ஏவுகணை நாயகர் என்று புகழ்பெற்ற அப்துல்கலாம் பல நாடுகளுக்கு, சென்றுள்ளார். இருப்பினும், அவர் முதன் முதலில் வேலைக்காக குடிபெயர்ந்த நகரம் பெங்களூரு தான். பெங்களூருக்கும், கலாமுக்கும் இடையேயான உறவை பற்றி விரிவாகவும், சுவாரசியமான நடையில், இக்கட்டுரை விவரிக்கிறது. நாட்டின் தலைநகர் டில்லியில் ஜனாதிபதியாகவும், அதன் பிறகும் பல ஆண்டுகள் வாழ்ந்த, 'ஏவுகணை நாயகன்' ஏ.பி.ஜே.அப்துல் கலாமுக்கும், விமானவியலின் தலைநகரமான பெங்களூருக்கும் இடையே நீண்ட தொடர்பு உள்ளது. அவற்றில், சில துளிகளை இங்கே பகிர்ந்துள்ளேன். கலாமின் வாழ்க்கையில் சில திருப்புமுனைகள் பெங்களூரில் நிகழ்ந்தன. நாட்டின் பல மாநிலங்களுக்கு அவர் பயணம் செய்திருந்தாலும், சில குறிப்பிட்ட மாநிலங்களில், நகரங்களில் அவர் தன் ஞாபக வேர்களை நிறைய பதியமிட்டிருக்கிறார். கலாம் பிறந்த ராமேஸ்வரம், படித்த மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, பணிபுரிந்த அண்ணா பல்கலைக்கழகம், திருச்சி செயின்ட் ஜோசப் கல்லுாரி, அவரின் நினைவிடம் அமைந்துள்ள பேக்கரும்பு என, தமிழகம் இன்னமும் அவரின் செறிவான நினைவுக் கிடங்காகவே தேசிய அளவில் அறியப்படுகிறது. ஏவூர்தி விஞ்ஞானியாக இஸ்ரோ நிறுவனத்தில் அவர் பணிபுரிந்த திருவனந்தபுரம், தங்கியிருந்த 'இந்திரா பவன்' என கேரளத்தில் அவரின் நினைவுகள் நிரம்பி வழிகின்றன. ஏவுகணை நாயகராக அறியப்படும் அவரின் ஏவுகணை ஆராய்ச்சிகள் நிகழ்ந்த தெலுங்கானாவின் ஹைதராபாத், ஏவுகணைச் சோதனைகள் நடந்த ஒடிசாவின் பாலாசூர், டி.ஆர்.டி.ஓ., தலைவராக அவர் பணிபுரிந்த புதுடில்லி, ஜனாதிபதி மாளிகை, அவரது கடைசிச் சொற்பொழிவு நடந்த மேகாலயாவின் ஷில்லாங் என, பல மாநிலங்கள் அவரின் புகழ்பாடும் நிலப்பரப்புகளாக மிளிர்கின்றன. அந்த வகையில், கலாமின் பாதச்சுவடுகளின் வாசத்தை பெங்களூரு இன்னமும் தன்னகத்தே பொத்தி வைத்திருக்கிறது. கலாமுக்கும், பெங்களூருக்குமான தொடர்பு நீண்ட நெடியது. எம்.ஐ.டி., கல்லுாரியில் வான்வெளி பொறியியல் படித்து முடித்தவுடன், பயிற்சியாளராக பயிற்சி பெறுவதற்காகத் தான் முதன் முதலில் கலாம் பெங்களூருக்கு வந்தார். கடந்த 1957ல் பெங்களூரில் உள்ள ஹிந்துஸ்தான் விமானவியில் நிறுவனத்தில் விமான இன்ஜின் பராமரிப்பு பிரிவில் பயிற்சி பெற்றார். டி.ஆர்.டி.ஓ., பொறியியல் பட்டப்படிப்புக்கு பின், பாதுகாப்பு அமைச்சகத்தின் விமான தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் உற்பத்தி இயக்குநரகம் (DTP - Air) என்ற நிறுவனத்தில் முதுநிலை அறிவியல் உதவியாளராக 1958-ல் பணியில் சேர்ந்தார். இந்த நிறுவனமும், ராணுவ அமைச்சகத்தின் சில அறிவியல் தொழில்நுட்ப நிறுவனங்களும் இணைக்கப்பட்டு டி.ஆர்.டி.ஓ., (Defence Research and Development Organisation - DRDO) என்ற நிறுவனமாக உருப்பெற்றது. பெங்களூரில் 1959ல், டி.