உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் /  95 தோல்விகள் = ராகுல்: தொடர் தோல்விக்கான விருது என்றால் அது அவருக்கு தான் : பா.ஜ., கிண்டல்

 95 தோல்விகள் = ராகுல்: தொடர் தோல்விக்கான விருது என்றால் அது அவருக்கு தான் : பா.ஜ., கிண்டல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 'காங்., - எம்.பி., ராகுல், கடந்த 20 ஆண்டுகளில், 95 தேர்தல் தோல்விகளை சந்தித்துள்ளார். தொடர் தோல்விக்கான விருது அறிவிக்கப்பட்டால், அவரை தவிர வேறு யாரும் அதை வெல்ல முடியாது' என, பீஹார் தேர்தல் முடிவுகளை சுட்டிக்காட்டி, பா.ஜ., தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் அமித் மாள்வியா கிண்டலடித்துள்ளார். பீஹாரில் மொத்தமுள்ள, 243 சட்டசபை தொகுதிகளுக்கு, கடந்த 6 மற்றும் 11ல், இரு கட்டங்களாக தேர்தல் நடந்தது. இதில் பதிவான ஓட்டுகள் நேற்று எண்ணப்பட்டன. பா.ஜ., தலைமையிலான ஆளும் தே.ஜ., கூட்டணி, 202 தொகுதிகளில் வென்றன. லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் - காங்., அடங்கிய, 'மஹாகட்பந்தன்' கூட்டணி, 31 தொகுதிகளையே கைப்பற்றியது. தே.ஜ., கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கப் போவது உறுதியாகி உள்ளது. இந்நிலையில், பீஹார் தேர்தல் முடிவுகளை சுட்டிக்காட்டி, பா.ஜ., தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் அமித் மாள்வியா, சமூக வலைதளத்தில் நேற்று வெளியிட்ட பதிவு: ராகுல் அவர்களே! மற்றொரு தேர்தல்; மற்றொரு தோல்வி. தேர்தல்களில் தொடர்ச்சியான தோல்விக்கான விருதுகள் இருந்தால், நிச்சயமாக, அவற்றை அவர் அள்ளிச் செல்வார். அவரை கண்டு பின்னடைவுகள் கூட ஆச்சரியப்படும். இவ்வாறு பதிவிட்ட அவர், காங்., நட்சத்திர பேச்சாளராக ராகுல் மாறியதில் இருந்து, அக்கட்சி சந்தித்த, 95 தேர்தல் தோல்விகள் தொடர்பான வரைபடத்தையும் வெளியிட்டார். அதில் கடந்த 20 ஆண்டுகளில் பல்வேறு மாநிலங்களில் காங்கிரஸ் தோல்வி அடைந்த விபரங்கள் இடம்பெற்றுள்ளன.

புஸ்வாணமான ராகுல் 'மேஜிக்'

பீஹார் தேர்தல் முடிவுகள் காங்கிரசின் படுதோல்வியை குறிப்பது மட்டுமின்றி, ஓட்டுகளை பா.ஜ., திருடுவதாக வாக்காளர்களை நம்ப வைக்க முயன்ற ராகுலின் பிரசாரத்துக்கும் பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. ஓட்டு திருட்டு தொடர்பாக, கடந்த ஆக., - செப்., வரை பீஹார் முழுதும், 'வாக்காளர் உரிமை யாத்திரை' என்ற பெயரில் ராகுல் பேரணி நடத்தினார். இது, மக்களிடம் எடுபடவில்லை என்பதையே தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. ராகுல் பேரணி நடத்திய, 110 சட்டசபை தொகுதிகளில், ஒன்றில் கூட காங்., வெற்றி பெறவில்லை. 2024 லோக்சபா தேர்தலுக்கு முன், 'பாரத் ஜோடோ யாத்திரை' என்ற பெயரில் நாடு முழுதும் அவர் நடைபயணம் மேற்கொண்டார். இது, அந்த தேர்தலில் காங்கிரசுக்கு ஓரளவு கை கொடுத்தது. தெலுங்கானாவில், 2023 சட்டசபை தேர்தலின் போதும், அவர் நடைபயணம் மேற்கொண்டார். இது, காங்., வெற்றி பெற்று ஆட்சி அமைக்க உதவியது. ஆனால், பீஹாரில் ராகுலின் மேஜிக் எடுபடவில்லை. இதற்கு அவரிடம் உத்வேகம் இல்லாததே காரணம் என, அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி