பாடப்புத்தகங்களில் கதைகள் இல்லை குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுங்கள்
கோவை: பாடப்புத்தங்களில் கதைகள் இல்லை. பள்ளிக்கூடங்களிலும் குழந்தைகளுக்கு கதைகள் சொல்லிக் கொடுப்பதில்லை. வீட்டிலாவது பெற்றோர், தங்கள் குழந்தைகள் சிறுவர் கதைகளை படிக்க ஊக்கப்படுத்த வேண்டும் என கவிஞர் உமாமகேஸ்வரி பேசினார்.கோவையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் சார்பில், சிறுவர்கள் கதை சொல்லும் சிறப்பு நிகழ்ச்சி, தாமஸ் கிளப் அரங்கில் நடந்தது. கவிஞர் பிரியா நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார்.இதில் 20 குழந்தைகள், தங்களின் மழலை மொழியில் மிக அழகான முக பாவனையுடன் கதைகள் சொல்லி அசத்தினர். பாலர் பூங்கா அமைப்பின் நிர்வாகி உஷா, கதையின் பாத்திரங்களுக்கு ஏற்ப நடனம் ஆடியபடி கதை சொல்லி, குழந்தைகளை ரசிக்க வைத்தார்.கதை சொல்லி சரிதாஜான் பேசுகையில், குழந்தைகளுக்கான கதைகளாக காக்கா, நரி கதை, முயல், ஆமைக்கதைகள் என, 10 பத்து கதைகள்தான் தொடர்ந்து சொல்லப்படுகின்றன. இவற்றை தவிர்த்து குழந்தைகளுக்கான கதைகள் ஏராளம் உள்ளன.பெற்றோர்கள் வாசித்து, குழந்தைகளுக்கு சொல்ல வேண்டும். கதைகளை எழுத்து வழக்கில் சொல்லாமல், எதார்த்தமான பாணியில், இயல்பாக சொன்னால் குழந்தைகள் ஆர்வமாக கேட்பார்கள், என்றார்.கவிஞர் மகேஸ்வரி பேசுகையில், சிறுவர் இலக்கியம் என்பது, ஒரு தனி உலகம். பெரியவர்கள் அதை வாசிப்பதில்லை. பாடப்புத்தங்களில் கதைகள் இல்லை. பள்ளிக்கூடங்களில் குழந்தைகளுக்கு கதைகள் சொல்லிக் கொடுப்பதில்லை. வீட்டில் பெற்றோர் சிறுவர் கதைகளை படிக்க ஊக்கப்படுத்த வேண்டும், என்றார்.