ஆர்.டி.ஓ., ஆய்வகமாக ஏ.டி.ஈ., (Aeronautical Development Establishment -ADE) , எனும் விமானவியல் மேம்பாட்டு நிறுவனம் துவங்கப்பட்டது. இதனால், டில்லி மற்றும் கான்பூரில் பணியாற்றி வந்த கலாம், ஏ.டி.ஈ., நிறுவனத்திற்கு பணிமாறுதல் பெற்று பெங்களூரு வந்தார். பெங்களூரில் இருந்த நாட்களில் பணிகளைத் தவிர மற்ற நேரங்களில் பூங்காக்கள், வணிக வளாகங்களை சுற்றிப் பார்த்துள்ளதாக 'அக்னி சிறகுகள்' புத்தகத்தில் கலாம் குறிப்பிட்டுள்ளார். மிதவை ஊர்தி பெங்களூரில் கலாமின் துவக்கக் கால ஆராய்ச்சி எது தெரியுமா? நிலத்திலும் நீரிலும், பனியிலும் செல்லும் 'ஹோவர்கிராப்ட்'. இந்த வாகனத்தில் வளிமண்டலக் காற்றை விட சற்று கூடுதல் அழுத்தத்தில் காற்று கீழ்நோக்கி வீசப்படுவதால், நிலம் அல்லது நீரின் பரப்பிலிருந்து வாகனம் சில சென்டிமீட்டர்கள் மேலெழும்பி மிதக்கும். இதை 'மிதவை ஊர்தி' எனத் தமிழில் அழைக்கலாம். ஊர்தியின் பின்புறத்தில் உள்ள விசிறிகளை இயக்குவதன் மூலம் வாகனத்தை முன்னோக்கியோ, பின்னோக்கியோ இயக்கலாம். ஆகாய விமானத்தை போல மிகச் சிக்கலான தொழில்நுட்பமாக இல்லாமல் இருந்தாலும், இந்தியாவில் அதுவரை உருவாக்கப்பட்டிராத ஹோவர்கிராப்ட் ஒரு தொழில்நுட்ப சவால் தான். நான்கு தொழில்நுட்ப பணியாளர்களுடன் மூன்றாண்டு கால உழைப்பில் 1962ம் ஆண்டு ஹோவர்கிராப்ட்டை கலாம் உருவாக்கினார். இதை இயக்குவதிலும் கைதேர்ந்தவராக உருமாறினார். 550 கிலோ எடையுடன் 4 சென்டிமீட்டர் உயரத்தில் பறந்த அந்த ஹோவர்கிராப்டின் பெயர் 'நந்தி'. திருப்புமுனை ஏ.டி.ஈ., ஆய்வுக்கூடத்தைப் பார்வையிட வருகை தந்தார் பேராசிரியர் எம்.ஜி.கே.மேனன். இவர் பின்னாளில், டி.ஆர்.டி.ஓ., தலைவராகவும், பின் இந்திய அறிவியல் தொழில்நுட்பத்துறையின் இணை அமைச்சராகவும் இருந்தவர். கலாமின் நந்தியால் கவரப்பட்ட மேனன், இன்கோஸ்பார் (Indian Committee for Space Research - INCOSPAR) நிறுவனத்தில் ராக்கெட் பொறியாளர் பணிக்கு நேர்முகத்தேர்வு வாய்ப்பை கலாமுக்கு வழங்கினார். விக்ரம் சாராபாய் தலைமையில் நடந்த நேர்முகத்தேர்வில் வெற்றி பெற்றார் கலாம். இன்கோஸ்பார் தான் பின்னாளில், 'இஸ்ரோ' என பெயர் மாற்றப்பட்டது. விமானத்தை போல பல ஆயிரம் அடிகள் உயரத்தில் இல்லாமல், தரையிலிருந்து சில சென்டிமீட்டர்கள் மட்டுமே மேலெழும்பும் ஹோவர்கிராப்ட் தானே என, அலட்சியமாக இல்லாமல் சிரத்தையுடன் அப்பணியில் ஈடுபட்டதே பின்னாளில் கலாம், விண்வெளித்துறையில் எஸ்.எல்.வி. - 3 ஏவுகலனை வெற்றிகரமாக வடிவமைத்து, விண்ணில் ஏவி சாதனை புரிய வாய்ப்பாக அமைந்தது. அப்படி ஒரு திருப்புமுனையை கலாம் வாழ்வில் ஏற்படுத்தி நகரம் பெங்களூரு என்பது சிறப்பு. ஏவுகணை திட்டங்கள் கடந்த 1980ல் எஸ்.எல்.