UPDATED : நவ 14, 2025 08:30 PM | ADDED : நவ 14, 2025 06:48 PM
பாட்னா: பீஹாரில் நீண்ட இழுபறிக்கு பிறகு ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி வெற்றி பெற்றார்.பீஹார் சட்டசபை தேர்தலில் ரகோபூர் தொகுதியில் ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி போட்டியிட்டார். 2015 முதல் இந்தத் தொகுதியில் அவர் எம்எல்ஏ ஆக இருந்து வருகிறார். அதற்கு முன்பு இந்தத் தொகுதியில் இருந்து அவரது தந்தை லாலு மற்றும் தாயார் ராப்ரி ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர். கடந்த தேர்தலில் தேஜஸ்வி 38 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தார். இதனால், இந்த முறை அவர் எளிதாக வெற்றி பெறுவார் என ஆர்ஜேடி தொண்டர்கள் எதிர்பார்த்தனர்.இந்த முறை பாஜ சதிஸ்குமார் யாதவ் என்பவரை களமிறக்கியது. இவர் 2010 தேர்தலில்,இந்த தொகுதியில் ராப்ரி தேவியை தோற்கடித்தவர் ஆவார். ஜன்சுராஜ் கட்சியும் களமிறங்கியது. இது போதாது என்று, தேஜஸ்வியின் சகோதரர் தேஜ் பிரதாப்பும் ஜன்சக்தி ஜனதா தளம் என்ற கட்சியை துவக்கி இந்தத் தொகுதியில் சகோதரருக்கு எதிராக வேட்பாளரை களமிறக்கினார்.துவக்கம் முதல் இந்தத் தொகுதியில் தேஜஸ்வி பின்னடைவை சந்தித்து வந்தார். பிறகு கடைசி சில சுற்றுகளில் கூடுதல் ஓட்டுக்கள் பெற்ற தேஜஸ்வி 14,532 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்தத் தேர்தலில் ஆர்ஜேடி கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்ட நிலையில், அக்கட்சியின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட தேஜஸ்வி வெற்றி பெற்றுள்ளது அக்கட்சி தொண்டர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேஜ் பிரதாப் தோல்வி
பெண் ஒருவருடன் உள்ள உறவை வெளிப்படையாக அறிவித்த லாலு பிரசாத்தின் மூத்த மகன் தேஜ் பிரதாப் , ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியில் இருந்து ஆறு ஆண்டுகள் நீக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து அவர், ஜன்சக்தி ஜனதா தளம் என்ற தனிக்கட்சியை துவக்கி மஹூவா தொகுதியில் போட்டியிட்டார். இந்த தேர்தலில் அவர் 3வது இடத்தையே பிடித்தார். அவருக்கு 35,703 ஓட்டுகள் மட்டுமே கிடைத்தன. லோக்ஜனசக்தி கட்சியின் சஞ்சய் குமார் சிங் 87,641 ஓட்டு பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட ஆர்ஜேடியின் முகேஷ் குமார் ரவுசன் 44,997 ஓட்டுகள் பெற்றார்.