உள்ளூர் செய்திகள்

இளைஞர் இலக்கிய திருவிழா போட்டி, வெற்றி பெற்ற மாணவியர்களுக்கு பரிசு

கடலுார்: சென்னை இளைஞர் இலக்கியத் திருவிழா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவியர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுத்தொகை வழங்கப்பட்டது.சென்னை இளைஞர் இலக்கியத் திருவிழா போட்டிகளில் வெற்றிபெற்ற 36 மாணவியர்களை பாராட்டும் வகையில், கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நிகழ்ச்சி நடந்தது. இதில் கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் சான்றிதழ் மற்றும் பரிசுத் தொகையினை வழங்கினார்.இது குறித்து கலெக்டர் கூறியதாவது:மாணவ மாணவிகளின் தனித்திறன்களை வளர்த்துக் கொள்ளும் வகையிலும், வகுப்பறை கற்றலுக்கு அப்பால் சென்று மாணவர்கள் தங்கள் ஆர்வம், திறமை மற்றும் தலைமைத்துவ திறன்களை மேன்மைப்படுத்துவதற்கான வாய்ப்புகளை வழங்கும் வகையிலும் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இதையொட்டி பொது நுாலக இயக்ககம் சார்பில் கல்லுாரி மாணவர்களிடையே தமிழ், இலக்கியம், பண்பாடு, கலாசாரம் மற்றும் தமிழ் மரபுகள் ஆகியவற்றை பேணி காப்பதற்காகவும், இலக்கிய ஆர்வத்தினை ஊக்குவிப்பதற்காகவும் இளைஞர் இலக்கிய திருவிழாக்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், 2025ம் ஆண்டுக்கான இளைஞர் இலக்கிய திருவிழா கந்தசாமி நாயுடு மகளிர் கலைக்கல்லுாரியில் நடந்தது.நுால் அறிமுகம், 2 நிமிட பேச்சுப்போட்டி, விவாத மேடை, படத்தொகுப்பு உருவாக்கம், ஓவியப் போட்டி, காலந்தோறும் தமிழ்ப்பேச்சு, இலக்கிய வினாடி வினா, உடனடி ஹைக்கூ, புத்தக மதிப்புரை உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில், 360 மாணவியர் கலந்து கொண்டனர்.இப்போட்டிகளில் மொத்தம் 36 மாணவியர்கள் முதல் 3 இடம் பிடித்து வெற்றி பெற்றுள்ளனர். முதல் இடத்தில் வெற்றிபெற்றவர்களுக்கு 5,000 ரூபாய்; 2ம் இடத்தில் வெற்றிபெற்றவர்களுக்கு 4,000 ரூபாய்; 3ம் இடத்தில் வெற்றிபெற்றவர்களுக்கு 3,000 ரூபாய்; மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.இவ்வாறு அவர் கூறினார்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட நுாலக அலுவலர் முருகன், கல்லுாரி முதல்வர் கோமதி, போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் ஜானகி ராஜா, சண்முகம், மகாலட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்