''பிரதமர் மோடியை மகள் வரவேற்றதற்காக, நாகை போலீஸ்காரர் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பது அராஜகத்தின் உச்சம்,'' என காட்டமாக கூறியுள்ளார் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை.நாகை மாவட்டம், வடக்கு பொய்கைநல்லுாரைச் சேர்ந்தவர் விஜயசேகரன். வேட்டைக்காரனிருப்பு போலீஸ் ஸ்டேஷனில் போலீஸ்காரராக உள்ளார். இவரது மகள் துவாரகா மதிவதனி, இரண்டாம் வகுப்பு படிக்கிறார்.கடந்த ஆண்டு நவ., 30ல் வடக்கு பொய்கைநல்லுார், கோரக்கர் சித்தர் கோவிலுக்கு வந்த பா.ஜ மாநில தலைவர்அண்ணாமலையிடம், 'நம்ம மோடி தாத்தாகிட்ட சொல்லி, நாகையில் நவோதயா வித்யாலயா பள்ளிக்கூடம் கட்டி தர சொல்லுங்க மாமா' என, தன் கையால் எழுதிய அட்டையை வழங்கினார். அதன் தொடர்ச்சியாக, இந்தாண்டு ஜனவரி 2ல் திருச்சியில் நடந்த பாரதிதாசன் பல்கலைக்கழக 38வது பட்டமளிப்பு விழாவுக்கு பிரதமர் மோடி வந்தபோது, அவரை வரவேற்க அப்பாவுடன் சென்றார், துவாரகா மதிவதனி.'அன்புள்ள மோடி தாத்தா. நான் ஹிந்தி கத்துக்கணும், எங்க ஊர் நாகப்பட்டினம். அரசு நடத்தும் பள்ளிக்கூடத்தில் ஹிந்தி படிக்க வசதி இல்லை. பள்ளிக்கூடம் கட்ட என் அப்பாகிட்ட சொல்லி இடம் தர ஏற்பாடு செய்றேன். நீங்க பள்ளிக்கூடம் கட்டி தாங்க. அதுல நாங்களும் ஹிந்தி கத்துக்கணும்' என்ற வாசகம் எழுதிய அட்டையை காட்டி பிரதமரை வரவேற்றார்.இந்த இரு நிகழ்வுகளாலும், நாகப்பட்டினம் மாவட்ட தி.மு.க.,வினர் போலீஸ்காரர் விஜயசேகரன் மீது கடும் கோபத்தில் இருந்தனர். இந்நிலையில், கடந்த 3ல் நாகை வந்த பா.ஜ., மாநில பொதுச்செயலர் கருப்பு முருகானந்தத்தை விஜயசேகரன் சந்தித்துள்ளார். இதையடுத்து, அவரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என, மாவட்ட தி.மு.க., பிரமுகர்கள் நாகை மாவட்ட எஸ்.பி., அருண் கபிலனுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்தனர். இதனால், அவரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டிருக்கிறார் எஸ்.பி., இது போலீஸார் மத்தியில் பெரும் புகைச்சலை ஏற்படுத்தி இருக்கிறது.இந்நிலையில், நேற்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நாகை வந்த தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலையிடம், விஜயசேகரன் சஸ்பெண்ட் குறித்து எடுத்துச் சொல்லப்பட்டது.இது குறித்து அண்ணாமலை கூறுகையில், ''ஹிந்தி படிப்பதற்காக நவோதயா பள்ளிக் கூடம் கட்டிக் கொடுங்கள்' என கேட்டது தவறா? தி.மு.க., எவ்வளவு மோசமாக அரசியல் செய்கிறது என்பதற்கெல்லாம் நாகை போலீஸ்காரர் சஸ்பெண்ட் செயப்பட்ட சம்வமும் ஒரு உதாரணம். இது கண்டிக்கத்தக்கது. ''போலீசார் மட்டுமல்ல; தமிழகத்தின் எல்லா தரப்பு மக்களையும் பல வழிகளிலும் பழிவாங்கிக் கொண்டிருக்கிறது தி.மு.க., அரசு,'' என்றார்.- நமது நிருபர் -