உள்ளூர் செய்திகள்

அடுத்தாண்டு முதல் ஆன்லைனில் நீட் தேர்வு; வினாத்தாள் கசிவால் மத்திய அரசு முடிவு

புதுடில்லி: “கடந்த 3ம் தேதி நடந்த 'நீட்' தேர்வு ரத்து செய்யப்பட்டதை அடுத்து, மறு தேர்வு வரும் ஜூன் 21ல் நடத்தப்படும்; அடுத்தாண்டு முதல், 'ஆன்லைன்' முறையில் தேர்வு நடத்தப்படும்,” என, மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்துள்ளார்.நாடு முழுதும் உள்ள மருத்துவக் கல்லுாரிகளில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளில் சேர, 'நீட்' நுழைவுத் தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.என்.டி.ஏ., எனப்படும் தேசிய தேர்வு முகமை, இந்த தேர்வை நடத்துகிறது. இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான இந்தாண்டுக்கான நீட் தேர்வு, கடந்த 3ம் தேதி நடத்தப்பட்டது.விசாரணைநாடு முழுதும், 22 லட்சத்துக்கும் அதிகமானோர் இந்த தேர்வை எழுதினர். இந்த தேர்வு நடப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன், ராஜஸ்தான் உட்பட சில மாநிலங்களில் நீட் வினாத்தாள் கசிந்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பான விசாரணையில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணையை தொடர்கின்றனர்.வினாத்தாள் கசிவு எதிரொலியாக, கடந்த 3ம் தேதி நடந்த நீட் தேர்வு ரத்து செய்யப்படுவதாக தேசிய தேர்வு முகமை அறிவித்தது. இதையடுத்து, மறுதேர்வு நடத்தப்படுவது தொடர்பான உயர்மட்ட ஆலோசனை கூட்டம், டில்லியில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் இல்லத்தில் நேற்று நடந்தது.இதை தொடர்ந்து, அமைச்சர் தர்மேந்திர பிரதான் செய்தியாளர்களிடம் கூறியதாவது:கடந்த 3ம் தேதி நீட் தேர்வு நடத்தப்பட்ட நிலையில், 7ம் தேதி ஊகத் தாள்கள் என கூறப்படுபவற்றில் இடம்பெற்றிருந்த சில கேள்விகள், இந்தாண்டின் கேள்வித்தாள்களிலும் இடம்பெற்றிருந்தது தெரியவந்தது.இதையடுத்து, 3ம் தேதி நடந்த தேர்வு ரத்து செய்யப்பட்டது. இதற்கான மறுதேர்வு, அடுத்த மாதம் 21ம் தேதி நடத்தப்படும். இந்த மறு தேர்வுக்கு மாணவர்களிடம் இருந்து கட்டணங்கள் வசூலிக்கப்படாது.இந்த தேர்வின் போது, தங்களுக்கான நகரங்களை மாணவர்கள் தேர்வு செய்து கொள்ள ஒரு மாதம் கால அவகாசம் வழங்கப்படும். இந்த தேர்வில் மாணவர்களுக்கு கூடுதலாக 15 நிமிடங்கள் அவகாசம் வழங்கப்படும். கூடுதலாக வழங்கப்படும் இந்த 15 நிமிடங்கள் வாயிலாக, மாணவர்கள் இறுக்கமான மன நிலையில் இருந்து மீள முடியும்.முன்னுரிமைமறுதேர்வுக்கான நுழைவுச் சீட்டுகள், ஜூன் 14ம் தேதிக்குள் அனைத்து தேர்வர்களுக்கும் வழங்கப்படும். மாணவர்களின் போக்குவரத்து ஏற்பாடுகள் தொடர்பாக மத்திய அரசு, அந்தந்த மாநில அரசுகளுடன் ஒருங்கிணைந்து செயல்படும்.மறுதேர்வு நடத்தப்படும் நாளில் வானிலை மாற்றங்கள் ஏற்படும் பட்சத்தில், அதற்கான மாற்று ஏற்பாடுகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டு உள்ளது.மாணவர்களின் எதிர்காலமே மத்திய அரசின் முதன்மையான முன்னுரிமை. எந்தவொரு மாபியா சதித் திட்டமோ அல்லது பணபலமோ, உண்மையான மாணவர்களுக்கான இடத்தை பறித்து செல்ல விடமாட்டோம். தற்போது நடத்தப்பட உள்ள மறுதேர்வு மட்டுமின்றி எதிர்காலத்திலும் நீட் தேர்வு முறைகேட்டில் ஈடுபடுவோர் மீது, சகிப்புத்தன்மையற்ற கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.பாதுகாப்புநீட் மறுதேர்வை மாணவர்கள் எந்தவித அச்சமும் இன்றி எதிர்கொள்ளுங்கள். அரசு உங்களுக்கு துணையாக உள்ளது. இந்த முறை எந்தவித முறைகேடுகளும் நடக்க அனுமதிக்க மாட்டோம். இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியில் நாள்தோறும் புதிய சவால்களை எதிர்கொண்டு வருகிறோம்.வரும் காலங்களில் முறைகேடுகளை தவிர்க்க, அடுத்தாண்டு முதல் நீட் நுழைவு தேர்வு கணினி அடிப்படையில் ஆன்லைனில் நடத்தப்படும். இது, ஓ.எம்.ஆர்., முறையில் நடத்தப்படுவதை விட பாதுகாப்பானது.இவ்வாறு அவர் கூறினார்.ஜூலையில் மருத்துவ மாணவர் சேர்க்கை பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் வந்த நிலையில், 'நீட்' தேர்வு பிரச்னையால், மாணவர்கள் ஒன்றரை மாதம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. அதே நேரம், மறுதேர்வு நடத்தப்பட்டு, ஒரு வாரத்தில் அதற்கான முடிவுகளை வெளியிட, தேசிய தேர்வு முகமை பணிகளை துவக்கியுள்ளது. எனவே, மருத்துவ மாணவர் சேர்க்கை, ஜூலை மாதம் துவங்கி ஆக., மாதம் வரை நடக்க வாய்ப்புள்ளது என, மருத்துவ மாணவர் சேர்க்கை அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்