வி., - 3 வெற்றிக்குப் பிறகு, பெங்களூரிலுள்ள இஸ்ரோ தலைமையகத்ததில் சிறப்பு ஏவுகலன் பணிகளுக்கான இயக்குநராக இரண்டு ஆண்டுகள் பணியாற்றினார் கலாம். அந்த காலகட்டத்தில் தான் தனது தாய் நிறுவனமான டி.ஆர்.டி.ஓ., நிறுவனத்தில் ஏவுகணைகளை (Missiles) உருவாக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. ஏவுகலன் (Launch Vehicle) ஆராய்ச்சியிலிருந்த கலாம், ஏவுகணை ஆராய்ச்சிக்கு திரும்பினார். டி.ஆர்.டி.ஓ., நிறுவனத்தில் அக்னி உள்ளிட்ட ஏவுகணைத் திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்தி, 'ஏவுகணை நாயகன்' என்று பிற்காலத்தில் அறியப்பட்ட கலாமின் வாழ்வில் நிகழ்ந்த முக்கியத் திருப்புமுனை இது, எனலாம். இதுவும் பெங்களூரில் நிகழ்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இல்லம் கலாமின் பூர்வீக இல்லம் ராமேஸ்வரத்தில் உள்ளது. கலாம் வாங்கிய வீடு, பெங்களூரில் இருக்கிறது. மத்திய அரசு பணியாளர்களுக்கான அடுக்குமாடி குடியிருப்பு 'கேந்திரிய விஹார்' பெங்களூரு எலஹங்காவில் உள்ளது. இதில் தான் ஒரு குடியிருப்பை கலாம் வாங்கினார். அப்துல் கலாமின் நெருங்கிய குடும்ப உறவுமுறையை சார்ந்த உறுப்பினர்கள் தற்போது, இந்த வீட்டில் வசிக்கின்றனர். டி.ஆர்.டி.ஓ., தலைவர் பதவியில் இருந்து ஓய்வு பெற்றதும் பெங்களூரு இந்திய அறிவியல் நிறுவனத்தில் கல்விப்பணியில் ஈடுபட்டபடி பெங்களூருரிலேயே தங்க விரும்பினார் கலாம். சில காரணங்களால் கல்விப் பணிவாய்ப்பு கைவரவில்லை. சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் வாய்ப்பு கிடைத்தது. அண்ணா பல்கலைக் கழகத்தில் இருந்த நாட்களில் தான் ஜனாதிபதி பணிக்கான வாய்ப்பு அவரைத் தேடி வந்தது. ஜனாதிபதி பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பின், பெங்களூரு இல்லத்தில் தங்கியிருக்க விரும்பிய கலாமின் எண்ணவோட்டங்களை அவரது நெருங்கிய சக விஞ்ஞானி ஒய்.எஸ்.ராஜன், தன் 'அப்துல் கலாம் நினைவுகளுக்கு மரணமில்லை' என்ற நுாலில் பதிவு செய்துள்ளார். இப்படி அரை நுாற்றாண்டுக்கும் மேலான நீண்ட நெடிய தொடர்பு பெங்களூருக்கும், அப்துல்கலாமுக்கும் உண்டு.
தமிழில் 13 புத்தகங்கள் எழுதியவர்
இந்திய போர் விமான இன்ஜின் ஆராய்ச்சியின் திட்ட மேலாளரான டாக்டர் வி.டில்லிபாபு, வடசென்னையைச் சேர்ந்தவர். திருச்சி, தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் உற்பத்திப் பொறியியலில் 'முனைவர்' பட்டம் பெற்ற இவர் தமிழ் இலக்கியத்திலும் முதுகலைப்பட்டம் பெற்றார். மாணவர்கள் இளைஞர்களை மையப்படுத்தி இயங்கி வரும் இவர், தன் ஆராய்ச்சி பணிகளுக்கிடையே அறிவியில் தொழில்நுட்பம் கவிதைகள் என 13 புத்தகங்களை தமிழில் எழுதி இருக்கிறார். 'கலாம்-சபா' என்ற இளையோர் நுாலகம் வழிகாட்டி மையத்தை சென்னையில் தன் இல்லத்தில் அமைத்திருக்கிறார். மின்னஞ்சல் முகவரி: dilli.gmail.com - வி.டில்லிபாபு, ராணுவ விஞ்ஞானி