நெல்லையில் வெடிகுண்டு பீதி; பள்ளிகளுக்கு விடுமுறை
இதனால், ஆகஸ்ட் 11ம் தேதி பல்வேறு பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. நெல்லை, சென்னை உட்பட பல்வேறு இடங்களிலும், ரயில்களிலும் சுதந்திர தினத்தையொட்டி வெடிகுண்டு வெடிக்கும் என்ற தகவலால் பயங்கரவாதிகள் நெல்லை பேட்டை ஷேக்அப்துல்காதர், நெல்லை டவுன் ஹீரா, புழல் சிறை கைதி அலிஅப்துல்லா கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டனர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கடந்த சில தினங்களாக வெடிகுண்டு புரளிகள் கிளப்பப்படுகின்றன. விக்கிரமசிங்கபுரம் அமலி பெண்கள் பள்ளிக்கு ஒரு சிறுமி போன் செய்து மூன்று நாள் விடுமுறை விடாவிட்டால் குண்டு வெடிக்கும் என கூறினாள். பாளையங்கோட்டை வ.உ.சி., மைதானத்தில் ஆண்டுதோறும் சுதந்திர தின விழா நடக்கும். இதில் ஆயிரக்கணக்கான மாணவிகள் பங்கேற்பர். அங்கு வெடிகுண்டு வைக்கப்படும் என பீதியுள்ளதால், அந்த விழாவை நிறுத்துவதற்காக, ‘பெற்றோர்’ என்ற பெயரில் சில விஷமிகள் பள்ளிகளுக்கு மிரட்டல் கடிதங்களை அனுப்பிவருகின்றனர். பாளையங்கோட்டை குழந்தை இயேசு பள்ளிக்கும் இத்தகைய மிரட்டல் கடிதம் வந்தது. பகலில் அந்த பள்ளியில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக வதந்தி பரப்பப்பட்டது. சில பெற்றோர் தங்கள் குழந்தைகளை அழைத்துச் செல்ல வந்தனர். எனவே போலீசாரும் நம்பிக்கை ஏற்படுத்துவதற்காக மோப்பநாயுடன் குண்டு சோதனை நடத்தினர். உண்மையிலேயே குண்டு இருக்கிறது எனக் கூறி பெற்றோர் விடுமுறை விடக்கோரினர். அந்த பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது. இதைத் தொடர்ந்து பாளையங்கோட்டையில் உள்ள பெரும்பாலான பள்ளிகளிலும் பெற்றோர் வந்து குழந்தைகளை அழைத்துச் சென்றதால் களேபரமானது. நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சசிகலா கூறுகையில், ‘எந்த பள்ளிக்கும் நாங்கள் விடுமுறை அறிவிக்கவில்லை. பெற்றோர் அழைத்துச் செல்லும்போது தடுக்கமுடியாது. பள்ளிகள் தொடர்ந்து செயல்படும்’ என்றார். இப்பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக அனைத்து பள்ளி தலைமையாசிரியர்கள், முதன்மை கல்வி அதிகாரியை அழைத்து போலீஸ் கமிஷனர் மஞ்சுநாத் பள்ளிகளை தொடர்ந்து நடத்த வலியுறுத்தினார்.