உள்ளூர் செய்திகள்

முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு; வாரியம் விளக்கம்

சென்னை: ‘முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் தெரிவுப் பட்டியலில் முடிவு நிறுத்தி வைக்கப்பட்டவர்கள், உரிய ஆவணங்களைச் சமர்ப்பித்த பின்னர் முடிவு வெளியிடப்படும்’ என, ஆசிரியர் தேர்வு வாரியம் விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:ஆசிரியர் தேர்வு வாரியத்தால் பல்வேறு துறைகளுக்குத் தேவையான முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களைத் தெரிவு செய்வதற்காக, சென்னை தொழில் மற்றும் செயல் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இருந்து 1:5 விகிதாச்சாரப்படி பட்டியல் பெறப்பட்டது. பட்டியலில் உள்ளவர்களின் சான்றிதழ்களை முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்கள் சரிபார்த்தனர். பின்னர் தெரிவு முடிவுகள் தற்காலிகமாகத் தயாரிக்கப்பட்டன. முடிவுகளை வெளியிட ஆய்வு செய்தபோது, சிலரின் சான்றிதழ்கள் முறையாக இல்லாமலும், சமர்ப்பிக்கப்படாமலும், உரிய முறையில் அமையாமலும், கல்வித் தகுதியை உறுதி செய்ய முடியாமலும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதால் தற்காலிகமாக முடிவுகள் நிறுத்திவைக்கப்பட்டன. முடிவு நிறுத்தி வைக்கப்பட்டவர்களுக்குக் காரணத்தைத் தெரிவித்து, அதை சரிசெய்து அனுப்ப தகவல்கள் அனுப்பப்பட்டுள்ளன. குறைகளை நிவர்த்தி செய்யாமல் அடுத்தவர்களைத் தெரிவு செய்தால் நியாயமாக அமையாது. நிறுத்திவைக்கப்பட்டுள்ள நபர்கள் உரிய காரணத்தை நிவர்த்தி செய்யும்போது, உடனுக்குடன் முடிகளும் வெளியிடப்படும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்