையடுத்து, அல் பலாஹ் பல்கலை நிறுவனர் ஜாவத் அஹ்மத் சித்திக்கை அமலாக்கத் துறையினர் கடந்த மாதம் 18ல் கைது செய்தனர். டில்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை, 13 நாட்கள் காவலில் எடுத்து அமலாக்கத் துறை விசாரித்தது. விசாரணை முடிவடைந்ததை அடுத்து, டில்லி நீதிமன்றத்தில் ஜாவத் அஹ்மத் நேற்று ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, அவரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. ஜாவத் அஹ்மதுவின் கோரிக்கையை ஏற்று, அவருக்கு பரிந்துரைக்கப்பட்ட மருத்துவ உதவிகளை வழங்கும்படி சிறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது. காஷ்மீரில் 8 இடங்களில் சோதனை 'ஒயிட்காலர் பயங்கரவாதம்' என, அழைக்கப்படும் டில்லி கார் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள், ஜம்மு - காஷ்மீரில் உள்ள புல்வாமா, சோபியான், குல்காம் மாவட்டங்களில் எட்டு இடங்களில் நேற்று சோதனை நடத்தினர். கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையதாக கைது செய்யப்பட்டுள்ள மவுல்வி இர்பான் அஹ்மது வாகே, டாக்டர் ஆதில் அகமது ஆகியோரின் வீடுகள் மற்றும் அவர்களுக்கு சொந்தமான இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை