சரியான திட்டமிடல் இல்லாததால் மாணவிக்கு ஓராண்டு ‘வீண்’
சென்னை மருத்துவக் கல்லூரியில் கிடைத்த இடத்தை வேண்டாம் என திருப்பி ஒப்படைத்த மாணவி, ஓர் ஆண்டு காத்திருந்து, அண்ணா பல்கலைக்கழகத்தில் இ.சி.இ., பிரிவில் சேர முடிவு செய்துள்ளார். திருவண்ணாமலையைச் சேர்ந்த நடராஜன், மகாலட்சுமி தம்பதி மகள் வைஷ்ணவி. பிளஸ் 2 தேர்வில் வேதியியல், கணிதத்தில் 200, உயிரியலில் 198, இயற்பியலில் 197 மதிப்பெண் பெற்றிருந்தார். மருத்துவக் கவுன்சிலிங்கில் 198.25 ‘கட்-ஆப்’ மதிப்பெண் பெற்றார். தரவரிசையில் 241வது ரேங்க் பெற்றிருந்த இம்மாணவி, கடந்த ஜூலை 5ம் தேதி நடந்த கவுன்சிலிங்கில் சென்னை மருத்துவக் கல்லூரியைத் தேர்வு செய்தார். ஆனால், வைஷ்ணவிக்கு எம்.பி.பி.எஸ்., படிப்பதை விட, அண்ணா பல்கலைக்கழகத்தில் இ.சி.இ., படிக்கவே விருப்பம். பொறியியல் கவுன்சிலிங்கில் 199.25 ‘கட்-ஆப்’ மதிப்பெண் பெற்றிருந்த மாணவி வைஷ்ணவி, கடந்த 11ம் தேதி நடந்த கவுன்சிலிங்கில் கலந்துகொள்ள அழைக்கப்பட்டிருந்தார். கலந்து கொண்டிருந்தால், அண்ணா பல்கலைக்கழகத்தில் இ.சி.இ., படிப்பில் சேர எளிதாக இடம் கிடைத்திருக்கும். ஆனால், அதே 11ம் தேதி மருத்துவக் கல்லூரியில் சேர கடைசி நாள் என்பதால், பொறியியல் கவுன்சிலிங்கில் கலந்துகொள்ளாமல், மெட்ராஸ் மருத்துவக் கல்லூரிக்குச் சென்று கட்டணத்தைச் செலுத்தினார். ஆனால், அண்ணா பல்கலைக்கழகத்தில் இ.சி.இ., படிப்பதிலேயே ஆர்வமாக இருந்த மாணவி வைஷ்ணவி, மருத்துவக் கல்லூரி வகுப்புகள் துவங்கும் கடந்த 4ம் தேதி, மருத்துவ மாணவர் சேர்க்கை ஆணையை திரும்ப ஒப்படைத்துவிட்டு, அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் மன்னர் ஜவகரிடம், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் சேர வாய்ப்பு தருமாறு கேட்டுள்ளார். ‘கவுன்சிலிங்கில் கலந்துகொள்ளாததால், அண்ணா பல்கலைக்கழகத்தில் சேர முடியாது’ என அம்மாணவியிடம் தெரிவிக்கப்பட்டது. மருத்துவச் சேர்க்கை ஆணையைத் திருப்பி ஒப்படைத்த நிலையில், அம்மாணவி மருத்துவக் கல்லூரியிலும் சேர முடியாது. அண்ணா பல்கலைக்கழகத்திலும் சேர முடியாததால், இம்மாணவி ஒரு வருடம் காத்திருந்து, அடுத்த ஆண்டு அண்ணா பல்கலைக்கழகத்தில் இ.சி.இ., பிரிவில் சேர முடிவு செய்துள்ளார். இதுகுறித்து மாணவி வைஷ்ணவி கூறியதாவது:எனது தந்தை நடராஜன் திருவண்ணாமலையில் வி.ஏ.ஓ.,வாக இருக்கிறார். தாய் மகாலட்சுமி ஆசிரியராக இருக்கிறார். எனக்கு மருத்துவம் படிப்பதை விட, இ.சி.இ., படிக்கவே விருப்பம். பொறியியல் கவுன்சிலிங்கிற்கு அழைக்கப்பட்டிருந்த அதே ஜூலை 11ம் தேதியில், மருத்துவக் கல்லூரியில் சேர கடைசி நாள் என்பதால், மருத்துவக் கல்லூரியில் பணம் செலுத்த வேண்டியிருந்தது. மருத்துவம், பொறியியல் எந்தப்படிப்பில் சேருவது என்ற குழப்பத்தில் இருந்ததால், என்னால் உறுதியான முடிவு எடுக்க முடியவில்லை. இதனால், பொறியியல் கவுன்சிலிங்கிற்குச் செல்லாமல், மருத்துவக் கல்லூரிக்குச் சென்று கட்டணத்தைச் செலுத்தினேன். சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் படிப்பதை விட, வேறு எங்கும் எந்தப் படிப்பிலும் சேர விரும்பவில்லை. எனவே, ஒரு வருடம் காத்திருந்து அடுத்த ஆண்டு சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் இ.சி.இ., பிரிவில் சேர்ந்து படிக்கவுள்ளேன். இவ்வாறு மாணவி வைஷ்ணவி கூறினார். முன்பே, அண்ணா பல்கலைக்கழகத்தில் இ.சி.இ., படிக்க போகிறேன் என்று திடமான முடிவு செய்திருந்தால் இம்மாணவிக்கு விலைமதிப்பற்ற ஓர் ஆண்டுகாலம் வீணாகி இருக்காது. எனினும், விரும்பியதைத்தான் படிப்பேன் என முடிவு செய்துள்ள இம்மாணவியின் துணிச்சலையும் பாராட்டியாக வேண்டும்.