காலநிலை ஆராய்ச்சிக்கு வேளாண் பல்கலையின் புதிய ‘வெப்சைட்’
பல்கலைக்கழக துணைவேந்தர் ராமசாமி, http://agmet.tnau.ac.in/climarice/ என்ற இந்த புதிய இணையத்தளத்தை துவக்கி வைத்து பேசுகையில், “இந்த இணையத்தளம், கிளைமாரைஸ் ஆராய்ச்சியின் ஒரு பகுதியாக உருவாக்கப்பட்டுள்ளது. ஆராய்ச்சி குழு, நில உரிமையாளர்கள், விவசாயிகள் மற்றும் திட்டமிடுவோருக்கு இடையே நல்லுறவை ஏற்படுத்த இணையத்தளம் உதவும். இதை பயன்படுத்தி, மாறிவரும் காலநிலைக்கேற்ப நெல் உற்பத்தியை பெருக்குவதற்கான ஒருங்கிணைந்த நடைமுறை யுத்திகளை உருவாக்க முடியும். இந்த இணையத்தளம் மூலம் வேளாண் பல்கலை, ஆராய்ச்சி முடிவுகளை காலநிலை மாறுதல் ஆராய்ச்சியில் ஈடுபடும் நாடுகள் மற்றும் சிறந்த கல்வி நிறுவனங்களுடன் பரிமாறிக்கொள்ள முடியும்,” என்றார். மண் மற்றும் பயிர் மேலாண்மைத்துறை இயக்குனர் நடராஜன் பேசுகையில், “ காலநிலை மாற்றத்தால் ஏற்படும் தாக்கத்தை குறைக்க கண்டங்களுக்கு இடையே ‘ காலநிலைமாறுபாட்டால் ஏற்படும் வறட்சியும், நெல் விளைச்சலில் ஏற்படும் விளைவுகளும்’ என்ற கூட்டு ஆராய்ச்சித்திட்டத்தை வேளாண் பல்கலை துவக்கியுள்ளது,” என்றார். பேராசிரியர் கீதாலட்சுமி பேசுகையில், “கிளைமாரைஸ் ஆராய்ச்சி, காலநிலை மாறுபாட்டால், காவிரி டெல்டா பகுதியில் நீர்வளம் மற்றும் நெல் உற்பத்தியில் ஏற்படக்கூடிய மாற்றத்தை கணக்கிட உள்ளது. தேசிய அளவில் நெல் உற்பத்தியை நிலைப்படுத்துதல், உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைவதற்கான வழிமுறைகளை கண்டறிதல் ஆகியவை ஆராய்ச்சியின் முக்கிய குறிக்கோள். இந்த ஆராய்ச்சியில் விவசாயிகள், நீர் பயனாளிகள், ஊரக வளர்ச்சித்துறை வல்லுனர்கள், அரசு சார அமைப்புகள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழுக்கள் ஆகியோர் பங்குதாரர்களாக கருதப்படுவர். இவர்கள், ஆராய்ச்சின் பல்வேறு கட்டத்தில் தங்களுடைய கருத்துக்களை பகிர்ந்து கொள்வதால் கால நிலை மாற்றத்தால் நெல் உற்பத்தியில் ஏற்படும் மாற்றங்களை எதிர்கொள்ள சிறந்த திட்டங்களை உருவாக்க முடியும்,” என்றார். இந்த இணையத்தளத்தில் காலநிலை மாறுபாடு, விவசாயம் குறித்த சந்தேகங்களை ஆராய்ச்சிக் குழுவிடம் தெரிவிக்கவும், அவற்றுக்கான விளக்கத்தை தெரிந்து கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும், பயிர், வானிலை மற்றும் நீர் வளம் பற்றிய மாதிரிகள் வெளியிடப்படவுள்ளதால், பங்குதாரர்கள் அவற்றை பயன்படுத்தி எதிர்காலத்தில் காலநிலை மாறுபாட்டால் பயிர் விளைச்சலில் ஏற்படும் மாற்றங்களை கண்டறிய முடியும்.