உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / கட்சியினர், வாக்காளர் மனநிலை எப்படி இருக்கு! ஜூன் 4 வரை நீடிக்கும் சஸ்பென்ஸ்

கட்சியினர், வாக்காளர் மனநிலை எப்படி இருக்கு! ஜூன் 4 வரை நீடிக்கும் சஸ்பென்ஸ்

திருப்பூர் லோக்சபா தொகுதியில் சுப்பராயன் (இந்திய கம்யூ.,), அருணாச்சலம்(அ.தி.மு.க.,), முருகானந்தம் (பா.ஜ.,), சீதாலட்சுமி (நாம் தமிழர்) உள்ளிட்ட 13 வேட்பாளர்கள் களம் கண்டனர். மொத்தம் 70.58 சதவீதம் வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். வெற்றி வேட்பாளர் யார் என்பது குறித்த பேச்சு, தேர்தல் முடிந்தாலும், கட்சியினர், வாக்காளர்கள் மத்தியில் ஓயவில்லை. ஜூன் 4 அன்று தான் வாக்கு எண்ணிக்கை என்பதால், அதுவரை இந்த 'சஸ்பென்ஸ்' நீடிக்கும். தொகுதிக்குள் கட்சியினர், தொண்டர்கள், வாக்காளர், அதிகாரிகள் மனநிலை எப்படி இருக்கிறது?

கட்சி நிர்வாகிகள்

தேர்தல் என்றாலே கடும் உழைப்புதான் முக்கியம். களத்தில் சோர்ந்தால் வெற்றி கிடைக்காது; தோல்வியைத் தழுவினாலும், இறுதிவரை போராட வேண்டும். திருப்பூரில் இந்திய கம்யூ., - அ.தி.மு.க., - பா.ஜ., வேட்பாளர்களிடையே கடும் போட்டி நிலவியது. 'நாம் தமிழர்' வேட்பாளரும் சளைக்கவில்லை.வாக்குகள் எங்கெல்லாம் குறைவாகக் கிடைக்கும் என்று கருதப்பட்டதோ அந்த இடங்களில் வேட்பாளர்களும், கட்சியினரும் பிரசாரத்தைக் கூர்மைப்படுத்தினர். வாக்குகள் நிச்சயம் அதிகளவில் கிடைக்கும் என்று கருதப்பட்ட இடங்களிலும், பிரதானமாக பிரசாரம் மேற்கொள்ள வேண்டியிருந்தது. திருப்பூரைப் பொறுத்தவரை போட்டி கடுமையானதாக இருந்தாலும், பிரசாரத்தில் தனி நபர் தாக்குதல், அவதுாறுப் பேச்சுகள் போன்றவை வேட்பாளர்களிடமும், கட்சி நிர்வாகிகளிடமும் இருக்காது. இந்த முறையும் அவ்வாறே இருந்தது. அப்படிப்பட்ட ஒரு சூழல் நேரும்போதும், அது எல்லை மீறாமல் தடுக்கப்பட்டது.சித்தாந்தரீதியான விஷயங்கள், எப்போதும் அவரவர் சுதந்திரத்துக்குட்பட்டவை; அது ஒரு பிரச்னையாக உருவெடுக்காமல் இருப்பதில் கட்சியினர், இம்முறையும் கவனம் செலுத்தியிருக்கின்றனர்.

தொண்டர்கள்

தொண்டர்கள் பெரும்பாலானோர், என்றென்றும் தொண்டர்கள்தான். கட்சி நிர்வாகிகளுக்கு நன்கறிந்த தொண்டர்கள் கூட, பெரும்பாலும், தேர்தல் உள்ளிட்ட நேரங்களில்தான் மதிக்கப்படுவர். அத்தகைய நிலைதான் இந்த முறையும். இன்னும் சொல்லப்போனால், தாங்கள் மதிக்கப்பட வேண்டும் என்ற எண்ணம்கூட தொண்டர்களுக்கு இருப்பதில்லை. தங்களை ஈர்த்த தலைவர்களை ஒருபோதும் யாருக்காகவும் விட்டுக்கொடுப்பதில்லை. குறிப்பாக, பணத்துக்குக் கூட விலை போவதில்லை.பிரசாரக் காலம் ஓய்ந்ததும் தங்கள் வேலைக்குத் திரும்பிவிடும் தொண்டர்கள், தேர்தல் முடிவு வரும் வரை, இதயத்திற்குள் 'அக்னிப்பிழம்பு' சுழன்றுகொண்டிருப்பது போன்ற மனநிலையிலேயே இருப்பர். இந்த முறை, கணிக்க முடியாத அளவு கடினமான தேர்தலாக இருந்தாலும், தொண்டர்களைப் பொறுத்தவரை அவரவர் கட்சி சார்ந்த வேட்பாளர் வெற்றி பெறுவார் என்ற பெரும் நம்பிக்கையுடன் இருக்கின்றனர். 'இப்பவே வேணும்னாலும் எண்ணிப்பாருங்க... நம்மாளு தாங்க ஜெயிப்பாரு' என்று தங்கள் எண்ணத்தைப் பகிர்ந்துகொண்டேதான் உள்ளனர்.தேர்தல் முடிவு பாதகமாக அமையும்போது வேட்பாளர், முக்கிய நிர்வாகிகளைக் காட்டிலும் உடைந்த மனநிலைக்குச் செல்பவர்கள் இத்தகைய தொண்டர்கள்தான்.

