நல்லாற்றை ஆக்கிரமித்து தி.மு.க., அலுவலகம்?: ஆர்.டி.ஓ., தலைமையிலான குழு விசாரணை
அவிநாசி: அவிநாசியில், நல்லாற்றை ஆக்கிரமித்து தி.மு.க., அலுவலகம் கட்டப்பட்டுள்ளதாக தொடுக்கப்பட்ட வழக்கில், ஆற்றில் குறிப்பிட்ட பகுதி நிலவகை மாற்றம் செய்யப்பட்டதா என, ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. இதுதொடர்பாக, ஆர்.டி.ஓ., தலைமையில் விசாரணை துவங்கியுள்ளது. திருப்பூர் மாவட்டம் அவிநாசி சீனிவாசபுரத்தில் நல்லாறு ஒட்டி, குடியிருப்பு, வணிக வளாகம் உள்ளிட்டவை உள்ளன. 'சர்வே எண் 80, 81/72ல், நல்லாற்றை ஆக்கிரமித்து தி.மு.க., அலுவலகம் கட்டப்பட்டுள்ளது; அவற்றை அப்புறப்படுத்த வேண்டும்' என, அ.தி.மு.க., இளைஞர் பாசறை அவிநாசி நகர செயலர் பூபதிராஜா, ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். 'கடந்த 1910, வருவாய் துறையின் நில சர்வே மற்றும் நில ஆவண இணை இயக்குநரகத்தில் உள்ள ஆவணப்படி, சீனிவாசபுரத்தில் சர்வே எண் 80, 81ல் இருப்பது, 'காப்புக்காடு - நல்லாறு' என பதிவாகியுள்ளது. 'கடந்த 2018, வருவாய் துறை நில ஆவணத்திலும் அந்த இடம் நல்லாறு என்று தான் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால், நடப்பாண்டில் அவிநாசி தாலுகா அலுவலகத்தில் உள்ள ஆவணத்தில், அந்த இடம் நத்தம் புறம்போக்கு என பதிவாகியுள்ளது. 'விதிமீறி வருவாய் துறையினர் வகைமாற்றம் செய்துள்ளனர்' என, மனுதாரர் சார்பில் சுட்டிக் காட்டப்பட்டது. பலகட்ட விசாரணை முடிவில், 'நல்லாற்றை ஆக்கிரமித்து தி.மு.க., அலுவலகம் கட்டப்பட்டுள்ளதா என்பது குறித்து விசாரித்து, மூன்று மாதத்திற்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, நில வகைமாற்றம் தொடர்பாக விசாரிக்க ஆர்.டி.ஓ., தலைமையில் குழு அமைக்கப்பட்டு விசாரணை துவங்கியுள்ளது. காழ்ப்புணர்ச்சியால் வழக்கு தி.மு.க., அவிநாசி நகர செயலர் வசந்தகுமார் கூறுகையில், “கடந்த 40 ஆண்டுகளாக எங்கள் தாத்தா காலத்தில் இருந்து அந்த கட்டடம் இருக்கிறது. அது பழுதானதால் புனரமைத்து பயன்படுத்தி வருகிறோம். “விதிமுறைக்கு உட்பட்டு, மின் இணைப்பும் பெற்றுள்ளோம். கட்டடம் அமைந்துள்ள நிலம், நீர்வழித்தடம் அல்ல என்பது தொடர்பான ஆவணமும் சமர்ப்பித்துள்ளோம். காழ்ப்புணர்ச்சி காரணமாக கோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது,” என்றார்.