புதுடில்லி: நாட்டையே உலுக்கிய நிதாரி படுகொலை சம்பவத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட குற்றவாளி சுரேந்திர கோஹ்லியை, கடைசி வழக்கில் இருந்தும் உச்ச நீதிமன்றம் நேற்று விடுதலை செய்தது. உத்தர பிரதேசத்தின் நிதாரி பகுதியில், கடந்த, 2006ல் நடந்த படுகொலை சம்பவங்கள் நாட்டையே உலுக்கின. கைது தொழிலதிபர் மொனீந்தர் சிங் பாந்தரின் வீட்டின் பின்புறம் உள்ள சாக்கடையில் இருந்து மனித எலும்புகூடுகள் கண்டெடுக்கப்பட்டன. வழக்கு விசாரணையில் சிறுமியர், இளம் பெண் உள்ளிட்ட, 19 பேர் பங்களாவில் புதைக்கப்பட்டது அம்பலமானது. இதையடுத்து தொழிலதிபர் மொனீந்தர் சிங், அவரது வீட்டு வேலைக்காரர் சுரேந்திர கோஹ்லி இருவரும் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பான வழக்கு சி.பி.ஐ., வசம் ஒப்படைக்கப்பட்டது. விசாரணையில் சிறுமியர், பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதும், அவர்களில் பெரும்பாலானவர்கள் அந்தப் பகுதியில் இருந்து காணாமல் போன ஏழைக் குழந்தைகள், இளம் பெண்கள் என்பதும் வெளிச்சத்துக்கு வந்தது. கொலை, கடத்தல், பாலியல் பலாத்காரம், சாட்சியங்களை அழித்தது என இருவர் மீதும் பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில், 2009 முதல், 2017 வரை நடந்த, 12 வழக்குகளில், இருவரையும் குற்றவாளிகளாக அறிவித்து சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றம் துாக்கு தண்டனை விதித்தது. இதில், 15 வயது சிறுமி தொடர்பான, 13வது வழக்கை விசாரித்த அலஹாபாத் உயர் நீதிமன்றம், கோ ஹ்லியை மட்டும் குற்றவாளியாக அறிவித்து பாந்தரை விடுதலை செய்தது. இதை எதிர்த்து, 2011ல் கோஹ்லி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மீண்டும், 2014ல் கோஹ்லி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுவும் நிராகரிக்கப்பட்டது. இதற்கிடையே, கடந்த, 2015ல் கோஹ்லியின் கருணை மனு மீது முடிவெடுப்பதில் ஏற்பட்ட தாமதத்தை கருத்தில் கொண்டு, துாக்கு தண்டனையை ரத்து செய்து, ஆயுள் தண்டனையாக அலஹாபாத் உயர் நீதி மன்றம் குறைத்தது. விசாரணை இதைத் தொடர்ந்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்களை விசாரித்த உயர் நீதிமன்றம், கோஹ்லி மற்றும் பாந்தர் இருவரையும், 12 வழக்குகளில் இருந்து விடுதலை செய்தது. இதனால், பாந்தர் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில், 15 வயது சிறுமி கொலை தொடர்பான 13வது வழக்கை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் கோஹ்லி சீராய்வு மனு தாக்கல் செய்தார். கடந்த 2011 முதல் இம்மனு மீது விசாரணை நடந்து வருகிறது. முந்தைய விசாரணையின் போது, 'சமையலுக்கு பயன்படுத்தும் கத்தி மட்டுமே பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதை வைத்து கோஹ்லியை குற்றவாளி என உறுதி செய்தது எப்படி' என, உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பி இருந்தது. தற்போது இவ் வழக்கு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், நீதிபதிகள் சூர்யகாந்த் மற்றும் விக்ரம் நாத் அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, 'மனுதாரர் அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் விடுவிக்கப்படுகிறார். எனவே, அவரை உடனடியாக விடுதலை செய்ய உத்தரவிடுகிறோம்' என, நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.