வாக்காளர்கள்

பலவகை எண்ணங்களைக் கொண்டிருப்பவர்கள் வாக்காளர்கள்; தொடர்ந்து ஒரே கட்சிக்கோ, வேட்பாளருக்கோ வாக்களிப்பவர்கள் குறைவு. சூழலுக்கேற்ப இவர்களது கருத்துகள் மாறும். வேட்பாளர்கள் குறித்தும், கட்சிகளின் நிலைப்பாடுகள் குறித்தும் தற்போது களத்திலேயே பேசக்கூடியவர்களாக வாக்காளர்கள் மாறிவருகின்றனர். இத்தகைய வாக்காளர்களைக் கண்டால், வேட்பாளர்கள் பெரும்பாலானோருக்குப் பயம்.'நேருக்கு நேர்' கேள்வி கேட்கும்போது சித்தாந்தங்களைக் காட்டிலும், தங்கள் பகுதிப் பிரச்னைகளைத் தான் பேசத் துவங்குவர். அந்தப் பிரச்னைகள் பலவும், காலம் காலமாக நீட்டித்துக்கொண்டிருக்கும் பிரச்னைகளாக இருக்கும். 'பரிசீலிக்கிறோம்; கட்டாயம் தீர்வு காண்போம்' என்றெல்லாம் 'கீறல் விழுந்த' ரெக்கார்டு போல பதில் சொன்னால், 'சுருக்'கென்று தைத்துவிடுகிற மாதிரி வாக்காளர்கள் வேட்பாளர்களைத் 'தாளித்துவிடுவதும்' நடக்கிறது.வாக்களித்து முடித்தவுடனேயே, அதுவரை வாக்குக் கேட்டு வலம் வந்த கட்சியினரைக் காண முடியாத ஏமாற்ற மனநிலைதான் வாக்காளர்கள் பலருக்கும் தற்போதும் வாய்த்திருக்கிறது.ஆனாலும், 'நான் ஓட்டு போட்ட வேட்பாளர் ஜெயிக்கணுமே' என்ற இதயபூர்வ பிரார்த்தனை வாக்காளர் மனதிற்குள் ஜூன் 4 வரை ஓடிக்கொண்டேதான் இருக்கும்.

அலுவலர்கள்

உயர் அதிகாரிகளில் துவங்கி கடைநிலை ஊழியர் வரை தேர்தல் பணியில் ஈடுபடுவோரின் அர்ப்பணிப்புணர்வு பெரிது. மறு வாக்குப்பதிவுக்குக் கூட எங்கும் வாய்ப்பில்லாத நிலையில், அவர்களது பணி கண்ணியம் நிறைந்ததாகத் தான் இருக்கிறது.இருப்பினும் உயர் அதிகாரிகளிடம் புகார் கொடுக்கக்கூட முடியவில்லையே என்ற ஆதங்கத்தில் வேட்பாளர்களும், கட்சியினரும் இருப்பது, தற்போதும் நடந்திருக்கிறது. பல புகார்கள், தேர்தல் காலத்தில் உணர்ச்சி பொங்க எழுவதுதான். அதன் வேகம், சில மணி நேரங்களில் அதுவாகவே கரைந்துவிடுகிறது. அதேசமயம், சில புகார்கள், அதிகாரிகள், ஊழியர்களின் பணியையே சிதைத்துவிடவும் செய்கிறது.பறக்கும் படையினர் விதிமுறைப்படி நடவடிக்கையில் இறங்கத்தான் வேண்டியிருக்கிறது. அதனால், பாதிப்பு என்று வந்துவிடும்போது, பாதிக்கப்பட்டவர்களின் 'சாபம்' பறக்கும் படையினர் மீது பாய்கிறது. எல்லாம் 'விதி'.தேர்தல் பணி முடியும் வரை கண்கள் துாக்கத்தைத் தழுவுவதில்லை. மின்னணு இயந்திரங்கள் பாதுகாப்பாக வாக்கு எண்ணிக்கை மையத்தை அடைந்தபிறகுதான் பல அதிகாரிகளுக்கும், ஊழியர்களுக்கும் நிம்மதியான துாக்கம். ஆனாலும், ஜூன் 4 வரை ஏதேனும் ஒருவகையில் நிம்மதிக்குறைவு இருந்துகொண்டுதானே இருக்கும்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை