தமிழகத்தை பா.ஜ.,வுக்கு அ.தி.மு.க., விற்று விடும்: உதயநிதி கிண்டல்
விக்கிரவாண்டி: 'வரும் தேர்தலில் அ.தி.மு.க.,விற்கு வாய்ப்பளித்தால், தமிழகத்தை பா.ஜ.,விடம் விற்று விடுவர்' என துணை முதல்வர் உதயநிதி கூறினார். விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த சிந்தாமணியில் முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலையை திறந்து வைத்து அவர் பேசியதாவது: முதல்வர் ஸ்டாலின், ஒரு கோடியே 15 லட்சம் மகளிருக்கு, மாதம் 1,000 ரூபாய் மகளிர் உரிமைத் தொகை வழங்குகிறார். விடுபட்ட மகளிருக்கு வரும் 12ம் தேதியிலிருந்து வழங்கப்படும். வரும் தேர்தலிலும் மக்கள் வெற்றி வாய்ப்பை தர தயாராக இருக்கின்றனர். அ.தி.மு.க., ஆட்சியில் தமிழகத்தை பா.ஜ.,விற்கு வாடகைக்கு விட்டிருந்தனர். வரும் சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க.,விற்கு வாய்ப்பு அளித்தால், தமிழகத்தை பா.ஜ.,விடம் விற்று விடுவர். பா.ஜ.,வின் அடிமையாக அ.தி.மு.க., செயல்படுகிறது. பா.ஜ., எந்த திட்டத்தை கொண்டு வந்தாலும், 'ஆமாம்' போடுவதிலேயே குறியாக உள்ளனர். 'அமித் ஷா திராவிட முன்னேற்றக் கழகமாக' அ.தி.மு.க., மாறி விட்டது. அந்த அளவிற்கு அமித் ஷாவின் அடிமைகளாக அ.தி.மு.க.,வினர் மாறி விட்டனர். இதற்கு சரியான பதில் அளிக்கும் நேரம் தான், வரும் 2026 சட்டசபை தேர்தல். இவ்வாறு உதயநிதி பேசினார்.