உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நேபாளத்தில் மார்ச் 5ல் பார்லிமென்ட் தேர்தல்

நேபாளத்தில் மார்ச் 5ல் பார்லிமென்ட் தேர்தல்

காத்மாண்டு: நேபாளத்தில், இடைக்கால பிரதமராக அந்நாட்டின் உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சுசீலா கார்கி பதவியேற்றுள்ள நிலையில், 2026 மார்ச் 5ல் பார்லி., தேர்தல் நடைபெறும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. நம் அண்டை நாடான நேபாளத்தில், சமூக ஊடகங்களுக்கு தடை விதிக்கப்பட்டதை எதிர்த்தும், ஊழலை கண்டித்தும் தலைநகர் காத்மாண்டு உட்பட பல்வேறு நகரங்களில் இளைஞர்கள் மாபெரும் போராட்டம் நடத்தினர். இது வன்முறையாக மாறிய நிலையில், பார்லி., கட்டடத்துக்கு தீ வைக்கப்பட்டது. மேலும் அரசு அலுவலகங்களும் சூறையாடப்பட்டன. நிலைமை கை மீறி போனதை அடுத்து, பிரதமர் பதவியை கே.பி.சர்மா ஒலி ராஜினாமா செய்தார். தொடர்ந்து அவர் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது. இந்த வன்முறையில், 51 பேர் உயிரிழந்தனர்; பலர் காயமடைந்தனர். இதற்கிடையே, நேபாளத்தின் இடைக்கால பிரதமராக அந்நாட்டின் உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சுசீலா கார்கி நேற்று முன்தினம் பதவியேற்றார். தொடர்ந்து, நேபாள பார்லி., கலைக்கப்பட்டது . இந்நிலையில், நேபாளத்தில் அடுத்தாண்டு மார்ச் 5ல், பார்லி., பொதுத்தேர்தல் நடக்கும் என்றும், அதுவரை, சுசீலா கார்கி இடைக்கால பிரதமராக பதவி வகிப்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. நேபாள இடைக்கால பிரதமராக பதவியேற்றுள்ள சுசீலா கார்கிக்கு வாழ்த்துகள். அந்நாட்டு மக்களின் அமைதி, முன்னேற்றம், செழிப்புக்கு இந்தியா உறுதிபூண்டுள்ளது. -நரேந்திர மோடி, பிரதமர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