உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அதிகாரி வீடுகளில் சோதனை ரூ.100 கோடி பறிமுதல்

அதிகாரி வீடுகளில் சோதனை ரூ.100 கோடி பறிமுதல்

ஹைதராபாத், தெலுங்கானாவில் ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணைய செயலருக்கு சொந்தமான இடங்களில் ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் நடத்திய சோதனையில், 100 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டன.தெலுங்கானாவில் முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது.

திடீர் ஆய்வு

இங்கு, தெலுங்கானா மாநிலத்தின் ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணைய செயலராக இருப்பவர் சிவ பாலகிருஷ்ணா. இவர், ஹைதராபாத் நகர மேம்பாட்டு ஆணையத்தின் முன்னாள் இயக்குனராகவும் பதவி வகித்தவர்.இவர் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடர்ந்து புகார்கள் வந்தன. இதையடுத்து, சிவ பாலகிருஷ்ணாவுக்கு சொந்தமான வீடு, அலுவலகங்கள், அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகள் என, 20 இடங்களில் ஊழல் தடுப்புப் பிரிவினர் நேற்று திடீர் ஆய்வு செய்தனர். இதேபோல் அவரது வங்கி லாக்கர்களிலும் அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில், பினாமியின் பெயரில் பல அடுக்குமாடி குடியிருப்புகள் வைத்திருப்பதுடன், வங்கி வைப்புத் தொகை உள்ளிட்ட ஏராளமான சொத்துகள் குவித்து வைத்திருப்பதும் தெரியவந்தது. இதுதவிர சோதனையின் போது, 40 லட்சம் ரொக்கம், 2 கிலோ தங்க நகைகள், 60 உயர்ரக கை கடிகாரங்கள், நில பத்திரங்கள், வங்கி வைப்புத்தொகைக்கான ஆவணங்கள், 14 மொபைல் போன்கள், 10 லேப்டாப்கள் உட்பட ஏராளமான மின்னணு சாதனங்களையும் அதிகாரிகள் கைப்பற்றினர்.

தொடர்ந்து விசாரணை

சிவ பாலகிருஷ்ணாவுக்கு சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட இச்சோதனையின் வாயிலாக, 100 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து, அவரிடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை