உள்ளூர் செய்திகள்

பள்ளி வாகனங்களுக்கு கலர் மாற்றும் உத்தரவுக்கு எதிராக வழக்கு?

கோவை: ‘பள்ளி வாகனத்திற்கு ஆறு மாதத்திற்கு ஒரு முறை கலர் மாற்ற வேண்டும்;  மஞ்சள் நிறத்திற்கு மாறாத பள்ளி வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’ என அதிகாரிகள் எச்சரிப்பது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர  தமிழ்நாடு நர்சரி, பிரைமரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள் நலச்சங்கம் தீர்மானித்துள்ளது. தமிழ்நாடு நர்சரி, பிரைமரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி நலச்சங்க பள்ளித் தாளாளர் கூட்டம் டாடாபாத் பிரேம் கார்டன் பள்ளியில் நடந்தது. மாநில பொதுச் செயலாளர் கிருஷ்ணராஜ் தலைமை வகித்தார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விபரம்:நர்சரி, பிரைமரி பள்ளிகளுக்கு 40 நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. கட்டட இன்ஜினியர், தீயணைப்பு துறை, தாசில்தார் ஆகியோரிடம் தடையில்லா சான்று பெற வேண்டும். மேலும் பள்ளி நடத்த லைசென்ஸை புதுப்பிக்க  வேண்டிய கட்டாயம்  நர்சரி, பிரைமரி பள்ளிகளுக்கு ஏற்பட்டுள்ளது. பல பள்ளிகள் புதுப்பிக்கபடாமல் கொடுக்கப்பட்ட விண்ணப்பங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளதை கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது இயற்றப்பட்ட, ‘பள்ளிக் கட்டடங்களுக்கு உள்ளாட்சித்துறை அப்ரூவல் பெற வேண்டும். அந்த அனுமதியை சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும்’ என்பது சென்ற ஆட்சியில் வெளியான உத்தரவிற்கு எதிராக உள்ளது. பள்ளி நிர்வாகி பெயரில் பள்ளியின் பெயர் பதிவு செய்திருக்க வேண்டும். பள்ளிக் கட்டடங்கள் இரண்டு அல்லது மூன்று மாடிகள் இருந்தால் இடிதாங்கி அமைத்திருக்க வேண்டும். குழந்தைகள் பெயரில் இன்சூரன்ஸ் செய்திருக்க வேண்டும் என்பன போன்ற உத்தரவால் பள்ளியை தொடர்ந்து நடத்துவது கடினமாக உள்ளது. மஞ்சள் நிறத்திற்கு  மாறாத பள்ளி வாகனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளதை கண்டிக்கிறோம். ஆறு மாதத்திற்கு ஒரு முறை பள்ளி வாகனத்திற்கு கலர் மாற்ற வேண்டும் என்பது இயலாத காரியம். அரசியல்வாதிகளை திருப்திபடுத்த அதிகாரிகள் இந்த விஷயத்தில் முயற்சித்தால் இதுகுறித்து நீதிமன்றத்திற்கு செல்வதை விட வேறு வழியில்லை. அக்டோபர் மாதம் தமிழ்நாடு நர்சரி மற்றும் பிரைமரி மெட்ரிக் பள்ளிகளின் நலச்சங்கம் சார்பில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற மெட்ரிக் பள்ளிகளுக்கும், மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகளுக்கும் விருது வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆகவே, 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகள் தங்கள் பள்ளியின் பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும். கூட்டத்தில் மாவட்டத் தலைவர் மாயாதேவி சங்கர், மாவட்ட பொருளாளர் பிரேமா சுந்தர், பள்ளித் தாளாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்